அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 மார்., 2011

அரசியல் மாத்தியோசி-3 - பணம் படுத்தும் பாடு

தேர்தல் சீர்திருத்தம் குறித்து வாய்கிழிய பேசுவதுதான் மிச்சம். எவ்வித உருப்படியான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

அரசியல் என்பது வியாபாரத் துறையாக மாற்றப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது. இன்று பெரும் பணக்காரர்கள் யாரெனில் அரசியல்வாதிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆனால், இங்கு முதலீடு என்பது நாட்டின் வளங்களும், மக்களின் வரிப் பணமுமாகும். அரசியலுக்கு வந்தபிறகு தான் பலர் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

2004- ஆண்டு தேர்தலை விட 2009-இல் வெற்றிப் பெற்றுள்ள கோடீஸ்வர எம்.பிக்கள் 98 சதவிகதம் அதிகரித்திருக்கிறார்கள். அதாவது 2004ல் 154 கோடீஸ்வர எம்.பிக்கள் என்றால் 2009-இல் 304 கோடீஸ்வர எம்.பிக்கள். அதில் 141 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். 58 பேர் பா.ஜ.க உறுப்பினர்கள். சமாஜ்வாதி கட்சியில் 14 பேரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13 பேரும் தி.மு.கவில் 12 பேரும் கோடீஸ்வர எம்.பிக்கள். இடதுசாரி கட்சிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்.

2009 தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் குறைவான சொத்து இருந்த 3437 பேர் போட்டியிட்டார்கள். அதில் 15 பேர் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள். 1 லிருந்து 5 மில்லியன் வரை சொத்து கணக்கு காட்டிய போட்டியாளர்கள் 1785. அதில் 116 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கணக்கு காட்டியவர்களின் வெற்றி வாய்ப்பு 19 சதவிகிதம் கூடியிருக்கிறது. 50 மில்லியன் ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டிய 322 பேரில் 106 பேர் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதாவது கோடிகள் அதிகரிப்பதற்கு தக்கவாறு வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பலர் அரசியலுக்கு வந்தபிறகு தான் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

தமிழக திராவிடக் கட்சியொன்றின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்வசெழிப்பான வாழ்க்கையே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

மக்களுக்கு சேவை புரியவேண்டும், அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு பாடு படவேண்டும் என்பதெல்லாம் பழங்கதையாக மாறிவிட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு பணம் ஒன்றே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் அறிவு, திறமை, ஒழுக்கம் இவையெல்லாம் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. இதனால்தான் இந்தியாவின் சட்டமியற்றும் சபைகளில் கிரிமினில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேர்தலில் யார் அதிகமாக செலவழிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் சீட் என்பதை அரசியல் கட்சிகள் முன்னரே நிர்ணயித்து விடுகின்றன. கடந்த தேர்தலில் யாரோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனார்களோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்கு வருகிற வேட்பாளர்கள் கோடிகளை நேரடியாக காண்பித்தால்தான் கட்சி தலைமையே நம்புகிறது.

