தூது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மார்., 2011

பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச்-15) இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

பாலைவனத் தூது வலைப்பூ இன்று இரவு முதல் தூது ஆன்லைன்.காம் என்ற இணையதளமாக செயல்படத் துவங்கும்.

ஆகவே பாலைவனத் தூதின் நியூஸ் லெட்டரை மின்னஞ்சல் மூலம் பெற்றவர்கள், தூது ஆன்லைன்.காம்-ன் நியூஸ் லெட்டரை பெற http://www.thoothuonline.com/ தளத்திற்குச் சென்று Subscribe to Our News Feed என்பதை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

தூது ஆன்லைன்.காம் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி editor@thoothuonline.com

தூது குடும்பம்
read more...

14 மார்., 2011

"தூதுஆன்லைன்.காம்" உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ், வருகிற மார்ச் 15ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

அத்தோடு பாலைவனத்தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

இதுவரை பாலைவனத்தூது வலைப்பூவில் 7,000-த்திற்கும் மேற்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன!. ஏப்ரல் 2009 முதல் தற்போது வரை, சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றோம்.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

பாலைவனத் தூதுக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் அருமைச் சகோதரர்களின் இம்மை, மறுமை வெற்றிக்காக வல்ல இறைவனிடம் இதயங்கனிந்து இறைஞ்சுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தூது குடும்பம்

read more...

9 பிப்., 2011

பாலைவனத் தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை - 'நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்'

நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்
அறிமுகம்
ஊடகம் என்பதை தரவுகள், தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

இது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் சாசனம், புத்தகம், பத்திரிகை, சஞ்சிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலே ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் (existence) உயிர்ப்பையும் (dynamism) நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப் (identity) பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் போலிப் புனைவுகளையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், "ஊடகப் போர்" (media war) என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

இஸ்லாம், முஸ்லிம் என்ற இரண்டு சொல்லாடல்கள் (discourse) குறித்த பல்வேறு புனைவுகள், சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்ட அடிப்படையில் உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேலைத்தேய ஊடகங்களும் கீழைத்தேய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஸியோனிஸ, கிறிஸ்தவ, ஹிந்துத்துவ சக்திகள் தமது இஸ்லாமிய எதிர்ப்பை, முஸ்லிம் எதிர்ப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு ஊடகத்தையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.

மேலைத்தேய உலகைப் பொறுத்தவரையில் முதலாவது செய்திப் பத்திரிகை 1605ம் ஆண்டிலும், முதலாவது வானொலிச் சேவை 1920ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டதாக விக்கிபீடியா பதிவு செய்துள்ளது. எனின், முஸ்லிம் உலகின் நிலையென்ன? உலகின் எந்த மூலையில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டுக்கோ முஸ்லிம்களுக்கோ எத்தகைய கொடூரமான அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நமக்கென்று ஓர் ஊடகம் இருக்கவில்லை. பி.பி.சி. (B.B.C.), சி.என்.என். (C.N.N.), ஏ.பி. (A.P.), ராய்ட்டர்ஸ் (Reuters) முதலான பக்கச் சார்பு ஊடகங்களினால் கட்டமைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளே உலகமெங்கும் பரவலாகச் சென்றடைந்தன. உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக சொல்லொணாத வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும் கேட்பார் பார்ப்பாரற்ற அனாதைச் சமூகமாக, அகதிச் சமூகமாக நம்முடைய சமுதாயம் நாதியற்றுத் தவிக்கும் நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், பல்வேறுபட்ட சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் Al Jazeera (அல்ஜஸீரா) அரபுத் தொலைக்காட்சிச் சேவை 1996ம் ஆண்டிலும் ஆங்கில சேவை 2006ம் ஆண்டிலும், பிரஸ் தொலைக்காட்சி (Press TV) சேவை 2007ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று விதந்துரைக்கத்தக்க முஸ்லிம் ஊடகங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழ்நாட்டில் 13.7 சதவீதமும், இலங்கையில் 7.6 சதவீதமும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கென்று தனியான முழுநேர செய்தி ஊடகமொன்றின் தேவை பரவலாக உணரப்பட்டு வருவதையும் அதற்கான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். என்றபோதிலும் ஒருங்கிணைக்கப்பட்டதும், பரவலாக மக்களைச் சென்றடையக்கூடிய சக்திவாய்ந்ததுமான தமிழ் முஸ்லிம் ஊடகமொன்றை உருவாக்கி வளர்க்கும் நம்முடைய நெடுங்காலக் கனவு இன்னும் முழுமை பெறவில்லை என்றே கூற வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் முதற்கட்ட முயற்சியென்ற வகையில் "நமக்கென்று ஒரு நாளிதழ்" குறித்து சிந்திப்பதும் திட்டமிட்டு செயற்படுவதும் அதனை நோக்கி இடையறாது பாடுபடுவதும் தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நமது இன்றியமையாத சமூகப் பணியாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த நற்கூலிகள் உள்ளன. அந்த அடிப்படையில், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்களை முறியடிப்பதற்குரிய மிகப் பிரதான ஆயுதமான ஊடகமொன்றைக் கட்டமைத்து அதனை ஸ்திரமடையச் செய்வதும் ஜிஹாதின் ஒரு பகுதியே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில்,

"அவர்(நிராகரிப்பாளர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது." (8:60)

என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க எல்லா வகையான போர் சாதனங்களையும் சித்தப்படுத்தி தயாராக வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தத் திருமறை வசனம் இன்றைய ஊடகப் போருக்கும் பொருந்தி வரும் என்பதில் ஐயமில்லை. இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு மலையாளத்தில் தேஜஸ், மாத்யமம் எனும் நாளிதழ்களும் தமிழில் மணிச்சுடர் எனும் நாளிதழும் முக்கியமானவை. அவ்வாறே இலங்கையைப் பொறுத்தவரையில், நவமணி வாரமிருமுறை இதழாக வெளிவந்து அண்மைக்காலமாக வாரமொருமுறை மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவை தவிர மறுமலர்ச்சி வாரப் பத்திரிகை, எங்கள் தேசம் மாதமிருமுறைப் பத்திரிகை என்பனவும் குறிப்பிடத்தக்கவையே.

1. பிரச்சினைகளும் சவால்களும்
எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண வேண்டுமானால், அது தொடர்பான பிரச்சினைகள், சவால்களை இனங்காண்பதோடு, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவதும், தக்க அணுகுமுறைகளைக் கையாண்டு செயற்படுத்துவதும் முக்கியமானதாகும். அந்த வகையில், நமக்கான ஊடக உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் குறித்து நோக்குவது பொருத்தமானதே!

