இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 மார்., 2011

பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்

ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.

ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார். அவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின்
சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், நமது வாழ்க்கையில் இதைப்போல் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பிறரின் பொறுமையை சோதிப்பதே பலருடைய வழக்கமாகிவிட்டது. இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் மறந்து விடுகின்றனர்.

நமது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ்லாத்தின் பண்புகள் மிளிர வேண்டும். அப்பொழுது பலர் இக்கொள்கையின்பால் ஈர்க்கப்படுவார்கள். அதற்கு ஒரு உதாரணம்:

துபையில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்கும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுச் செய்திருந்தது. இந்நிறுவனம் பெண்களால் நடத்தப்படுவதாகும். நிகழ்ச்சியில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.

இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள என்னக் காரணம் என்பதுக் குறித்து அங்கே குழுமியிருந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ஆயினும், இங்கே ஒரு நிகழ்வை எடுத்தியம்ப விழைகிறேன்:

பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம். அவர்களின் வீட்டுப் பணிகளுக்கு உதவுவதற்காக மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். அந்த பாகிஸ்தான் குடும்பத்தினர் பிற மனிதர்களிடம் பண்புடனும், பாசத்துடனும், கனிவோடும் நடந்துக் கொள்பவர்களாக இருந்தனர். இந்த பணிப் பெண்ணிடமும் பாரபட்சமின்றி கனிவோடு பழகுபவர்களாகயிருந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல பணிப் பெண்ணிற்கு அக்குடும்பத்துடனான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. அவர்களுடைய நடத்தை பணிப் பெண்ணை பரவசப்படுத்துகிறது. ஏன் இவர்கள் இவ்வளவு கனிவோடும், பண்போடும் நடந்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுகிறது. தொடர்ந்து அவர்களை கண்காணிக்க ஆரம்பிக்கிறாள்.

ஒட்டுமொத்தக் குடும்பமும் தொழுகை உள்பட இஸ்லாத்தின் கடமைகள், கொள்கையின் மீது காட்டும் ஈடுபாட்டையும், நெருக்கத்தையும் அப்பணிப் பெண் கவனிக்கிறாள். இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிடுகின்றன.

ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு! ஆம் அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், முஹம்மது நபி(ஸல்...) அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார்.

இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் ஒரு பெண்மணியின் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது!

ஆம்!நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் முறைகூட ’தஃவா’வாக மாறிவிடுகிறது. ஆகவே, நாம் நமது செயல்களை இஸ்லாத்தின் உயரிய பண்புகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தவர்களாகவும், அதேவேளையில் பிறரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பவர்களாகவும் மாறமுடியும். இன்ஷா அல்லாஹ்.

இஸ்மாயீல், ஷார்ஜா
read more...

5 மார்., 2011

ரபீஉல் ஆஃகிர் மாத நிகழ்வுகள்

இது இஸ்லாமிய காலண்டரின் நான்காவது மாதம்.

ரபீயுல் ஆஃகிர் என்ற பதத்திற்கு "வசந்த காலத்தின் இரண்டாவது மாதம்" என்று பொருள்.

இந்த மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்:
ஹிஜ்ரி 3ம் ஆண்டு புஹ்ரான் என்னுமிடத்தில் ஃபுரூஃ என்னும் போர் நடைபெற்றது.
ஹிஜ்ரி 9ம் ஆண்டு ஸரிய்யா என்ற போர் நடைபெற்றது. இந்தப் போரில் இறைத்தூதர் (ஸல்…) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஹஸ்ரத் அலீ இப்னு அபீதாலிப் (ரலி…) அவர்களை போர்த் தளபதியாக நியமித்து அண்ணலார் அனுப்பி வைத்தார்கள்.

இந்த மாதம் நடந்த மரணங்கள்:
11, ரபீயுல் ஆஃகிர், ஹிஜ்ரி 561 – ஹஸ்ரத் ஷேக் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தங்கள் 90வது வயதில் மரணம்.
18, ரபீயுல் ஆஃகிர், ஹிஜ்ரி 725 – ஹஸ்ரத் காஜா நிஸாமுத்தீன் அவர்களிள் மரணம்.
read more...

4 மார்., 2011

வரலாற்றுக்கு வரைவிலக்கணம் வகுத்த வல்லோனின் இறுதித்தூதர்

(ரபியுல் அவ்வல் மாதத்தின் இறுதியில் நாம் அமர்ந்திருக்கிறோம். இம்மாதம் உலகிற்கு அருட்கொடையாய் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் பிறந்த மாதமாகும்.

ஒரு உண்மையான முஸ்லிம் தனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நபிகளாரை நினைவுக் கூறத்தான் செய்கிறார். ஆனால், நாம் ஏற்றுக்கொண்ட கொள்கையை நமக்கு அறிமுகப்படுத்திய அந்த லட்சியத் தூதரை இன்றைய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

"என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே." அறிவிப்பவர்: இப்னு அம்ர்(ரலி...) நூல்: புகாரீ. அதனடிப்படையில் இக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. )

இவ்வுலகில் பல்வேறு மதங்களும், இயக்கங்களும் தோன்றியுள்ளன. அவையெல்லாம் அவற்றை தோற்றுவித்தவர்களையும், தலைவர்களையும் மிகைப்படுத்தி சித்தரிப்பது வழக்கமான ஒன்றாகும். வர்ண தூரிகைகளால் வரைக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை சித்திரங்கள் சில வேளைகளில் சாதாரண மக்களின் உள்ளங்களில் வீராவேசத்தையும், உணர்ச்சிகளையும் ஊட்டுவதற்கு உபயோகமாகலாம். ஆனால், அந்த தலைவர்கள் யார்? அவர்கள் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது குறித்து பாரபட்சமற்ற தேடுதல்களுக்கான முயற்சிகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவதில்லை.