சமீபத்திய தேர்தல்களில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் புதியதொரு பாணியை கையாளுகின்றன. அதுதான் 'திருமங்கலம் பாணி'. அது என்ன திருமங்கலம் பாணி? திருமங்கலம் தொகுதி மக்களின் வாழ்வை வளப்படுத்தி விட்டு அதன்மூலம் வாக்கு வங்கிகளை உருவாக்கிய பாணியா? ஒரு மண்ணும் இல்லை. வாக்காளர்கள் தலைக்கு இரு திராவிடக் கட்சிகளுமே ரூ.5 ஆயிரம் வரை செலவுச் செய்துள்ளார்கள். இதில் பணம் மட்டுமல்ல மிக்ஸி, க்ரைண்டரிலிருந்து திருநெல்வேலி அல்வா வரை உண்டாம். ஆக மொத்தம் வாக்காளர்களை கவர்வதற்காக மட்டும் 78 கோடிகளை வாரியிறைத்துள்ளார்கள். இதில் யார் அதிக தொகையை செலவழித்தார்களோ அவர்கள் வென்றார்கள். இதனைத்தான் 'திருமங்கலம் பாணி' என பெருமைப் பேசுகின்றனர். எவ்வளவு கேவலமான நிலைமைக்கு அரசியல் களம்
தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் 90 சதவீத வாக்குகள் பதிவானதுதான். கிடைத்தது மிச்சம் என்ற கணக்கில் மக்களும் காசு வாங்கி ஓட்டுப்போடும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானதாகும். சுருட்டுவதில் தங்களுக்கு யார் அதிக பங்கினை தருகின்றார்களோ அவர்களுக்கே வாக்கு என்ற புதுப்பாணியை வாக்காளர்கள் கடைப்பிடிக்க துவங்கி விடுவார்களோ என்ற அச்சம் தூய்மையான அரசியலை விரும்பவர்களிடம் எழுந்துள்ளது.

பல்வேறு கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க தேர்தலுக்கு முன்னால் மாநாடுகளை நடத்துவதுண்டு. இதற்காகவே பல கோடிகளை தாரைவார்ப்பார்கள். இது என்னவோ தானம் ஒன்றுமல்ல. போட்ட பணத்தை பல மடங்காக திருப்பி எடுக்கலாம் என்ற நப்பாசைதான்.

சமீபத்தில் முதல்வர் கனவில் கட்சியை ஆரம்பித்த நடிகர் ஒருவர் தனது கட்சி மாநாட்டை சேலத்தில் நடத்தினார். அக்கட்சி மாநாட்டில் பேசப்பட்ட கொள்கைகளோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களோ முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக, டாஸ்மார்க்கில் காலை 10 மணிக்கே மதுபானம் தீர்ந்துபோனதுதான் பத்திரிகைகளில் வெளியான ஹைலைட்டான செய்தி. பல கோடி ரூபாய் வியாபாரம் வேறு நடந்ததாம். இப்பொழுதெல்லாம் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க புதிய பாணி உருவாகியிருப்பதாக சமீபத்தில் தூய்மையான அரசியலை நோக்கி களமிறங்கியுள்ள ஒரு கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவர் வருத்தத்தோடு தெரிவித்தார். அது தான் ‘சோறு நூறு பீரு’ பாலிசியாம். சாப்பாடு போடணும், நூறு ரூபாயும் கூடவே ஒரு பாட்டில் பீரும் தர வேண்டுமென்பதுதான் மாநாட்டிற்கு வருவோரின் கோரிக்கையாம். இந்த பாலிசி வரும் காலங்களில் மாறுபடலாம்.

இவர்களெல்லாம் எவ்வாறு மக்களுக்கு சேவை புரிவார்கள்? ஆட்சி கையில் கிடைத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும்? நிழலை பார்த்துவிட்டு ஏமாந்துபோய் நிஜ வாழ்க்கையில் அதனை நிதர்சனமாக்க விரும்பும் முட்டாள்தனத்தை இந்த சமூகம் எப்பொழுது கைக்கழுவப் போகிறது? அற்ப ஆதாயங்களுக்காகவும், இலவசங்களுக்கும், ஜாதீய, மத உணர்வுகளுக்கும் ஆளாகி இந்திய தேசத்தி எதிர்காலத்தை காரிருளில் தள்ளும் முயற்சியை சமூகம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாட்டின் எதிர்காலத்தில் அக்கறைக்கொண்ட, சமூக நலனில் ஈடுபாடுடைய பொறுப்பானவர்களை, சாதி, மத,இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தேச நலனில் அக்கறைக் கொண்டவர்களை தங்களை ஆள்பவர்களாக தேர்ந்தெடுக்கும் பொறுப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும். இங்கே அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடிய மாவீரன் மால்கம் X-இன் கூற்றை நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும்:

"சுதந்திரத்தை யாரும் உனக்குத் தருவதில்லை. சமத்துவத்தையும் யாரும் வழங்குவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் அதை நீயே எடுத்துக் கொள்"

யோசிப்புகள் தொடரும்...
ASA
read more...

