13 மார்., 2011

அரசியல் மாத்தியோசி-3 - பணம் படுத்தும் பாடு

தேர்தல் சீர்திருத்தம் குறித்து வாய்கிழிய பேசுவதுதான் மிச்சம். எவ்வித உருப்படியான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

அரசியல் என்பது வியாபாரத் துறையாக மாற்றப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது. இன்று பெரும் பணக்காரர்கள் யாரெனில் அரசியல்வாதிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆனால், இங்கு முதலீடு என்பது நாட்டின் வளங்களும், மக்களின் வரிப் பணமுமாகும். அரசியலுக்கு வந்தபிறகு தான் பலர் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

2004- ஆண்டு தேர்தலை விட 2009-இல் வெற்றிப் பெற்றுள்ள கோடீஸ்வர எம்.பிக்கள் 98 சதவிகதம் அதிகரித்திருக்கிறார்கள். அதாவது 2004ல் 154 கோடீஸ்வர எம்.பிக்கள் என்றால் 2009-இல் 304 கோடீஸ்வர எம்.பிக்கள். அதில் 141 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். 58 பேர் பா.ஜ.க உறுப்பினர்கள். சமாஜ்வாதி கட்சியில் 14 பேரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13 பேரும் தி.மு.கவில் 12 பேரும் கோடீஸ்வர எம்.பிக்கள். இடதுசாரி கட்சிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்.

2009 தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் குறைவான சொத்து இருந்த 3437 பேர் போட்டியிட்டார்கள். அதில் 15 பேர் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள். 1 லிருந்து 5 மில்லியன் வரை சொத்து கணக்கு காட்டிய போட்டியாளர்கள் 1785. அதில் 116 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கணக்கு காட்டியவர்களின் வெற்றி வாய்ப்பு 19 சதவிகிதம் கூடியிருக்கிறது. 50 மில்லியன் ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டிய 322 பேரில் 106 பேர் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதாவது கோடிகள் அதிகரிப்பதற்கு தக்கவாறு வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பலர் அரசியலுக்கு வந்தபிறகு தான் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

தமிழக திராவிடக் கட்சியொன்றின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்வசெழிப்பான வாழ்க்கையே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

மக்களுக்கு சேவை புரியவேண்டும், அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு பாடு படவேண்டும் என்பதெல்லாம் பழங்கதையாக மாறிவிட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு பணம் ஒன்றே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் அறிவு, திறமை, ஒழுக்கம் இவையெல்லாம் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. இதனால்தான் இந்தியாவின் சட்டமியற்றும் சபைகளில் கிரிமினில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேர்தலில் யார் அதிகமாக செலவழிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் சீட் என்பதை அரசியல் கட்சிகள் முன்னரே நிர்ணயித்து விடுகின்றன. கடந்த தேர்தலில் யாரோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனார்களோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்கு வருகிற வேட்பாளர்கள் கோடிகளை நேரடியாக காண்பித்தால்தான் கட்சி தலைமையே நம்புகிறது.

சமீபத்திய தேர்தல்களில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் புதியதொரு பாணியை கையாளுகின்றன. அதுதான் 'திருமங்கலம் பாணி'. அது என்ன திருமங்கலம் பாணி? திருமங்கலம் தொகுதி மக்களின் வாழ்வை வளப்படுத்தி விட்டு அதன்மூலம் வாக்கு வங்கிகளை உருவாக்கிய பாணியா? ஒரு மண்ணும் இல்லை. வாக்காளர்கள் தலைக்கு இரு திராவிடக் கட்சிகளுமே ரூ.5 ஆயிரம் வரை செலவுச் செய்துள்ளார்கள். இதில் பணம் மட்டுமல்ல மிக்ஸி, க்ரைண்டரிலிருந்து திருநெல்வேலி அல்வா வரை உண்டாம். ஆக மொத்தம் வாக்காளர்களை கவர்வதற்காக மட்டும் 78 கோடிகளை வாரியிறைத்துள்ளார்கள். இதில் யார் அதிக தொகையை செலவழித்தார்களோ அவர்கள் வென்றார்கள். இதனைத்தான் 'திருமங்கலம் பாணி' என பெருமைப் பேசுகின்றனர். எவ்வளவு கேவலமான நிலைமைக்கு அரசியல் களம்
தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் 90 சதவீத வாக்குகள் பதிவானதுதான். கிடைத்தது மிச்சம் என்ற கணக்கில் மக்களும் காசு வாங்கி ஓட்டுப்போடும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானதாகும். சுருட்டுவதில் தங்களுக்கு யார் அதிக பங்கினை தருகின்றார்களோ அவர்களுக்கே வாக்கு என்ற புதுப்பாணியை வாக்காளர்கள் கடைப்பிடிக்க துவங்கி விடுவார்களோ என்ற அச்சம் தூய்மையான அரசியலை விரும்பவர்களிடம் எழுந்துள்ளது.