மேற்கூறிய மிகைப்படுத்தலை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது(ஸல்...) அவர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும். மனித குலம் முழுவதும் ஒரே தாய், தந்தையின் மூலமாகத்தான் உருவானது என்பதை உணர்ந்து அனைத்து மனிதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே தலைவர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் மட்டுமே. நபிகளாரை திருக்குர்ஆன் சிறப்பித்துக் கூறுவது அவர் அரபிகளின் நபி என்றோ அல்லது முஸ்லிம்களின் நபி என்றோ அல்ல. மாறாக உலக முழுமைக்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றே பிரகடனப்படுத்துகிறது.

"இன்னும்,(நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.)" (அல்குர்ஆன் 34:28).

புவியியல் ரீதியான எல்லைகளோ அடையாளங்களோ இறைத்தூதரை கட்டுப்படுத்தவில்லை.

முஹம்மது நபி(ஸல்...) அவர்களுக்கு முந்தைய நபிமார்களின் இலட்சியப்பணி அடிப்படையில் மனித சமூகத்திற்கு பொதுவானதாக இருந்தாலும், அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ இலக்காகக் கொண்டே தங்களின் பணியை ஆற்றினர். முஹம்மது நபி(ஸல்...) அவர்களுக்கு பின்னால் வந்த வரலாற்றில் வீரப்புருஷர்களாக சித்தரிக்கப்படுவோரெல்லாம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தங்களது இலக்காக கொள்ளவில்லை. மாறாக தொழிலாளி-முதலாளித்துவ பிரிவினருக்கோ, மொழி-இன வகுப்பினருக்கோ, சிறுபான்மை-பெரும்பான்மை இனத்தவருக்கோ பிரதிநிதிகளாகத்தான் விளங்கினார்கள். உதாரணமாக கார்ல் மாக்ஸை எடுத்துக் கொள்வீர்களானால், அவர் பொருளாதார சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர் என்பதைத் தவிர வேறு எதனையும் அவர் இவ்வுலகிற்கு விட்டுச் செல்லவில்லை. இங்கேதான் நபி(ஸல்...) அவர்கள் இவ்வுகில் முன்வைத்த கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நபிகளார் பேணிய தொலைநோக்கு பார்வைதான் சமூகத்தின் அனைத்து பிரிவனர்களையுமே தனது தோழர்களாக மாற்ற அவர்களுக்கு துவக்கத்திலேயே உதவியது.ரோம நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவராகயிருந்த சுஹைப், நெருப்பை வணங்குபவராகயிருந்த பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மான், நீக்ரோ அடிமையாகயிருந்த பிலால், மேல்தட்டு பிரமுகர்களான அபூபக்கர், உமர், வணிகர்களான அப்துற்றஹ்மான் இப்னு அவ்ஃப், உஸ்மான், வறியவர்களான அபூதர், அபூஹுரைரா, இளைஞரான அலீ, நல்லொழுக்க பெண்மணி கதீஜா, மக்காவைச் சார்ந்த முஹாஜிர்கள், மதீனாவைச் சார்ந்த அன்சாரிகள் என சமூகத்தின் மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்களெல்லாம் நபியவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக மாறிய நிகழ்வுகளை நாம் வரலாற்றில் காண இயலும். மிகைப்படுத்தல் இல்லாத முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் களங்கமற்ற தூய வாழ்க்கை யாரைத்தான் ஈர்க்கவில்லை?

சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரைப் போலவே பல்வேறுப்பட்ட நபர்களின் குணநலன்களை தமது சித்தாந்தத்தால் உடைத்தெறிய முடிந்தது முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் மற்றொரு சாதனையாகும். மதுபானத்தையும், பெண்களையும் தங்களது வாழ்க்கையின் உயர்ந்த லட்சியமாக கருதிய ஒரு மக்கள் கூட்டத்தை பரிசுத்தமான வாழ்க்கையின் உன்னத முன்மாதிரிகளாக மாற்றிய நிகழ்வுகளை நபிகளாரின் வாழ்க்கையைத் தவிர சரித்திரத்தின் வேறு எந்த பக்கங்களிலும் நாம் பார்க்கவியலாது.

நபிகளாரின் இத்தகைய தோழர்களை அவர்களின் எதிரிகள் கூட புகழ்ந்த உண்மையை நாம் எடுத்துக்காட்டியாக வேண்டும். பகலில் ஆவேசமாக போராடும் வீரர்கள், நடு இரவிலோ இறைவனின் வழிப்பாட்டில் திளைத்தவர்களாக சின்னக் குழந்தைகளைப் போல் தேங்கி அழுபவர்கள் என எதிரிகள் பாராட்டுகின்றார்கள். 'பரிபூரணமான மனிதர்கள்' என தத்துவஞானிகள் நபித் தோழர்களைப் பற்றி குறிப்பிட்டதும் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தத்தின் காரணமாகத்தான். தான் எடுத்துவைத்த சித்தாந்தத்தை நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாக்கி சரித்திரம் படைத்த அந்த வீரப் புருஷர்களைப் பற்றி நபிகளார் குறிப்பிடும்பொழுது, "எனது தோழர்களை திட்டாதீர்கள் ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது. அறிவிப்பவர்:அபூஸயீத் அல்குத்ரி(ரலி...) நூற்கள்:புஹாரி, முஸ்லிம்.

"இஸ்லாத்தில் நபியவர்களுக்கு அடுத்ததாக வழங்கப்படும் சிறப்பு நபித் தோழர்களுக்குத்தான். பிற்காலத்தில் தோன்றியவர்கள் எவ்வளவு பெரிய அறிவுஜீவியாக போற்றப்பட்டாலும் அவர்களெல்லாம் நபித் தோழர்களின் பதவியை எட்டிப்பிடிக்க இயலாது.