8 மார்., 2011

அரசியல்-மாத்தியோசி-2 - ஹைஜாக் செய்யப்படும் ஜனநாயகம்

ஹைஜாக் செய்யப்படும் ஜனநாயகம்
ஜனநாயகத்தின் தத்துவமாக பெரும்பான்மையை குறிப்பிடுவார்கள். இதனை எவ்வாறு மோசடியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுக் குறித்து நாம் சி்றிது ஆராய்வோம்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக பெரும்பான்மையான மக்கள் பேசுகின்றார்கள் என்ற அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட பொழுது, "ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே" என ஜனநாயகத்தின் பெரும்பான்மை தத்துவத்தைக் குறித்து கிண்டலாக குறிப்பிட்டார்.

இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பெரும்பான்மை என்பது பெரும்பாலும் குறுக்கு வழியில்தான் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு மிகப்பெரிய உதாரணம்: குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியைக் குறிப்பிடலாம். கோத்ரா ரெயில் எரிப்பைக் காரணங்காட்டி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுக் குவித்து இந்திய வரலாற்றிலேயே கொடூரமாக அரங்கேறிய இனப் படுகொலைக்கு தலைமைத் தாங்கியவர் மோடி. நேரடியாக ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு முஸ்லிம்களை கொன்று குவிக்கவில்லையே தவிர முஸ்லிம் இனப் படுகொலைக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளார். இதனை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையும் தெளிவாக கூறுகிறது.

இவ்வளவு மோசமான கொடூரமான படுகொலையை முன்னின்று நிகழ்த்தியவர் எவ்வாறு தொடர்ந்து குஜராத்தில் முதல்வராக தொடர்கிறார் என்பது ஆச்சரியமாகத் தோன்றலாம். சிலர் மோடி குஜராத்தை வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றிவிட்டார் எனக்கூறுவர். ஆனால் வளர்ச்சித் திட்டமே ஒரு மோசடி என்பது வேறு விஷயம். உண்மையில், மோடி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றிப்பெற காரணம் நாம் மேலே குறிப்பிட்ட ’ஜனநாயக ஹைஜாக்’ ஆகும்.

ஆம், தீவிரமான மதவெறி கிளர்ந்தெழுந்துள்ள மாநிலமாகவே குஜராத் உள்ளது. மதவெறி என்ற விஷவிருட்சம் ஏற்படுத்திய மாயைதான் ஜனநாயகத்தின் போர்வையில் மோடி குஜராத்தின் முதல்வராக தொடர்வதற்கு உதவுகிறது.

குஜராத்தில் அதிகார வர்க்கம் ஹிந்துத்துவ மயமாகி பல வருடங்களாகிவிட்டது. இந்நிலையில் இங்கு ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது என்பதல்ல அதைவிட குழி தோண்டி புதைக்கப்பட்டது எனலாம்.

'குஜராத் ஸே முஸல்மான் கோயி இன்ஸாஃப் நஹீ மிலேகா' (குஜராத்திலிருந்து முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது)-இது குஜராத் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான எம்.எம்.முன்ஷி தனது கட்சிதாரரான ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ஒருவரிடம் கூறிய வார்த்தைகளாகும்.

தனது இருமகன்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க குஜராத்தில் வாய்ப்பு இல்லாததால் வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுமாறு அந்த தந்தையிடம் வழக்கறிஞர் முன்ஷி ஆலோசனைக் கூறுகிறார்.

பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலையில் உற்றாரையும் உறவினர்களையும் இழந்த பல்கீஸ் பானு, உச்சநீதிமன்றத்தை அணுகி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரினார். இச்சம்பவங்கள் குஜராத்தில் நீதி எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாகும். அந்த வகையில்தான் தற்பொழுது வெளியாகியுள்ள கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு தீர்ப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமே நீதி அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டுமென்பதுதான். இவ்வாறு நீதி மறுக்கப்படும் மாநிலத்தை ஆளும் மோடியின் அரசு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என எவ்வாறு கூற இயலும்? சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை ஒரு மாநில முதல்வரின் தலைமையில் கொடூரமாக இனப் படுகொலையை செய்துவிட்டு சுதந்திரம், நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்ற இந்தியாவின் அனைத்து மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை குழித்தோண்டி புதைத்த குஜராத்தை இந்தியாவின் சோதனைக் கூடம் என கூக்குரலிடுகிறது ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாத கூட்டம்.

அதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு அநியாயங்களை புரிந்து வருகின்றனர். அதிகாரத்தை பயன்படுத்தி இவர்கள் புரியும் அட்டூழியங்களை ஒதுக்கி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பலிகடாவாக மாறுவதற்கா நமது முன்னோர்கள் தங்களின் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள்?

இஸ்லாமிய அறிஞரும்,ஆட்சியாளருமான அலீ (இறைவன் அவருக்கு அருள் புரிவானாக!) அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு கவனிக்கத்தக்கது: "சத்திய வாதிகள் பாராமுகமாக இருக்கும் பொழுதுதான் அசத்தியம் தலை தூக்கும்".
யோசிப்புகள் தொடரும்...
ASA
read more...

6 மார்., 2011

அரசியல் - மாத்தியோசி!

இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பைக் கொண்ட தேசம். மதசார்பற்ற, சோசியலிச விழுமியங்களைக் கொண்ட அரசியல் சட்டத்தை தன்னகத்தே கொண்ட நாடு.

ஆனால், இந்தியாவின் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. சில வேளைகளில் இந்தியக் குடிமக்கள் கூட தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை சரியாக பயன்படுத்துவதில் தவறிழைக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல், அதிகாரமெல்லாம் பெரும்பாலும் உயர்ஜாதி, மேல்தட்டு, பணக்கார ஆதிக்க சக்திகளின் கரங்களிலேயே தவழ்ந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகம் இத்துறைகளில் பலம் பெறுவது என்பது மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகும். சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளாக களமிறங்கியவர்கள் எல்லாம் ஆதிக்க சக்திகளின் வலைகளில் சிக்குண்டுள்ளதையோ அல்லது தங்களது வசதி, வாய்ப்புகளை மட்டுமே பெருக்குவதில் கவனம் செலுத்துவதையேத்தான் நம்மால் காண இயலுகிறது.

இந்தியாவின் அரசியல் மற்றும் அதிகாரத் துறைகளில் மதவாதம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலைத்தான் நாம் காண்கிறோம். அரசியல், அதிகார வர்க்கங்கள் மதவாதத்திற்கு ஆட்பட்டோ அல்லது அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாளும் நிலைமைக்கோ தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு புறம் லஞ்சம், ஊழல், மோசடி என அரசியல் அதிகார மையங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் அணிசேராக் கொள்கை இன்று காணாமல் போயுள்ளது. மேலை நாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பொம்மைகளாக இந்திய ஆட்சியாளர்கள் மாறிவிட்டனர்.

இந்தியாவின் இறையாண்மையும், பொருளாதாரமும் அந்நிய ஆதிக்க சக்திகளால் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளன. சமூகரீதியிலான தீமைகள் மலிந்துவிட்டன. அதற்கு எதிராக குரல் கொடுக்கக்கூட எவரும் தயாராகாத பரிதாப நிலை.

இதில் வேதனைப்படக் கூடிய விஷயம் என்னவெனில் அத்தகைய சமூகரீதியிலான தீமைகளுக்கு சமூக அந்தஸ்தை அளிக்க இந்தியாவின் சட்டமியற்றும் சபைகளில் வலியுறுத்தப்படுகிறது.