1.1 நமக்கான ஊடகம் எனும் எண்ணக்கருவின் தத்துவார்த்தப் பின்புலத்தை (The Background of Conceptual Criteria) வரையறுப்பதிலுள்ள சிக்கல்கள்

நம்மவர் மத்தியில் நமக்கான ஓர் ஊடகம் இருக்கவேண்டியதன் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வு தோன்றியிருப்பது ஓர் ஆரோக்கியமான அம்சமே. எனினும், அதனைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகள் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவை இடையிலேயே நின்று போயின. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த செய்தி ஊடகம் என்றளவில் முன்னோடி முயற்சியாக ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சி இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றது. இதற்கான மிகப் பிரதானமான காரணங்களாக நாம் பல்வேறு அம்சங்களை அடையாளப்படுத்தலாம். என்றபோதிலும், இவ்விடயம் தொடர்பாக நாம் மிக முக்கியமானதோர் அம்சம் குறித்து நமது கவனத்தைத் திருப்புவது இன்றியமையாததாகின்றது. அதாவது, நமக்கான ஊடகம் ஒன்றை வரையறுப்பது குறித்து சில அடிப்படையான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. அவை வருமாறு:

அ) நமக்கான ஓர் ஊடகம் என்பதன் உட்கருத்து என்ன?

ஆ) அந்த ஊடகத்தின் பேசுபொருள் வெறுமனே முஸ்லிம்களின் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் குவிமையப் (focus)படுத்தியதா?

இ) அதன் இலக்கு வாசகர்கள் யாவர்?

நமக்கான ஊடகம் எனும்போது அது, நம்முடைய பிரச்சினைகளை நாம் பேசுவதற்கானதா அல்லது நம்மிடமிருந்து மனிதகுல மேம்பாடு கருதி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதாகவும், நம்முடைய சமுதாயம் பற்றிய விசாலமான பார்வையை சகோதர சமுதாயத்தவரிடம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையத்தக்க ஒரு பொது ஊடகமா என்பதை வரையறுப்பதில் முதலாவது கேள்வி முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இதற்கான விடையை வரையறுக்கும் போது ஏனைய இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் கிடைத்து விடுகின்றது.

ஏனெனில், முதலாவது வகைமையைப் (category) பொறுத்தவரையில், இன்று நம்மிடையே உள்ள அனேகமான மாத, வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவ்வகையைச் சேர்ந்தவையே. இவை முஸ்லிம் உலகின் பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோடு, சன்மார்க்கப் போதனைகள், உள்ளக சமூக-கலாசார சீராக்கம் (inter socio-cultural reform) பற்றிய விழிப்புணர்வு ஊட்டுவதாகவுமே அமைந்துள்ளன. எனவே, தவிர்க்க முடியாதவாறு முஸ்லிம்களே இவற்றின் இலக்கு வாசகர்களாக உள்ளனர்.

இந்நிலையில், நம்முடைய பிரச்சினைகளை நமக்குள் நாம் பேசிக்கொள்வது, விசனப்படுவது என்ற நிலையிலிருந்து மாறி, அடுத்தகட்ட நகர்வாக, நம்முடைய பிரச்சினைகளை மற்றவர்கள் மத்தியிலும் கொண்டு சென்று, பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் வெற்றிகரமாகத் திருப்புவது, தாக்குதிறன் கூடியதாக (effectively) நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுப்பது, சமூக-தேசிய மேம்பாடு தொடர்பான நம்முடைய காத்திரமான பங்களிப்பை வழங்குவது முதலான அம்சங்களை உள்வாங்கியதாக நம்முடைய ஊடகம் அமைவதே மிகப் பொருத்தமானது. எனவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காகவும், நமக்கெதிரான சவால்களை முறியடிப்பதற்காகவும் மட்டுமின்றி, நீதியை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைச் சமுதாயத்துக்குரிய (உம்மத்தன் வஸத்) பணியைத் திறம்படச் செய்வதற்காகவும் அத்தகைய ஒரு பொது ஊடகத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாக உள்ளது.

2. ஏனைய சவால்கள்

2.1 நிதிப் பிரச்சினை (Financial Problem)
ஒருசில தன்னார்வமுள்ளோரால் அல்லது துடிப்புமிக்கதோர் இளைஞர் குழுவினரால் சமுதாயத்துக்காகப் பணியாற்றும் தீராத தாகத்தோடு ஆரம்பிக்கப்படும் இதழியல் முயற்சிகளைப் பொறுத்தளவில் அவை பாரியளவு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படுவதில்லை. பத்திரிகையின் விற்பனை சூடு பிடிக்கும் வரையும் பிரசுரத்துக்காகச் செலவிட்ட பணத்தை விற்பனை வருமானம் மூலம் மீளப் பெற முடியாத நிலையிலும் தளராது நட்டத்துடனேனும் தொடர்ச்சியாகப் பத்திரிகையை வெளியிடுமளவுக்குத் தேவையான நிதி இன்மை அனேகமான பத்திரிகைகள் இடையிலேயே நின்று போவதற்கான பிரதான காரணமாக உள்ளது. புதிதாக அறிமுகமான பத்திரிகை என்ற நிலையில் போதிய விளம்பரங்கள் கிடைக்காமை, விற்பனை முகவர்களிடமிருந்து முறையாகப் பணம் வசூலிப்பதிலுள்ள இடர்பாடுகள், நம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இன்மையால் விற்பனை வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலைமை என்பன இந்த நிதிப் பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் மிகையில்லை. இத்தனையையும் தாண்டி குறித்த பத்திரிகையை நடப்பு நட்டத்தைத் தாங்கிக்கொண்டே தொடர்ச்சியாக வெளியிடக்கூடிய நிலை வெகு அரிதானதாகும்.