மனித சமூகத்தின் புனரைமைப்பு என்பது உண்மையானால் அதன் சிற்பி நபி(ஸல்...) அவர்களைத் தவிர வேறு எவருமில்லை. வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் தலையிட்டு அதில் பலவற்றை புனரைமைத்தார்கள். சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை ஒரே இறைவனுக்கு அடிமைகளாக மாற்றிக் காட்டினார்கள். கோத்திர, குல பெருமைகளிலும், மது, மாது, வட்டி போன்ற சமூக சீர்கேடுகளில் கட்டுண்டு கிடந்த சமூகத்தை உன்னதமிக்க ஒழுக்கமுடைய சமூகமாக மாற்றிய பெருமை நபிகளாருக்கு உண்டு. இன்று அத்தகைய சீரழிவுகளில் சிக்குண்டிருக்கும் உலகில் நபி(ஸல்...) அவர்களின் முன்மாதிரி எவ்வளவுதூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவர்களின் வாழ்க்கையை படித்தவர்களுக்கு புரியும். உலகம் மதுவில் மூழ்கிவிடிமோ என அஞ்சும் மனித சமூகத்தின் மீது கவலைக் கொண்டவர்களுக்கு நபிகளார் கூறிய வார்த்தைகள்தாம் நமது நினைவுகளில் நிழலாடுகிறது.

மனித சமூகத்தை மட்டுமல்ல இயற்கையைக் கூட நபி(ஸல்...) அவர்கள் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதற்கு அவர்களது வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகள் கிடைக்கும். இயற்கையை பசுமையாக மாற்றும் மரங்களை போர் வேளைகளில் கூட வெட்டக்கூடாது என உத்தரவிட்டார்கள். மனிதர்களின் எல்லைக் கடந்த பேராசை உயிரினங்கள் மற்றும் இயற்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் பொழுது நபி(ஸல்...) அவர்களின் பார்வையை மாபெரும் எச்சரிக்கையாக நாம் கருதவேண்டும்.

அர்த்தம் பொதிந்த நபி(ஸல்...) அவர்களின் பொன்மொழிகளை நாம் ஆராயும் பொழுது நபிகளார் அரபு மொழியில் மிகச்சிறந்த கவிஞரா? என எண்ணத் தோன்றும். அவ்வளவு தூரம் தெளிவான, கச்சிதமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. ஆனால், நபி(ஸல்...) அவர்கள் தன்னை கவியாக கருதவோ, வார்த்தைகளை கவிதையாக மாற்றவோ செய்யவில்லை. நபி(ஸல்...) அவர்களை கவிஞரல்ல எனக் கூறுகிறது திருக்குர்ஆன். ஆனால், நபிகளாரின் வார்த்தைகளில் இலக்கிய நயமும், வலிமையும், அழகும், எளிமையும், தீவிரமும் நிறைந்து காணப்படுகின்றன. மனித சமூகத்தின் உயிர்த்தெழலுக்கு இந்த வார்த்தைகளை விட வேறொன்றையும் உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை. இனியும் காணமுடியாது.

நபி(ஸல்...) அவர்கள் விட்டுச்சென்ற சித்தாந்தத்தின் தொகுப்பை எக்காலத்திற்குமான விடுதலைக்கான இயக்கமாக அறிமுகப்படுத்துவதற்கு நம்மால் இயலவேண்டும். எந்த சவால்களையும் உறுதியுடன் எதிர்கொண்டு காலச்சூழலுக்கு ஏற்றவாறு வழிகாட்டும் சித்தாந்தமாக இந்த நவீனயுகத்தில் இஸ்லாம் அங்கீகரிக்கப்பட நாம் முயலவேண்டும்.

மேற்கத்திய உலகம் இவ்வுலகிற்கு அளித்த தத்துவங்களெல்லாம் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றன. உலகில் அனைத்து மனிதர்களுக்காகவும் இறைவன் அருளிய செல்வங்கள் ஒரு சிலர் மட்டும் அனுபவிக்க வழிவகுக்கும் முதலாளித்துவக் கொள்கையினால் உலகம் மிகுந்த நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடுகளின் வளங்களின் மீது நோட்டமிட்டு அந்நாடுகள் மீது அக்கிரமமான தாக்குதல்களை முதலாளித்துவ நாடுகள் கட்டவிழ்த்து விடுகின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முதலாளித்துவக் கொள்கையினால் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

முதலாளித்துவக் கொள்கைக்கு மாற்றீடாக வந்த மார்க்ஸிஸம் காலத்தின் கல்லறைக்குள் முகங்குப்புற வீழ்ந்துக் கிடக்கிறது. கியூபாவிலும், வடகொரியாவிலும் அக்கொள்கை ஒதுங்கிவிட்டது. சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கான நீதியின் தத்துவம் இஸ்லாம்தான் என்பதை உலகிற்கு எடுத்துக்கூற வேண்டிய சூழல் இது. மார்க்ஸிஸம் இறைவனை மறுத்தாலும், மனிதநேயத்துடன் நடந்துக்கொள்வதாக சிலர் கருதுகின்றனர். அதனால்தான், மார்க்ஸிஸத்தின் வீழ்ச்சி ஏற்படுத்திய வெற்றிடத்தில் சிக்குண்டிருப்பவர்கள் நடுநிலையான சிந்தனையுடைய, மனிதநேய ஆர்வலர்களாவர். அவர்களின் முன்னால் நடுநிலையாகவும், மிகைப்படுத்தாமலும் நபி(ஸல்...) அவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அதாவது இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். ஏனெனில் நபி(ஸல்...) அவர்கள் எடுத்துவைத்த கொள்கை சமூகத்தின் சிந்தனையையும், பார்வையையும், பிரச்சனையை அணுகும் முறையையும் மாற்றிக்காட்டியது. குணநலன்களை மதிப்பீடுச் செய்யும் முறையையும் நவீனமாக்கியது. வாழ்க்கையின் தரம் தனித்தன்மை வாய்ந்ததாக மாறியது. சுருக்கமாக கூறவேண்டுமெனில், ஒட்டுமொத்த சமூகத்தின் மொத்த வடிவமே முற்றிலும் மாற்றப்பட்டது. அத்தகைய மாற்றம் இவ்வுலகிற்கு இன்றும், என்றும் தேவையான ஒன்றாகும்.

நபி(ஸல்...) அவர்களை நாம் மிகவும் நேசிக்கிறோம் என்பது உண்மையானால் அவர்கள் கொண்டுவந்த கொள்கையை துணிவுடன் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு நம்மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து நாம் செயல்படுவோம்.
ASA
read more...