நீதிபீடங்களின் தீர்ப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் மனசாட்சியை பிரதிபலிப்பதாக மாறிவிட்டன. இரட்டை நீதிமுறையை நோக்கி தேசம் சென்றுக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் மனிதநேய சமூக ஆர்வலர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

காவல்துறை உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு மையங்களில் நிலவும் தீவிரமதவாதமும், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான நிலைப்பாடும் பல சூழல்களிலும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதும் இந்தியாவைப் பொறுத்தவரை சர்வசாதாரணமாக மாறிவிட்ட காட்சிகளாகும்.

5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மற்றும் மாநிலங்களவிலான தேர்தல்களில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவருவதற்கு பணம் பட்டுவாடா உள்பட கீழ்த்தரமான வழிமுறைகளை கையாளும் சூழலும் அனைவருக்கும் தெரிந்த சேதிதான்.

ஜனநாயகம் கோலோச்சுவதாக பெருமைப் பேசும் தேசத்தில் தேசிய கட்சி ஒன்று ஒரு குடும்பக் கட்சியாகவே மாறிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு திராவிடக் கட்சிகளிலும் உள்கட்சித் தேர்தல்கள் சடங்கிற்காகவே நடத்தப்படுகின்றன.

திராவிட கட்சிகளின் ஆட்சி என்றாலே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் ஆட்சிதான் என்ற மாயை உருவாகிவிட்டது. இன்னொருபுறம் சமூக சீரழிவுகளுக்கு வித்திடும் திரைப்பட நடிகர்கள் சிலர் அரசியல் கட்சியை உருவாக்கி திரைப்பட மாயையில் உழலும் அப்பாவி மக்களை தங்களது வலையில் வீழ்த்துகின்றனர். ஒவ்வொரு ஜாதியினரும் தமக்கென ஒரு கட்சியை உருவாக்கி வாக்குவங்கிகளை காட்டி ஆதாயம் பெறும் முயற்சியில் ஈடுபடும் மோசமான சூழலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிலவும் நிதர்சனமாகும்.

தேசபக்த வேடம் போடும் மதவாத கட்சி ஒன்று நாட்டை அடகு வைப்பதிலும், ஊழல்,மோசடியிலும் தாங்கள் எவருக்கும் சளைத்தவர்களல்லர் என்பதோடு நாட்டை பாதுகாக்கும் பணியில் இறந்த வீரர்களை அடக்குவதற்கு வாங்கிய சவப்பெட்டிகளில் கூட ஊழல் புரிந்து இந்திய அரசியலில் தாங்கள் மிக கேடுகெட்டவர்கள் என்பதை நிரூபித்தார்கள். அத்தோடு, நாட்டில் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி கலவரக்காடாக மாற்றுவதிலும் முன்னணியில் உள்ளார்கள் அக்கட்சியினர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் என்பது மதவாத, ஜாதீய, ஊழல், மோசடி, லஞ்சம், ஒழுக்கச் சீரழிவு, இறையாண்மையை அடகுவைப்பது, பொருளாதார சுரண்டல், நிர்வாக சீர்கேடு மிகுந்ததாக மாறிவிட்டது.

இந்நிலையில் நல்லவர்களும், சமூகத்திற்கு தம்மால் இயன்ற அளவு நன்மைச்செய்ய வேண்டுமென நாடுவோரும் அரசியலில் கால்பதிக்க தயங்குகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அரசியல் ஒரு சாக்கடை! இவ்வாறு அரசியலை தீண்டத்தகாத ஒன்றாக கருதி அதனை விட்டு ஒதுங்கி நின்றுக்கொண்டு அநியாயக்காரர்களும், குற்றவாளிகளும் அரசியலில் ஆட்டம் போடுவதை கண்டுகளிப்பதா இந்தியக் குடிமக்களான ந்மது கடமை?

-யோசிப்புத் தொடரும்...
ASA
read more...