2.2 வளப் பற்றாக்குறை (Resource Constraint)
இது பன்முகப்பட்டதாகும். அதாவது, வளம் எனும்போது அதற்குள் தொழிநுட்பம் மற்றும் உடைமைகள் சார்ந்தவை, மனித அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தவை என்று பல வகைப்பட்ட வளங்களிலுள்ள பற்றாக்குறை நிலைமைகளும் உள்ளடங்குகின்றன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள், பத்திரிகையின் வடிவமைப்பு முதலான தொழினுட்பம் சார்ந்த துறைசார் நிபுணர்கள், அச்சக வசதி, போதிய ஊழியர் படை, பரவலான விநியோகத்துக்குத் தேவையான வாகன வசதி, நாடெங்கிலும் நேர்மையான முகவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் என்று பல்வேறுபட்ட அடிப்படை அம்சங்கள் இந்த வளப் பற்றாக்குறை என்பதோடு தொடர்பு படுகின்றன. இவை அனைத்தும் சரிவர அமைதல் என்பது மிகச் சிக்கலான ஒன்றாகும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

2.3 நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் (Administrative Issues)
நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலிரண்டு பிரச்சினைகளுக்கு சற்றும் முக்கியத்துவம் குறையாத ஓர் அம்சமாக முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகள் திகழ்கின்றன. ஏனைய துறைகளைப் போலவே ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலேயே சரியானதும் நுணுக்கமானதுமான திட்டமிடல் இன்றியமையாததாகும். அந்த வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதெனில், பத்திரிகையின் பிரதான கொள்கையை வரையறுத்தல், இலக்கு வாசகர் வட்டத்தை நிர்ணயித்து அதற்கேற்ப பத்திரிகையை வடிவமைத்தல், பத்திரிகையை இலாபத்தை எதிர்பார்க்காமலும் நட்டத்தை எதிர்கொண்டவாறும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கு எந்தளவு மூலதனம் தேவை, ஊழியர் படை மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைப்பது எப்படி முதலான தீர்மானங்கள் மிகத் துல்லியமாக அமைதல் இன்றியமையாததாகும். இதற்குக் கருத்தொருமித்த நிர்வாகக் குழுவொன்று இருப்பது கட்டாயமானதாகும். அதாவது, மிகச் சிறப்பானதொரு நிர்வாகக் குழு இல்லாத பட்சத்தில் வெற்றிகரமானதொரு பத்திரிகையை வடிவமைத்தல், இருக்கின்ற நிதியை முறையாகக் கையாளுதல், போதியளவு நிதியைப் பெருக்கிக் கொள்ளுதல், விற்பனை சார்ந்த பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுதல் முதலான இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்துவது சாத்தியமற்றதாகும். எனவே, ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது சிறந்த நிர்வாகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.

2.4 முஸ்லிம் மக்களிடம் போதிய வாசிப்புப் பழக்கமின்மை
இந்திய - இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். அதிலும், எத்தனையோ வீண் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை அள்ளியிறைக்கும் நம்மவர்கள் ஒரு சிறு தொகைப் பணத்தை புத்தகமொன்றை, பத்திரிகையொன்றை வாங்குவதற்காகச் செலவழிப்பதை பெரும் சுமையாகக் கருதும் மனப்பாங்கே மேலோங்கியுள்ளது எனலாம். தொலைக்காட்சி, இணையம் என்று இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட சூழ்நிலையில் நாளாந்த, வாராந்த பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் மிக அரிதாகி வருகின்றது. இந்நிலையில், நம்முடைய இலக்கு வாசகர்கள் யார் என்று தீர்மானித்து அதற்கேற்ப பத்திரிகையின் உள்ளடக்கத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜனரஞ்சகமான பத்திரிகைக்குரிய அம்சங்களை இணைத்து சகல தரப்பினரையும் உள்வாங்குவதானது வெற்றி வாய்ந்த ஒரு நாளிதழுக்குரிய அடிப்படையாகத் திகழ்ந்தாலும், மிக இறுக்கமான மனப்போக்குடைய நம்முடைய உலமா பெருமக்களுக்கிடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகள், சர்ச்சைகள், மார்க்கம் சார்ந்த விடயங்களை ஒற்றைத் தன்மையோடு அணுகும் போக்கு என்பன மிகப் பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன எனலாம். உதாரணமாக, ஒரு பக்கக் கட்டுரை மூலம் விளக்கக்கூடிய ஓர் ஆழமான அரசியல் செய்தியை ஒரேயொரு அரசியல் கார்ட்டூன் மூலம் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில், உருவம் வரைவது கூடுமா கூடாதா என்ற சர்ச்சைக்குள்ளேயே தசாப்த காலமாய் அமிழ்ந்து கிடக்கும் அவல நிலை இன்னும் முற்றாக அகன்று விடவில்லை என்பதைக் குறிப்பிடலாம்.

3. சில தீர்வு முன்மொழிவுகள்
நாம் தொடர்ந்து பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றோம். அன்றாடம் எதிர்கொண்டு வருகின்ற சவால்களைப் பற்றி மணிக்கணக்காய் கலந்துரையாடுகின்றோம். நம்முடைய நிலைமை என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதெல்லாம் மிக அவசியம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுதான். என்றாலும், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, அதாவது நாம் இதுவரை இனங்கண்டுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவாறு முழு முனைப்போடு நம்முடைய ஊடக இலக்கினை அடைவதற்கு என்னென்ன தயாரிப்புகளை செய்து வைத்துள்ளோம் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். எனவே இனி நாம் வெற்றிகரமான ஒரு செயற்திட்டத்தை (Project) முன்னெடுப்பதற்கான தீர்வு வழிவகைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானதே!

3.1 நிதியீட்டலும், நிதியைப் பெருக்குதலும்
ஆழமறிந்து காலை வைத்தால் மூழ்கிச் சாகாமல் பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போல, அதிக மூலதனமொன்று தேவைப்படும் இந்த முயற்சியில் இறங்கும் நாம், அவசரப்பட்டு காரியமாற்றாது போதிய நிதியினைச் சேகரித்துக்கொள்வது மிக இன்றியமையாததாகும். இதற்கான முயற்சியில் ஒருசில வருடகாலமேனும் செலவிட்டு உரியளவு நிதியைச் சேகரிப்பதோடு, அதில் கணிசமானதொரு பகுதியை இலாபகரமான தொழிற்துறைகளில் முதலீடு செய்யவோ அல்லது நிரந்தர வருமானம் தரத்தக்க சொத்துக்களாக மாற்றவோ முனையலாம். இதனூடாகக் கையிருப்பில் போதிய நிதிவளத்துடன் நாளிதழ் முயற்சியில் இறங்கலாம். அது மட்டுமன்றி, பல்வேறு தொழிற்துறைகளில் முன்னணியிலுள்ள நம்முடைய வர்த்தகப் பெருமக்களை அணுகி, நம்முடைய பொதுநல நோக்கை விவரிப்பதன் மூலம் முன்கூட்டியே தொடர் விளம்பரங்களைப் பெறுவதற்கான கள வேலைகளில் ஈடுபடலாம். அவ்வாறே, சமூக நோக்குடைய இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரின் உதவியோடு நாட்டின் அனேக பகுதிகளில் தேவையான விற்பனை முகவர்களை ஏற்பாடு செய்துகொள்வதன் மூலமும், உரிய விளம்பரங்கள் பள்ளிவாசல் ஊடான பிரச்சாரம் என்பனவற்றின் மூலமும் தொய்வற்ற முறையில் பத்திரிகை விற்பனை நடைபெறுவதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் இறங்கலாம்.