8 பிப்., 2011

ரபீயுல் அவ்வல்

ரபீயுல் அவ்வல்
இஸ்லாமிய காலண்டரின் 3வது மாதம்.
ரபீயுல் அவ்வல் என்ற பதத்தின் பொருள்:வசந்த காலத்தின் முதல் மாதம். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் மண்ணுலகுக்கு வந்ததும், மரணமடைந்ததும் இந்த மாதத்தில்தான்.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய நிகழ்வுகள்:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரத்.
ஹிஜ்ரி 2ல் புவாத் யுத்தம்.
ஹிஜ்ரி 2ல் ஸஃப்வான் யுத்தம்.
நபிகளார் நபிப்பட்டம் பெறுவதற்கு 7 வருடங்கள் முன்பு அவர்களின் மகள் ருகையா (ரலி…) அவர்களின் பிறப்பு.
நபிகளார் நபிப்பட்டம் பெறுவதற்கு 6 வருடங்கள் முன்பு அபூபக்கர் (ரலி…) அவர்களின் மகள் அஸ்மா (ரலி…) அவர்களின் பிறப்பு.
அபூபக்கர் (ரலி…) அவர்கள் கலீஃபாவாகப் பதவியேற்பு.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய திருமணங்கள்:
ஹிஜ்ரி 3ல் மூன்றாவது கலீஃபா உத்மான் (ரலி…) அவர்களுக்கு நபிகளாரின் மகள் உம்மு குல்தூம் (ரலி…) அவர்கள் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய மரணங்கள்:
ஹிஜ்ரி 4ல் நபிகளாரின் மனைவியும், இறை நம்பிக்கையாளர்களின் அன்னையுமான ஸைனப் (ரலி…) அவர்கள் மரணமெய்தினார்கள்.
ஹிஜ்ரி 10ல் நபிகளாரின் மகனார், இப்றாஹீம் (ரலி…) அவர்கள் மரணமெய்தினார். (அன்னாரது தாயார் மாரியா கிப்தியா).
read more...

14 ஆக., 2010

ரமலான் செயல் களத்தின் மாதம்

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ,அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். (அல்குர்ஆன்2:185)

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)

"மேற்கண்ட வசனத்தின் மூலம் நோன்பு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தின் மீதும் விதிக்கப்பட்டிருந்த்தை அறிய முடிகிறது.நோன்பு கடமையாக்கப்பட்டிருப்பதன் பின்னணி இதுதான் மனிதர்களை அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் அஞ்சி நடக்கக்கூடியவர்களாக மாற்றுவது. நோன்பின் முக்கிய நோக்கம் தக்வாவாகும்.நோன்பு நோற்பதன் மூலம் இறைவன் இட்ட கட்டளைக்கு முற்றிலும் கீழ்படிவதும், மேலும் இந்த பண்பை மனித மனங்களில் படிப்படியாக புத்துயுரூட்டுவதுமாகும்.

அல்லாஹ் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒழுங்குமுறைகளை நிலை நிறுத்துவதும் மனித சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான போராட்டத்தை நடத்தவும் பிற மனிதர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய பொறுப்பை முஸ்லிம் உம்மத்திற்கும் நோன்பு உணர்த்துகிறது. நோன்பு இயல்பாகவே மனிதனின் மனோபலத்தை சோதனைச் செய்வதற்காகவே அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது.இதன் முக்கிய நோக்கமாவது மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயான உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.மேலும் மனிதன் தனது உடல் தேவைகளையும் இச்சைகளையும் வெல்வதன் மூலம் அவனுக்கு இறைவனிடமிருந்து பெரும் பாக்கியத்தையும் வெகுமதியையும் பெற்று தருகிறது."
(ஷ‌ஹீத் செய்ய‌த் குதுப் த‌மது ஃபீ ழிழாலில் குர்ஆன் த‌ஃப்ஸீரில்)

நன்மைகளின் பொற்காலமாய் பாவங்களின் இலையுதிர் காலமாய் மீண்டும் ஒரு ரமலானை நாம் சந்தித்துள்ளோம். மனித மனங்களில் மண்டிக் கிடக்கும் மாசுகளை அகற்றி அவனை மாண்பாளனாக மாற்றும் வித்தை ரமலானுக்கு உண்டென்றால் அது மிகையன்று!

நன்மைகள் நம் வாசல் தேடி வரும்போது அதனை வழி மறிக்கும் ஷைத்தானுக்கு கூட விலங்கிடப்பட்ட பரிசுத்த மாதம் இது!. தேடல் என்பது பொருளாதாரத்தையும்,புகழையும் நோக்கி நிற்கும் காலக்கட்டத்தில் நன்மையின் தேடலாய் நம்மை அரவணைக்கும் இறையச்சத்தின் மாதம் ரமலான்! ரமலானின் ஏராளமான சிறப்புகளைப் பற்றி நபிகளாரின் வாக்குகளில் இவ்வாறு காணலாம்.

'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.- நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

'நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன.'- நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)

'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்.'-நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி-619)

இன்று ரமலான் என்றால் பசியும் தாகமும் தான் முன்னிறுத்தப்படுகிறது! நிச்சயமாக இறையச்சமென்பது அதுவன்று நபிகளாரின் வாக்குகளில்! பொய்யான செயல்களையும் சொற்களையும் விட்டொழிக்காதவரை ரமலான் நமக்கு எட்டாக்கனியாகிவிடும் எச்சரிக்கை!

சோம்பலுடனும் தூக்கத்துடனும் கழிப்பதற்கா இம்மாதத்தின் நோக்கம்! நிச்சயமாக இல்லை! இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முதன்மையான ஆய்வை மேற்க்கொண்டால் தெரியவரும் அது செயற்களத்தின் மாதமென்று! பத்ரும், வாதில்குராவும், பத்ஹே மக்காவும், தபூக்கும், ஹத்தீனும், அய்னுன் ஜாலூத்தும் நடைபெற்ற மாதமல்லவா இது!