பல்வேறு கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க தேர்தலுக்கு முன்னால் மாநாடுகளை நடத்துவதுண்டு. இதற்காகவே பல கோடிகளை தாரைவார்ப்பார்கள். இது என்னவோ தானம் ஒன்றுமல்ல. போட்ட பணத்தை பல மடங்காக திருப்பி எடுக்கலாம் என்ற நப்பாசைதான்.

சமீபத்தில் முதல்வர் கனவில் கட்சியை ஆரம்பித்த நடிகர் ஒருவர் தனது கட்சி மாநாட்டை சேலத்தில் நடத்தினார். அக்கட்சி மாநாட்டில் பேசப்பட்ட கொள்கைகளோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களோ முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக, டாஸ்மார்க்கில் காலை 10 மணிக்கே மதுபானம் தீர்ந்துபோனதுதான் பத்திரிகைகளில் வெளியான ஹைலைட்டான செய்தி. பல கோடி ரூபாய் வியாபாரம் வேறு நடந்ததாம். இப்பொழுதெல்லாம் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க புதிய பாணி உருவாகியிருப்பதாக சமீபத்தில் தூய்மையான அரசியலை நோக்கி களமிறங்கியுள்ள ஒரு கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவர் வருத்தத்தோடு தெரிவித்தார். அது தான் ‘சோறு நூறு பீரு’ பாலிசியாம். சாப்பாடு போடணும், நூறு ரூபாயும் கூடவே ஒரு பாட்டில் பீரும் தர வேண்டுமென்பதுதான் மாநாட்டிற்கு வருவோரின் கோரிக்கையாம். இந்த பாலிசி வரும் காலங்களில் மாறுபடலாம்.

இவர்களெல்லாம் எவ்வாறு மக்களுக்கு சேவை புரிவார்கள்? ஆட்சி கையில் கிடைத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும்? நிழலை பார்த்துவிட்டு ஏமாந்துபோய் நிஜ வாழ்க்கையில் அதனை நிதர்சனமாக்க விரும்பும் முட்டாள்தனத்தை இந்த சமூகம் எப்பொழுது கைக்கழுவப் போகிறது? அற்ப ஆதாயங்களுக்காகவும், இலவசங்களுக்கும், ஜாதீய, மத உணர்வுகளுக்கும் ஆளாகி இந்திய தேசத்தி எதிர்காலத்தை காரிருளில் தள்ளும் முயற்சியை சமூகம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாட்டின் எதிர்காலத்தில் அக்கறைக்கொண்ட, சமூக நலனில் ஈடுபாடுடைய பொறுப்பானவர்களை, சாதி, மத,இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தேச நலனில் அக்கறைக் கொண்டவர்களை தங்களை ஆள்பவர்களாக தேர்ந்தெடுக்கும் பொறுப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும். இங்கே அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடிய மாவீரன் மால்கம் X-இன் கூற்றை நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும்:

"சுதந்திரத்தை யாரும் உனக்குத் தருவதில்லை. சமத்துவத்தையும் யாரும் வழங்குவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் அதை நீயே எடுத்துக் கொள்"

யோசிப்புகள் தொடரும்...
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அரசியல் மாத்தியோசி-3 - பணம் படுத்தும் பாடு"

masfa சொன்னது…

makkalin varipanatil suhapohamaha sohusu vaalkai nadatum ivarhalai inam kandu tahuntha paadam puhatanum

கருத்துரையிடுக