3.2 வளவாளர்கள் (Resource Persons) உருவாக்கம்
இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இன்று நம்மிடம் மணிச்சுடர் என்றொரு நாளிதழ் வெளிவந்துகொண்டு இருப்பது சற்றே ஆறுதல் தரும் விடயமே. எனின், இதனை இன்னும் சற்று ஜனரஞ்சகப்படுத்தி, ஒரு சக்தி வாய்ந்த செய்தி ஊடகமாக மெருகேற்றுவதற்கேற்ற முறையில் உரியவர்களிடம் கலந்தாலோசித்து உரிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் முனையலாம். அவ்வாறே, நமக்கான ஓர் அச்சுக்கூடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபடலாம். ஊடக யுத்தத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நடுநிலைச் சமுதாயம் அல்லாஹ்வின் பெயரால் இந்த உலகில் நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நிலைநிறுத்தும் மகத்தான இப்பணியை நிறைவேற்றுமுகமாக ஸகாத் பணத்தில் ஃபீஸபீலில்லாஹ் என்ற அல்லாஹ்வின் பாதையில் முயற்சிப்போருக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

அது மட்டுமன்றி, நாளைய தலைமுறையினரில் நாம் கனவு காணும் ஒருங்கிணைந்ததும் சக்திவாய்ந்ததுமான தமிழ்-முஸ்லிம் நாளிதழுக்கான வளவாளர்களை உருவாக்கும் திட்டவரைபொன்றை ஏற்படுத்தலாம். இதை நிறைவேற்றுவது எப்படி?

நமக்கென்று ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நம்முடைய நிர்வாகக் குழுவினர் தாம் திரட்டுகின்ற நிதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பின்வரும் நடவடிக்கைகளின் பொருட்டும் ஒதுக்கலாம்:

அ) இதழியல் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்
இதழியல் (Journalism) துறையில் தமிழ் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுதல் இன்றியமையாததாகும். எனவே, இதன் பொருட்டு இத்துறை சார்ந்த நிபுணர்களை உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ தருவித்து ஆர்வமும் திறமையும் உள்ள நம் இளைஞர் யுவதியருக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தலாம். இம்முயற்சியில் சமீப காலமாக 'மனிதநீதிப் பாசறை'யினர் ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய இம்முயற்சியின்போது தகுதி வாய்ந்த பிற சமயம் சார்ந்தவர்களின் உதவியையும் அறிவுத் திறனையும் மூலவளமாகப் (resource) பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. உதாரணமாக, ஹிந்து சமயத்தவரான ஒரு பேராசிரியர் மாஸ் மீடியா துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று இனம் கண்டால், அவரை அழைத்து வந்து, அவருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்து நம்முடைய கருத்தரங்கில் உரையாற்றவோ பயிற்சியளிக்கவோ சந்தர்ப்பம் வழங்கத் தயங்கவே தேவையில்லை. யார் இடித்தாலும் நெல் அரிசியானால் சரிதான் என்ற நாட்டார் பழமொழிக்கேற்ப, எங்கே வளம் இருந்தாலும் நம்முடைய தூய நோக்கத்துக்காக அதனை உரிய முறையில் பெற்றுப் பயன்படுத்தத் தவறக் கூடாது.

).இதழியல்,வெப்டிசைனிங் முதலான துறைகளில் உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்குவித்தலும் பயிற்றுவித்தலும்

முதலில் இதழியல் முதலான துறைகளில் உயர்கல்வி வாய்ப்புள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்தல் இன்றியமையாததாகும். இதில், குறித்த பல்கலைக்கழகத்தின் தரம், பாடநெறிக்கான கால எல்லை, செலவு விபரம் முதலான அனைத்தும் அடங்கும்.

அவ்வாறே, ப்ளஸ் டூ படிப்பில் மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்ற நமது மாணவர்களில் மேற்படி துறைகளில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களை கேள்விக்கொத்து, நேர்முகப் பரீட்சை என்பன மூலம் 20-100 பேர் வரை தெரிவு செய்து, அவர்களின் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் (scholarship) வழங்கும் திட்டமொன்றை அமுல் நடாத்தலாம். இதற்கு முன், குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தனித் தனியே சந்தித்து முழுமையான விளக்கமளிப்பதோடு, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் 2-4 வருட காலத்துக்கு குறித்த சம்பளத்தில் நம்முடைய பத்திரிகைக்காகப் பணியாற்றுவது கட்டாயமானது, தவறும் பட்சத்தில் புலமைப் பரிசிலாகப் பெற்ற மொத்தத் தொகையோடு கால விரயத்துக்கான நட்ட ஈட்டுத்தொகையையும் சேர்த்து திருப்பிச் செலுத்துதல் வேண்டும் என்ற சட்ட ரீதியான ஒப்பந்தத்துக்கு அவர்களை உடன்படச் செய்தல் வேண்டும். நமது பத்திரிகைக்காக அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே ஒருவரின் கீழ் பத்து தன்னார்வத் தொண்டர்களைக் குறித்த துறையில் பயிற்றுவிக்கும் பொறுப்பும் வழங்கப்படுதல் வேண்டும். இந்தச் சங்கிலித் தொடர் மூலம் நாம் நம்முடைய நாளிதழுக்கான தகுதியும் நிபுணத்துவமும் வாய்ந்த வளவாளர்களை உருவாக்கவும், இன்று இருப்பதை விட நாளை நம்முடைய நாளிதழ் மேலும் சக்தி வாய்ந்ததாக, மெருகு கூடியதாக, பரவலானதாக வளரவும் வழியமைக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வாறே, இன்றைய நாளிதழை நடத்தும் நாம் நாளை கண் மூடிவிட்டால் நாம் தொடக்கி வைத்த அந்த முயற்சி மண் மூடிப் போகாமல் முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பரம்பரையையும் உருவாக்கியவர்களாவோம். இதன் மூலம் அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மைக்குப் பாத்தியதை பெற்றவர்களாகவும் நாம் மாறிவிடுகின்றோம் அல்லவா?