நபி(ஸல்...) அவர்களும் சரி அவர்களுடைய தோழர்களும் சரி ரமலானைப் பார்த்த விதமே வேறு. அவர்கள் ரமலானை இறையச்சத்திற்குரிய மாதமாக அல்லாஹ்வின் காருண்யமும், வெற்றியும் இறக்கப்படும் மாதமாகத்தான் சிந்தித்தார்கள், அதனடிப்படையில் செயல்படவும் செய்தார்கள். இறையச்சம் என்பது வெறும் மஸ்ஜிதுகளில் அமர்ந்து தொழுவதுடனோ, திக்ருகளை செய்வதுடனோ, திருக்குர் ஆனை ஓதுவதுடனோ முடிவதல்ல!

ரமலானுடைய காலக்கட்டங்களில் நபி(ஸல்...) அவர்களும் சஹாபாக்களும் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தால் பத்ரும், தபூக்கும், பத்ஹே மக்காவும், வாதில் குராவும் நடைபெற்றிருக்குமா அல்லது அதில் வெற்றியைத்தான் பெற்றிருக்க முடியுமா?.

ஹிஜாஸிலிருந்து இணைவைப்பின் கடைசி சின்னங்கள் வரை துடைத்தெறியத்தான் முடிந்திருக்குமா?.

இறையச்சத்தின் இலக்கணத்தை அவர்கள் விளங்கிக் கொண்டது இவ்வாறுதான் ரமலானில் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, திருக்குர் ஆனை ஓதுவதுடன் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் இலட்சியப் பணியையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

நபி(ஸல்...) அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள், "எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஆதாரம்:இப்னுமாஜா,அஹ்மத்.

அவ்வாறெனில் இறைவன் ஆண்டிற்கொருமாதம் நோன்பு நோற்கச் சொல்வது மனிதர்களை துன்புறுத்தவா?. தனது அடியார்களை ஒரு மாதகாலம் பட்டினி போடச்செய்வதன் மூலம் இறைவன் எதனை நாடுகிறான். நிச்சயமாக இதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை. நோன்பு நோற்பதன் மூலம் மனிதன் சில மணிதியாலங்கள் தன்னை உணவுக்கொள்வதிலிருந்தும், பானங்கள் அருந்துவதிலிருந்தும் தடுத்துக் கொள்கிறான். அத்தோடு தனது உடல் ரீதியான மனோ ரீதியான இச்சைகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்கிறான்.

மனிதனின் இத்தகைய சூழல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஏனெனில் மற்ற அமல்களைப் பொறுத்தவரை அதன் வெளிப்புறத் தோற்றம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நோன்பு என்பது ஒருவர் அதன்மூலம் தனது உடல்ரீதியான மனரீதியான இச்சைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது.

அதனால் தான் நபி(ஸல்…)அவர்கள் கூறினார்கள்."மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது.ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை.இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான்." (முஸ்லிம்)

ஆகவே நோன்பு இறைவனுக்கும் மனிதனுக்குமிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு வணக்கம். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுபட்டு சாதாரண காலத்தில் அனுமதிக்கப்பட்ட தேவைகளைக்கூட நோன்பின்போது சில மணிநேரங்கள் தியாகம் செய்யும் மனிதன் இதன்மூலம் பெற்ற பயிற்சியை நோன்பு அல்லாத காலங்களிலும் அல்லாஹ் தடுத்தவற்றை நிராகரித்து அவன் அனுமதித்த்தை மட்டுமே அங்கீகரித்து இன்ன பிற துறைகளிலும் இந்த இறையச்சத்தை செயல்படுத்தும்போது அவன் மாண்பாளனாக மாறிவிடுகிறான். ஏன் அல்லாஹ்வுக்காக மனிதனிடம் மிகப்பெரும் மதிப்புமிக்க அவனது உயிர் உட்பட அனைத்தையும் அவன் தியாகம் செய்ய தயாராகிவிடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு சமூகமே உருவாகும்பொழுது இவ்வுலகில் இன்னலுக்கு இடமேது.இத்தகைய இறையச்சத்தைப் பெற்றவருக்குத்தான் நாளை மறுமையில் சுவனம் தயார்செய்து வைக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

"அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும். ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா பயபக்தி உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்." (அல்குர்ஆன் 19:61,62,63)

நாமும் இந்த ரமலானில் நோற்கும் நோன்பின் மூலம் இறையச்சத்திற்கான பயிற்சியைப் பெற்று அதனை நமது முழுவாழ்விலும் செயல்படுத்தி இறையச்சமுடையோருக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் சுவனத்தின் வாரிசு தாரர்களாக மாற முயல்வோமாக! வல்ல, இறையோனாகிய அல்லாஹ் அதற்கு துணைப்புரிவானாக!
read more...

13 மார்., 2010

பேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.
தகவல் ஆதாரம்:அரப் நியூஸ், மார்ச் 12, 2010
read more...

9 மார்., 2010

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ஆமினா அசில்மி மரணம்

அமெரிக்காவில் செயல்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவரான ஆமினா அசில்மி கடந்த மார்ச் 6 ஆம்தேதி கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.(இன்னாலில்லாஹி...).

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 1977 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியவர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக தனது கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்த போதிலும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமிய பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் ஆமினா அசில்மி. ஆமினா அசில்மி தனது செல்வம் முழுவதையும் இஸ்லாத்திற்காக செலவிட்டார்கள். கடைசியில் அவர் வாழ்வதற்கு சொந்தமாக வீடு இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் இருப்பதாகவும் அது முற்றி ஒருவருடத்தில் மரணம் நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறியபொழுதிலும் மனங்கலங்காமல் "நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது" என்று கூறினார்களாம்.

இஸ்லாத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அந்த பெண்மணிக்கு அல்லாஹ் பாவங்களை பொறுத்து மறுமையில் சுவனத்தை அளிப்பானாக! ஆமினா அசில்மியின் உரைகள் யூ ட்யூபில் கிடைக்கப் பெறலாம்.

"நான் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத் துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" --ஆமினா அசில்மி
read more...

1 மார்., 2010

இறைத்தூதரின் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடலாமா?- டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

நாம் அனைவரும் அறிவோம், அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் நபி(ஸல்...)அவர்களின் பிறந்த நாளையோ, ஹிஜ்ரி புத்தாண்டையோ, பத்ருப்போர் நடந்த தினத்தையோ விழாவாகக் கொண்டாடவில்லை என்று. ஏனெனில் அவர்கள் அந்த நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் அதனையெல்லாம் நேரடியாக கண்ட சாட்சிகள். மேலும் அவர்கள் அந்நிகழ்வுகளை என்றும் தங்கள் உள்ளங்களில் பாதுகாத்து வந்தார்கள்.

சஅத் அபீவக்காஸ்(ரலி...) கூறுகிறார்கள்: "நாங்கள் ஆர்வத்துடன் எங்கள் குழந்தைகளுக்கு நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் நடந்த போரின் வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம்". மேலும் முறையாக குர்ஆனையும் கற்றுக் கொடுத்தோம் என்கிறார்கள்.

நபித்தோழர்கள் நபிகளாரின் வாழ்நாளில் நடந்தவைகளை தங்கள் குழந்தைகளுக்கு நினைவூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் நபிகளாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த தலைமுறைகள் அந்த மேன்மைப் பொருந்திய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் மறக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் அத்தகையதொரு விழாக்கள் நடத்தப்பட்டால் அவைகள் அந்த மிகப்பெரிய நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதாகவும், அதன்மூலம் அதன் மதிப்பீடுகளை அந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர்களிடமிருந்து கற்கும் விதத்திலும் அமையவேண்டும்.

நபிகளாரின் வாழ்வையும் அவர்களுடைய அழைப்பையும் நினைவூட்டுவதற்காக துவங்கப்பட்ட இவ்விழாக்களில் எதிர்பாராதவிதமாக நவீனங்கள்(பித்அத்) நுழைந்துவிட்டன. உண்மையில் நபிகளாரின் பிறந்தநாளை கொண்டாடுவது என்பது இஸ்லாத்தின் மறுவரவைக் கொண்டாடுவது போலாகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் நன்னோக்கம் மக்களுக்கு நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக இருக்கவேண்டும்.

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்: "அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது." (அல்குர்ஆன் 33:21).

நபி(ஸல்...)அவர்கள் மேற்க்கொண்ட ஹிஜ்ராவைக் கொண்டாடும் பொழுது மக்களுக்கு ஹிஜ்ராவின் படிப்பினைகளையும், தியாகத்தையும், நபித்தோழர்களின் தியாகத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அலீ(ரலி...)அவர்களின் தியாகம், அவர்கள் நபி(ஸல்...)அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்டபிறகு அவர்களுக்கு பகரமாக மக்காவிலிலுள்ள அவர்களுடைய வீட்டின் படுக்கையில் எதிரிகளுக்கு பயப்படாமல் படுத்திருந்தார்களே! அதனை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளாரை சந்திக்க தவ்ர் குகைக்கு ஏறிச்சென்ற அஸ்மா(ரலி...)அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளார் எவ்வாறு அதனை திட்டமிட்டார்கள், எவ்வகையிலான வழிகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அபூபக்கர்(ரலி...)அவர்கள் கேட்டக்கேள்விக்கு நபி(ஸல்...)அவர்கள் அளித்த பதிலை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்: "நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்." (அல்குர்ஆன் 9:40).

நாம் இந்த தினங்களை கொண்டாடும் பொழுது அவற்றிலிருந்து கிடைக்கும் பாடங்களையும், மதிப்பீடுகளையும் நினைவுறுத்த வேண்டும். நான் நினைக்கிறேன் இந்த தினங்கள் முறையாக கொண்டாடப்படுமானால் நாம் அவற்றை மிகப்பெரிய நன்னோக்கத்திற்கு பயன்படுத்தியதாக ஆவோம். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தின் கொள்கைகள், நபி(ஸல்...)அவர்களின் சுன்னத் மற்றும் வாழ்க்கையோடு மக்களை நெருங்கச் செய்ய இயலும்.

ஆஷூரா நாளை நபிகளார் கொண்டாடியது எவ்வாறு? நோன்பு மட்டுமே நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபொழுது அங்குள்ள யூதர்கள் இந்த 10-வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி(ஸல்...)அவர்கள் யூதர்களை பார்த்து வினவினார்கள். அதற்கு அந்த யூதர்களோ "இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா(அலை...) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும், அவனுடைய கூட்டத்தினரையும் கடலில் மூழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா(அலை...) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம்.என்று விடை பகர்ந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்...)அவர்கள் நபி மூஸா(அலை...) அவர்களை பின்பற்றுவதில்(முஸ்லிம்களாகிய) நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். மேலும் இனிவரும் ஆண்டில் நான் உயிரோடிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நோன்பு நோற்பேன்" என்றும் நபி(ஸல்..)அவர்கள் அறிவித்தார்கள். (நூற்கள்: புஹாரி,முஸ்லிம்).

ஆயினும் சில சுன்னத்வாதிகள் இத்தினத்தை விருந்துவை போகங்களுடனும், ஷியாக்கள் துக்கமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் பித்அத்துகளாகும். இவை முற்றிலும் இஸ்லாத்திற்கு மாற்றமானது.

நபி(ஸல்...)அவர்களின் பிறந்த தினம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் ரபியுல் அவ்வல் 9 திங்கள் கிழமை நபிகளார் பிறந்தார்கள் என்பதாகும். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் 12 திங்கள் கிழமை வஃபாத்தானார்கள்.

source:இஸ்லாம்ஆன்லைன்.நெட்
read more...

21 பிப்., 2010

இஸ்லாத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாததே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம்

கற்பழிப்புக்கு பெண்களே காரணம்: ஆய்வு தகவல் (தினமலர் செய்தி)
லண்டன் :கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்களே காரணம், என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு குற்றம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆயிரம் பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் என பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்கள் குட்டை பாவடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் இவர்களே வம்பை விலைக்கு வாங்குவதாக உள்ளது. இன்னும் சிலர், ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குவதும், விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்துக்குள்ளாகி விடுகிறது. இதனால், தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன.
கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடும் மூன்றில் ஒரு ஆண், தான் கற்பழித்ததை ஒப்பு கொள்வதில்லை. இதே போல கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த சம்பவத்தை போலீசில் சொல்ல முன்வருவதில்லை. இந்த விஷயம் கோர்ட் வரை செல்வதற்கு தயங்குகின்றனர். 42 சதவீத பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதை போலீசில் புகார் செய்கின்றனர். இவ்வாறு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
இஸ்லாத்தின் வழிகாட்டுதல்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன்(24:30,31)
read more...