இ) முஸ்லிம் ஊடகவியலாளரை ஒருங்கிணைத்தல்
ஊடகத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையில் உள்ள "முஸ்லிம் மீடியா ஃபோரம்" (Muslim Media Forum) இத்தகைய முயற்சியின் விளைவால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பினூடே ஊடகவியலாளரின் நலன்கள், உரிமைகள் பேணப்படுவது, அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பன தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பரஸ்பரம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
முடிவுரை
அற்பமான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடைவிடாத சர்ச்சைகளுக்குள்ளேயே அமிழ்ந்து போய் நூற்றாண்டு கால பின்னடைவுக்குள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான நிலையில் ஆழ்ந்திருக்கும், தனக்குரிய சுய அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் நம்முடைய சமுதாயம் வீறு கொண்டு எழுந்து மாண்டு போன சரித்திரக் கீர்த்தியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு முதற்படியாக நமக்கென்று ஒரு சக்தி வாய்ந்த நாளிதழ் என்று தொடங்கி, வானொலி, தொலைக்காட்சி என்று படிப்படியாக முன்னேற வேண்டியுள்ளது.

செயற்கைக் கோள் எனும் செட்டலைட் வரை விண்ணோக்கி உயர்ந்து நம்முடைய முஸ்லிம் நாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்க்கும் நவீன தொழினுட்பத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள், இஸ்லாத்தின் எதிரிகள். ஆனால், உலகுக்கே வாழும் வழிமுறை வகுத்துக் கொடுத்த ஓர் ஒப்பற்ற மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாமோ இன்னும் கார்ட்டூன் வரைவது கூடுமா, கூடாதா என்றும், புகைப்படம் எடுப்பது ஹலாலா, ஹராமா என்றும் வாத விவாதங்களில் மூழ்கிக் கிடக்கின்றோம். இத்தகைய கடும் இறுக்கமான ஒற்றைத் தன்மையோடு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த நம்முடைய இந்தத் தலைமுறை உலமா பெருமக்களை வெறுமனே பதிலுக்கு விமர்சித்துக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, புதுயுகம் படைக்கும் உத்வேகத்தோடும், அல்லாஹ்வின் மார்க்கத்தை அகிலத்தில் மேலோங்கச் செய்வதற்குரிய எல்லா வியூகங்களையும் அமைத்துப் போராடத்தக்க தணியாத தாகத்தோடும் விவேகமும் தியாக சிந்தையும் கடும் உழைப்பும் தளராத மனோதிடமும் கொண்ட நவயுக முஸ்லிம் இளைஞர் அணியொன்று முன்வரவேண்டும்.

அவர்கள் இன்று செய்கின்ற, செய்யப் போகின்ற இடையறாத இப்பணியின் பயனாய் நாளைய நம் சமுதாயமாவது புதிய விடியல் காணட்டும்! காண வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிறைவு செய்கின்றேன். அருளாளன் அல்லாஹ் நம் அனைவரின் எண்ணங்களையும் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!

உசாத்துணைகள்:
Hugh Miles, (2005) Al-Jezeera: How Arab TV news Challenged the World, Brettenham House: London.
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://dharulathar.com/
http://tamilnirubar.org/
http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=Fjpiu&B2=NjLf

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,

லறீனா அப்துல் ஹக்.
read more...

7 பிப்., 2011

பாலைவனத் தூ​து நடத்திய கட்டுரைப் போட்டி பரிசுகள் அறிவிப்பு!

பாலைவனத் தூது அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தது.
கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் வருமாறு:
*இந்தியா: தீவிரவாதத் தாக்குதல்களும் திரைமறைவுச் சதிகளும்
*இணையத்தில் முஸ்லிம்கள்: சாதனையா? வேதனையா?
*நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்னைகளும் சவால்களும்

வாசகர்கள் அத்தனை தலைப்புகளிலும் பரவலாகக் கட்டுரைகளை அனுப்பித் தந்தார்கள். பல கண்ணோட்டங்களில் கட்டுரைகள் வந்திருந்தன. அல்ஹம்துலில்லாஹ்.

எமது நடுவர்கள் கீழ்க்கண்ட நபர்கள் எழுதிய கட்டுரைகளைப் பரிசுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள்:
முதல் பரிசு (மூன்று கிராம் தங்க நாணயம்):
ஜனாபா லறீனா அப்துல் ஹக்
தம்மாம், சவூதி அரேபியா

இரண்டாம் பரிசு (இரண்டு கிராம் தங்க நாணயம்):
ஜனாப் ஆசிஃப் இப்றாஹீம்
திருச்சி

மூன்றாம் பரிசு (ஒரு கிராம் தங்க நாணயம் மூவருக்கு):
1. ஜனாப் முத்தஸிர் அஹமது
பரங்கிப்பேட்டை
2. ஜனாப் முஹம்மது ஹாலித்
துபை
3. ஜனாப் பக்கீர் முகைதீன்
கல்லிடைக்குறிச்சி

பரிசுகள் துபாயில் நடைபெறும் ஒரு விழாவில் வழங்கப்படும். விழாவுக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் பரிசுகள் அனுப்பித் தரப்படும்.

எமது அழைப்பினை ஏற்று கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட அத்துணை வாசகர் பெருமக்களுக்கும் பாலைவனத்தூது ஆசிரியர் குழு தனது நன்றியை உரித்தாக்குகிறது.

அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும், உங்களின் பேராதரவாலும் பாலைவனத்தூது வளர்ச்சியடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு சாட்சி.

ஒரு மகிழ்ச்சியான செய்தி!
எமது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பாலைவனத்தூது 'வலைப்பூ' என்ற நிலையிலிருந்து 'தூதுஆன்லைன்' என்ற பெயரில் 'இணையதளமாக' மாறுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

எமது இணையதள முகவரி: http://www.thoothuonline.com/ அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்ஷா அல்லாஹ் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் தேதி அறிவிக்கப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கின்றோம்.

மீடியா உலகில் எங்களின் இந்தச் சிறு முயற்சியை ஏற்று, வல்ல அல்லாஹ் அதற்கான நற்கூலியை நிரப்பமாக வழங்கிடுவதற்கு எங்களுக்காக துஆச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-ஆசிரியர் குழு
read more...