17 டிச., 2009

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்

ஹிஜ்ரத்- நபி(ஸல்…) அவர்களும் அவர்களுடைய உற்றத் தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட ஒரு பூமியைத்தேடி புறப்பட்டு இன்றோடு 1430 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்…)அவர்கள் எந்த நோக்கத்திற்காக மதீனாவை நோக்கிச்சென்றார்களோ அந்த இலட்சியமும் நோக்கமும் இன்றைக்கும் முஸ்லிம் சமூகம் உணராதது வேதனைக்குரிய ஒன்று.

கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கும் களியாட்டங்கள் போடுவதற்கும் பயன்படுத்துவதைபோல நமது புத்தாண்டு வருவதில்லை. இஸ்லாமிய ஆண்டை எந்த நிகழ்விலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பாக உமர்(ரலி…) அவர்களுடைய காலத்தில் கலந்தாலோசனை நடைபெற்றபொழுது அவர்கள் தேர்வுச்செய்தது ஹிஜ்ரத் என்ற மாபெரும் நிகழ்வையே.

ஹிஜ்ரத் என்பது ஏதோ உயிரை காப்பாற்றுவதற்காக தமது இருப்பிடத்தை விட்டு ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை மேற்க்கொண்டது அல்ல. இன்றும் பல்வேறு வகையான புலம்பெயர்வுகள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காக அதுவும் தன்னைப்படைத்த இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்ட இவ்வுலகில் நடைபெற்ற மாபெரும் புலம்பெயர்வுதான் ஹிஜ்ரத்.
இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அதனை தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டு அடியொற்றி நடக்க ஒரு சமூகம் தேவை என்ற நோக்கத்திற்காகத் தான் மக்காவை விட்டும் மதீனாவிற்கு தனது வசிப்பிடம், சொந்தங்கள், செல்வங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதீனாவை நோக்கிப்புறப்பட்டார்கள் நபி(ஸல்…) அவர்களின் தலைமையில் அந்த லட்சிய வீரர்கள்.

எந்த லட்சியத்திற்காக ஹிஜ்ரத் மேற்க்கொள்ளப்பட்டதோ அந்த லட்சியம் நிறைவேறவும் செய்தது. அந்த ஹிஜ்ரத்திலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது. ஆனால் அதற்கு பக்கங்கள் போதாது. தற்போதைய நமது சமுதாயத்தின் நிலை என்ன?, கேவலம் ஆங்கிலப் புத்தாண்டையும், தமிழ் புத்தாண்டையும் அறிந்திருக்கும் நம்மவர்கள் ஹிஜ்ரி ஆண்டையோ அல்லது அதன் மாதத்தையோ பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

நோன்பு நோற்கும்பொழுது ரமலான் என்றுத் தெரிகிறது. தியாகப்பெருநாள் கொண்டாடும்பொழுது துல்ஹஜ் மாதம் என்று தெரிகிறதேயொழிய இஸ்லாமிய ஆண்டைப்பற்றிய போதிய அறிவும் அதில் கிடைக்கும் படிப்பினைகளும் இல்லாமலேயே நம்மில் பெரும்பகுதியினர் உள்ளோம்.
ஆங்கில ஆண்டை நம்மீது திணித்து விட்டார்கள் இஸ்லாத்தின் எதிரிகள். அதனுடைய வாரக்கிழமைகளின் பெயரை சிந்தித்துப் பார்த்தால் தெரியும் அந்த 7 தினங்களின் பெயர்களும் ரோமர்கள் வணங்கி வந்த கடவுள்களின் பெயர்கள். இன்று இந்தக்கலாச்சாரம் நமது வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது.
உலகளாவிய அளவிலான ஹிஜ்ரா காலண்டரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இல்லை. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் செல்வ வளங்கள் இருந்தும் முஸ்லிம்கள் புழங்குவதற்கு ஒரு இஸ்லாமிய காலண்டரை நம்மால் ஏன் உருவாக்க இயலவில்லை. பிறையை கணக்கிடுவதிலேயே நம்மிடையே பல்வேறுவிதமான சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தான் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான முடிவுகளை நம்மால் எடுக்க இயலவில்லை.

நபி(ஸல்…)அவர்கள் ஹிஜ்ரத்தின் ஊடே கட்டியெழுப்பிய அந்த சமூகம் காணாமல் போய்விட்டது. ஹிஜ்ரத்தின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை பெறவேண்டும்.

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய மாவீரன் மால்கம் X கூறிய கூற்று இங்கு நினைவுக்கூறத்தக்கது "தனது சொந்தவரலாற்றை மறந்த சமுதாயத்தால் வரலாறு படைக்க இயலாது". ஆகவே மீண்டும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அந்த ஹிஜ்ரத்திலிருந்து பாடங்களை பயின்று நமது சமூக வாழ்க்கையில் அதனை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவேண்டும்.

ஹிஜ்ரத்தின் வரலாற்றை படித்து முடித்து விட்டு புத்தக அலமாரியில் பாதுகாக்காமல் அதனை செயல்களத்திற்கு கொண்டுவர நம் அனைவருக்கும் வல்ல இறைவனாகிய அல்லாஹ் துணைபுரிவானாக!

யா அல்லாஹ் இஸ்லாமிய சமூக புனரமைப்பில் எங்களையும் பங்கேற்கசெய்வாயாக! அந்த சமூகம் விரைவில் இவ்வுலகில் புலர்வதற்கு நீ துணைபுரிவாயாக! ஆமீன்!

அனைவருக்கும் பாலைவனத்தூதின் இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குல்லு ஆம் வ அன்தும் பி ஹைர்.
read more...