1 ஜன., 2011

மின்னி மறைந்த 365 நாட்கள்

அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த நாட்களை அளித்துவிட்டு 2010 ஆம் ஆண்டு விடைப்பெற்றது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் துபாயில் வைத்து மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டது முதல் வெனிசுலா நாட்டின் பிரதிநிதியின் விசாவை அமெரிக்கா ரத்துச் செய்தது வரையிலான சிறியதும், பெரியதுமான என பல சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறின.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச்சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்யப்பட்டதும், மெக்ஸிக்கோ வளைகுடாவில் பிரிட்டீஷ் எண்ணைக் கம்பெனியின் எண்ணைக் கிணறு வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்காவின் அதீத ரகசியங்கள் விக்கிலீக்ஸினால் அம்பலமானதும் கடந்த ஆண்டில் நமது கவனத்தை ஈர்த்த சம்பவங்களாகும்.

கால்பந்து வீரர்கள் மண்டேலாவின் நாட்டில் பந்தை உருட்டியபொழுது உலகம் ஆப்பிரிக்காவை உற்றுநோக்கியது நேற்று நடந்ததுபோல் உள்ளது.

ஹைத்தியிலும், பாகிஸ்தானிலும், சீனாவிலும், தாய்லாந்திலும் தற்பொழுது ஆஸ்திரேலியாவிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் கண்டோம். இந்த ஆண்டின் பிந்தைய நாட்கள் நமக்கு மறக்கமுடியாத நிகழ்வுகளை அளித்துச் சென்றது.

அவற்றில் சில:
உலகம் சிரித்தது சிலியுடன்:
அதிர்ச்சியுடன் கேட்ட செய்திக்கு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. பூகம்பத்தால் தகர்ந்துபோன சிலியின் சான்ஜோஸ் சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்பதனை 17 நாட்கள் கழித்து உலகம் அறிந்தபொழுது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. வெளி உலகினோடு தொடர்பு கொள்ளவியலாமல் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கும், மனோநிலை பாதிக்கப்படாமலிருக்கவும் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். 69 தினங்களுக்கு பிறகு 33 தொழிலாளர்களும் சுரங்கத்தை விட்டு வெளியேறும் வரை உலகம் மனமுருகி பிரார்த்தித்தது சிலியுடன்.

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தின் மீது விழுந்த அடி
முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்குவிதமான புர்காவை அணியக்கூடாது என ஐரோப்பாவில் வலதுசாரிகள் கச்சைக்கட்டி களமிறங்கிய வருடமாக 2010 அமைந்தது.

பிரான்சிலும், ஸ்பெயினில் சில நகரங்களிலும் பெண்கள் புர்காவை அணிவது தடைச்செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரை நிர்வாணத்துடன் பெண்கள் சுற்றித் திரிவதை சுதந்திரம் எனக்கூறும் மேற்கத்திய உலகம் தங்களது முகத்தை தாமாகவே மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு தனது இரட்டை முகத்தை பகிரங்கப்படுத்தியது.

புர்காவை தடைச் செய்ததற்கு ஆட்சியாளர்கள் கூறிய காரணம் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என பதிலளித்தனர்.

இத்தாலியும், நெதர்லாந்தும் பிரான்சின் முட்டாள்தனத்தை பின்பற்றியது. ஒடுக்கப்பட்ட ரோம இனத்தவரை நாடு கடத்தப் போவதாக பிரான்சு மிரட்டியது.

பார்ஸல் குண்டுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக மாறியது. ஆனால், அதன் பெயரால் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை.

தோற்றுப்போன மேற்காசிய அமைதி முயற்சி
அமெரிக்காவின் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவங்கியது.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தது எவ்வித பலனையும் தரவில்லை.

10 மாத மொரட்டோரியத்திற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற நிர்மாணத்தை துவக்கியபொழுது பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. அமைதியை விரும்பாத இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஏற்கனவே ஹமாஸ் முன்னறிவிப்பு செய்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
அமெரிக்காவின் ஆதரவுடன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் தினந்தோறும் அப்பாவி மக்களுக்கு கொலைக் களமாகும் பாகிஸ்தானை 2010 ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பிரளயம் பிடித்து உலுக்கியது.

செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த பெய்த மழையால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 ஆயிரம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு லட்சம் கால்நடைகள் செத்து மடிந்தன. விவசாயத்துறை முற்றிலும் சீர்குலைந்த பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஐ.நா கோரிக்கை விடுத்தது.

சுனாமி, ஹைத்தி பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு உலக சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு, பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஆக்கிரமிப்பின் மீதிக்கதை
2003 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு பாதியளவு முடிவடைந்த பொழுது மீதமாக அமைந்தது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை. மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பொழுதிலும் எட்டு மாதத்திற்கு பிறகுதான் ஷியா, சுன்னி, குர்து பிரிவினர் கூட்டாக இணைந்து புதிய அரசை உருவாக்கினர்.

91 இடங்களை கைப்பற்றிய நூரி அல் மாலிகி பிரதமரானார். இயாத் அல்லாவியின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. ஷியா அறிஞர் முக்ததா அல் ஸத்ரின் ஆதரவு கிடைத்ததன் மூலம் நூரி அல் மாலிகி ஈராக் அதிபராக மீண்டும் பதவியேற்றார். நவம்பரில் பதவியேற்ற அதிபர் ஜலால் தலபானி மாலிகியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், ஈராக்கில் பாதுகாப்பு மேம்பட்டதாக கூறும் அமெரிக்காவின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கின்றன அந்நாட்டின் வீதிகளில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகள்.

அம்பலமான ரகசியங்கள்
அமெரிக்க தூதரகச் செய்திகளை ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அஸென்ஜே ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் நோக்கியது.

உலகின் ஒவ்வொரு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்கள் வழியாக அந்நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்பதுதான் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் சாராம்சம்.

2006 முதல் விக்கிலீக்ஸின் ரகசிய கண்கள் பல்வேறு நாடுகளின் ரகசியங்களில் நோட்டமிட்டன. பல செய்திகளையும் அவர்கள் வெளியுலகிற்கு அளித்தனர். ஆனால், 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்வதன் வீடியோ காட்சியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டதுடன் விக்கிலீக்ஸ் இணையதளம் உலகின் பார்வையை தன் பக்கம் நோக்கி இழுத்தது.

ஆப்கானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜேவும் அமெரிக்காவினால் குறி வைக்கப்பட்டனர்.

நவம்பரில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசியங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜூலியன் கைதுச் செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.

உஸாமா பின் லேடனுக்கு அடுத்து அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதியாக ஜூலியன் அஸென்ஜே மாறியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கூட்டுப்படுகொலை
காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியில் புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்தது இஸ்ரேல்.

சுய பாதுகாப்பிற்காக சுட்டதாக இஸ்ரேல் தனது அக்கிரம செயலை நியாயப்படுத்தியது. இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் துருக்கி விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் மதிக்கவேயில்லை. இஸ்ரேலின் கொடூர ராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தன.

ஹைத்தி துயரத்தின் பூமி
ஜனவரி 12 ஆம் தேதி ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸில் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பலிவாங்கப்பட்ட ஹைத்தியில் பின்னர் நடந்த அதிபர் தேர்தலிலும் தீவிர வன்முறை வெடித்தது. சில மாதங்களுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் பலரும் வீடுகளை இழந்தனர்.

ஹைத்தி அகதிமுகாம்களில் தூய்மையற்ற நிலையின் காரணமாக காலரா நோய் வேகமாக பரவுகிறது. நோயால் பீடிக்கப்பட்ட 3333 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா படையில் நேபாள ராணுவத்தினரிடமிருந்துதான் காலரா நோய் பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தீரா துயரத்துடன் ஹைத்தி மக்கள் புதுவருடத்தை வரவேற்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட துயரம்
மெக்ஸிக்கோ வளைகுடாவில் கரையிலிருந்து 48 மைல்கள் தொலைவிலிருக்கும் பெயாண்ட்(beyond) பெட்ரோலியம் எனப்படும் நிறுவனத்தின் எண்ணை கிணறு கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டது.

தினமும் ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. பின்னர் தினமும் ஐந்து ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் 25 ஆயிரம் முதல் 80 பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் பல நாட்களுக்கு பிறகே உலகிற்கு தெரியவந்தது. எண்ணை கசிவு கடலில் கலந்ததால் ஏற்பட்ட விஷத் தன்மையின் காரணமாக இறந்துபோன மீன்கள் அமெரிக்க கடற்கரையில் ஒதுங்கின. எண்ணை கசிவை முற்றிலும் அடைப்பதற்கு பல மாதங்கள் ஆகின. அமெரிக்க மீன்பிடித்துறை - சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக மாறியது இச்சம்பவம். பெயாண்ட் பெட்ரோல் கம்பெனி அமெரிக்காவிற்கு 2 ஆயிரம் கோடி டாலர் நஷ்டஈடு வழங்கியது.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் பொதுக்கடனை அடைப்பதற்கு வேலைவாய்ப்பையும், சலுகைகளையும் குறைத்தது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுத்துறை பணியாளர்களின் சலுகைகளை குறைத்தனர். வரியை அதிகரித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வீதியில் இறங்கி போராடிய மக்களை போலீஸ் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமைய தளர்த்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

செய்தி:செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

29 டிச., 2010

வீரத் தாய்மார்கள்

டிசம்பர் மாதம் என்றாலே எதிரியின் அராஜகமும் இயற்கையின் சீற்றமும் தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

கடந்த டிசம்பர்-26 அன்று 'பிக்சிட்டி' என்று அழைக்கப்படும் பெரியபட்டிணத்தில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்தது. அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் ஷஹீத் அந்தஸ்தை கொடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தின் போது சில பெண்களின் வீரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹபீப் நிஸா(38) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் நீச்சலடித்து காப்பாற்றி விட்டு தான் மரணித்துவிட்டார்கள் என்பதை கேட்கும்போது நமக்கு உண்மையில் ஒரு வீர உணர்வு மேலெழும்புகிறது.

ஆண் மக்களே கடலில் இறங்க தயங்கும் நேரத்தில் ஒரு பெண் தனியாக தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றியது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அதேபோல் ஷர்மிளா(35) என்ற வீரமங்கை தன் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்றி தானும் தப்பிவந்த சம்பவம் முஸ்லிம் பெண்களின் வீரத்தை பரைசாற்றுகிறது.

இன்னும் சில பெண்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரியபட்டிணம் என்றாலே வீரம் செறிந்த மண் என்பார்கள். அதை இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

இச்சம்பவத்தினை நினைக்கும் போது நவம்பர்-25,2009 ல் சவூதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேரை காப்பாற்றி தன் உயிரைவிட்ட பாகிஸ்தானை சேர்ந்த வீரர் ஃபர்மான்(32) தான் நம் ஞாபகத்துக்கு வருகிறார்.

வீரம் என்பது அல்லாஹ் நமக்கு கொடுத்த சொத்து. அதை முறையாக நாம் பயன்படுத்தினால் அல்லாஹ் நமக்கு கண்ணியத்தையும், நல்வாழ்க்கையையும் பரிசாக கொடுப்பான்.
--ரியாஸ்.பெரியபட்டிணம்--
read more...

9 செப்., 2010

ரமலானே மீண்டும் வா!

மீண்டும் ஒரு ரமலான் நம்மை விட்டும் பறந்தோடிவிட்டது.பகலில் பசித்திருந்தோம். இரவில் விழித்திருந்தோம். பள்ளிவாசலில் தனித்திருந்தோம். ஆனால் பாடம் கற்க மறந்துவிட்டோமோ! என்ற ஒரு நெருடல் எம் நெஞ்சை உலுக்குகிறது.

சோம்பேறியான மனிதர்கள், வெறிச்சோடிய மஸ்ஜிதுகள், எதிரிகளை எதிர்கொள்ள திராணியற்ற சமுதாயம் என ரமலான் நம்மை விட்டும் அகன்றுவிட்டது.

கருத்தியல் களங்கள் குருதிக் களரியாக,எதிரிகளின் தாக்குதலில் வாழ்வைத் தொலைத்த எம் சமூக மக்கள், உயிர்வாழ எதிரிகளின் காலடிகளை நக்கிவாழும் சில முஸ்லிம் தலைவர்கள், தனிமனித வழிபாடே மார்க்கமாக, புரோகிதமே தொழிலாக என எம் சமூகத்தின் அவலநிலையை மாற்றாமலேயே மீண்டும் ஒரு ரமலான் சென்றுவிட்டது.

ஆனாலும் எங்கோ ஒரு நம்பிக்கை கீற்று தென்படத்தான் செய்கிறது. இழப்புகள் எவ்வளவுதான் ஆனாலும் வீரியம் குறையாமல் வீதியில் வந்து போராடும் எம் கஷ்மீரி சகோதரர்கள்! சியோனிஷ பயங்கரவாதத்தால் துயரமே வாழ்க்கையாக மாறிய பொழுதும் உருக்குலையாத உறுதியைக் கொண்ட காஸ்ஸா மக்கள், ஆக்கிரமிப்புகளையும், அட்டூழியங்களையும் கண்டு கலங்கிடாமல் எதிர்த்துப் போராடும் ஈராக், ஆப்கானிஸ்தான் போராளிகள்,எதிரிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் வீறு நடைபோடும் ஈரான் தேசம். ஆம் இவை எம் நெஞ்சங்களை சற்றுக் குளிரத்தான் வைக்கின்றன.

ரமலானை பண்படுத்தாமல் பாழ்படுத்திய நம்மவர்களில் சிலர் தமக்குத்தாமே ஆறுதல் கூறுகின்றனர். அடுத்த ரமலானில் பார்த்துக்கொள்வோம்! என ஆயுளைப் பற்றி அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு!

விருந்தோம்பல்களுக்கும் கோலாகலங்களுக்கும் பஞ்சமில்லை நம்மிடம்! துயரில் வாடும் சக முஸ்லிம்களைப் பற்றிய கவலையோ நம் நெஞ்சில் வெற்றிடம்! சுயநலமே வாழ்க்கையாக மாறிவிட்ட அவலநிலையில் எம் சமுதாய மக்கள்! கஷ்டங்களையும்,சிக்கல்களையும் எதிர்க்கொள்வது அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது! நோன்பு நோற்பதுக்கூட சிலருக்கு சிரமம்தான். கனவில் வெற்றிக் கனிகளை தட்டிச்செல்லலாம் என சிந்தனை வயப்பட்டிருக்கின்றார்கள்.

ரமலானில் நடந்த நிகழ்வுகளெல்லாம் இவர்களுக்கு நிதர்சனம் அல்ல. அதிசயங்களே! ரமலானே! மீண்டும் வா! எங்களை பண்படுத்திச்செல்! லட்சிய வீரர்களை உருவாக்கிச் செல்! மீண்டும் ஒரு லட்சியசமூகம் உருவாக உயிர் கொடுத்துச் செல்!

பாலைவனத்தூது வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்!
அல்லாஹ் உங்கள் செயல்களையும் எம் செயல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

பாலைவனத் தூது
read more...

8 ஜூலை, 2010

பாலைவனத் தூதின் கட்டுரைப் போட்டி குறித்த அறிவிப்பு

அன்பார்ந்த வாசகர்களே!
தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

பாலைவனத் தூதின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தி வருகின்றோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

போட்டிக்கான தலைப்புகளாக
*இந்தியா:தீவிரவாதத் தாக்குதல்களும் திரைமறைவுச் சதிகளும்
*இணையத்தில் முஸ்லிம்கள் சாதனையா? வேதனையா?
*நமக்கென்று ஒரு நாளிதழ்- பிரச்சனைகளும் சவால்களும்
ஆகிய மூன்று தலைப்புகளை வெளியிட்டிருந்தோம்.மேலும் போட்டிக்கான கடைசி நாளாக ஜூலை 8 ம் தேதியை நிர்ணயித்திருந்தோம்.

பெரும்பாலான மக்கள்,குறிப்பாக சகோதரிகள் கட்டுரைப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு கட்டுரைகளை எழுதி thoothu.essays2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய தனித் திறமையுடன் கட்டுரைகளை எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதி அனுப்பிய அக்கட்டுரைகளில் பெரும்பாலான கட்டுரைகள் கொடுக்கப்பட்ட தலைப்புகளிலிருந்து விலகிச் செல்லும் வகையிலேயே அமைந்திருந்தன. இதற்கு காரணம் தலைப்புகளை வாசகர்களில் பெரும்பாலானோர் சரியான முறையில் புரியாததே என்று நினைக்கிறோம்.

ஆகவே வாசகர்கள் பெரும்பாலானோரின் வேண்டுகோளுக்கிணங்கவும், வாசகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் முகமாகவும் கட்டுரைப் போட்டியின் நிறைவு நாளை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்டுரைப் போட்டியின் தலைப்பும் சிறு குறிப்பும்
*இந்தியா:தீவிரவாதத் தாக்குதல்களும் திரைமறைவுச் சதிகளும்:
பழி வேறு பாவம் வேறு-குண்டுவெடிப்புகள்-உடனடிக் கைதுகள்-தற்போதைய விசாரணைகள்

*இணையத்தில் முஸ்லிம்கள் சாதனையா? வேதனையா?
முஸ்லிம்களின் பங்கு- துறைகள்- செயல்பாடு- தொழில்நுட்ப வேகத்திற்கு ஈடு

*நமக்கென்று ஒரு நாளிதழ்- பிரச்சனைகளும் சவால்களும்
முஸ்லிம்கள் நாளிதழ்- ஏற்படும் பயன்கள்- எதிர்கொள்ளும் சவால்கள்- பொருளாதாரப் பின்புலம்

குறிப்பு:ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளை எழுதலாம்.
read more...

5 ஜூன், 2010

பாலைவனத் தூது நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி

பாலைவனத் தூது நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி
போட்டிக்கான தலைப்புகள்
*இந்தியா:தீவிரவாதத் தாக்குதல்களும் திரைமறைவுச் சதிகளும்

*இணையத்தில் முஸ்லிம்கள் சாதனையா? வேதனையா?

*நமக்கென்று ஒரு நாளிதழ்-பிரச்சனைகளும் சவால்களும்

முதல் பரிசு: மூன்று கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசு:இரண்டு கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு:ஒரு கிராம் தங்க நாணயம் மூன்று நபர்களுக்கு


போட்டிக்கான நிபந்தனைகள்
1.கட்டுரைகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.

2.உலகின் எப்பகுதியிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் இக்கட்டுரைப் போட்டியில் பங்கு பெறலாம்.

3.ஒருவர் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைக் குறித்து மட்டுமே எழுத வேண்டும்.

4.கட்டுரைகள் A4 தாளின் 6 பக்கங்களுக்கு மிகாமல் ஒவ்வொரு பக்கமும் தனித்தனி தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

5.கட்டுரைகள் சொந்த ஆக்கங்களாக மட்டுமே இருக்கவேண்டும்.

6.கட்டுரையில் மேற்குறிப்பு (அல்குர்ஆன், ஹதீஸ், செய்திகள்) குறிப்பிட்டால் அதற்குரிய ஆதாரத்தை குறிப்பிட வேண்டும்.

7.கட்டுரைகளை தட்டச்சு செய்து அல்லது தெளிவான கையெழுத்தில் எழுதி thoothu.essays2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

8.கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை8' 2010

9.தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மற்றும் சிறந்த கட்டுரைகள் பாலைவனத் தூதின் இணையத்தளம் மற்றும் மாத இதழில் பிரசுரிக்கும்
உரிமையுண்டு.

10.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
read more...