27 நவ., 2009

தியாகப்பெருநாள் சிந்தனைகள்

சொந்த நலனுக்காகவும் சுய லாபத்திற்காகவும் இவ்வுலகில் செய்யும் முயற்சிகள் யாவும் நிச்சயமாக தியாகமாகாது. தியாகமென்றால் அதற்கொரு லட்சியம் இருக்கவேண்டும். ஒரு உன்னதமான நோக்கம் வேண்டும். அதுவும் நம்மைப்படைத்தவனின் படைப்பின் நோக்கத்தை நிறைவுச்செய்வதற்காக செய்யும் தியாகம்தான் உன்னதமானது.
மனிதகுல வரலாற்றிலேயே அத்தகையதொரு மகத்தான தியாகத்திற்கு சொந்தக்காரர்தான் அல்லாஹ்வின் தூதர் நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள். வல்ல நாயன் அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் தனது நண்பர் என்று கூறுமளவுக்கு தியாகத்திற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். அல்லாஹ் இட்ட கட்டளைகள் அத்தனையையும் அணுவளவும் பிசகாமல் நிறைவேற்றியவர். ஷைத்தானின் தூண்டுதலோ மனோ இச்சையோ அவர்களின் லட்சியத்தை தடுக்கவில்லை. அவர்கள்தான் மாபெரும் ஏகத்துவ புரட்சியாளர். அவர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. அவர்கள்தான் தியாகத்தின் தடாகம்.
அந்த சத்திய சீலரின் வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் இருக்கிறது. அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் குறிப்பிடுகிறான்,
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
இப்ராஹீம் நபி(அலை...) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவே ஹஜ்ஜின் ஒவ்வொருக்கடமைகளும் அமைந்திருக்கின்றன. நாம் தினமும் தொழுகையின்போது அத்தஹியாத்தில் அவர்களுக்கு அல்லாஹ் அருள்ச்செய்ததை நினைவுக்கூறுகிறோம். இவ்வாறு இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு நிலைகளில் இப்ராஹீம்(அலை...) அவர்களை நினைவுகூறும் நாம் அத்தோடு நின்றுவிடாமல் அவர்களின் தியாகத்தையும் ஒரு முன்மாதிரியாகக்கொண்டு அதற்காக தயாராகவேண்டும். நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள் எதிர்கொண்ட நம்ரூத் போன்றக்கொடுங்கோலர்கள் இன்றும் மோடியின் வடிவிலும் ஓல்மர்ட்டின் வடிவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் . காலங்களும் பெயர்களும் தான் மாறுகிறதைத்தவிர கொடூரர்களின் குணங்கள் மாறவில்லை. இவர்கள் நம் முஸ்லிம் உம்மத்தை அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் ஆட்படுத்திவருகிறார்கள். இவர்களிடகிருந்து நம் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்திடவும், வலுப்படுத்தவும், இஸ்லாத்தை நிலை நாட்டிவிடவும் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் இன்றைக்கும் தேவைப்படுகிறது.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:111)
பெருநாள் கொண்டாடினோம் சிறந்த ஆடைகளை அணிந்தோம், உயர் ரக உணவை உண்டோம் என்றில்லாமல் தியாகத்தின் தாடாகம் நபி இப்ராஹீம்(அலை..) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக்கொண்டு அந்த தாடாகத்திலிருந்து கிளம்பும் ஊற்றுக்களாக மாறுவோம். இன்ஷா அல்லாஹ்... 'தகப்பலல்லாஹ் மின்னா வ மின்கும்'
read more...

26 நவ., 2009

லட்சக்கணக்கான ஹாஜிகள் இன்று அரஃபாவில்

மக்கா: இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ஹாஜிகள் உள்பட உலகின் பலபாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான ஹாஜிகள் இன்று(27/11/09) ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஸபீர் மலையில் சூரியன் உதித்தவுடனேயே ஹஜ்ஜின் பிரதான கடமையான அரஃபாவில் ஒன்று கூடுவதற்கான புறப்படுவார்கள்.

ஹஜ் என்பது அரஃபாவில் நிற்பது என்பது நபிமொழி.மதியம் நேரத்தில் அனைத்து ஹாஜிகளும் அரஃபாவில் ஒன்று கூடுவார்கள். மிகப்பெரிய மைதானமான அரஃபாவின் எல்லையிலிலுள்ள நமீரா மஸ்ஜிதில் நடைபெறும் தொழுகைக்கும் சொற்பொழிவிற்கும் சவூதி அரேபியாவின் முஃப்தி தலைமை தாங்குவார்.

லுஹர் தொழுகையும் அஸர் தொழுகையும் சேர்த்து தொழுதபிறகு முஃமின்கள் அரஃபா மைதானத்திலும் ஜபலுற்றஹ்மாவிலும் அழுதகண்களுடனும் வானை நோக்கி உயர்ந்த கைகளுடனும் பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து பரிபாலித்து வருபவனான வல்லமைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து ஹாஜிகள் கூட்டத்தோடு அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்கு புறப்படுவார்கள். முஸ்தலிஃபாவில் இன்று இரவு தங்கியபிறகு நாளை ஃபஜ்ர் தொழுகை முடிந்ததும் மினாவை நோக்கிச்செல்வார்கள்.

நாளை காலையில்தான் ஜம்ராவில் கல்லெறிதல் நடைபெறும். ஜம்ராவில் எறிவதற்கான சிறுகற்களை முஸ்தலிஃபாவிலிருந்து சேகரிப்பார்கள். கல்லெறிதலுக்கிடையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹாஜிகளின் பாதுகாப்பிற்காகவும் சவூதி ஹஜ் அமைச்சகம் முதவிஃபுகளுக்கு கட்டளைகளை பிறப்பித்துள்ளது.

நேற்று இரவில் மினாவிற்கு வந்த ஹாஜிகளை கடுமையான காலநிலை வரவேற்றது. இரவில் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் மதியவேளையில் ஆரம்பித்த மழை கடுமையாகவும் விட்டு விட்டும் பெய்தது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

24 நவ., 2009

துல் ஹஜ் முதல் பத்தின் சிறப்புக்கள்

புனித ரமழான் எம்மை கடந்து சென்றது. ரமழானை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதில் நாம் பல குறைகள் விட்டிருந்தோம். அதனை எண்ணி வேதனை அடைகின்றோம்.
ஆனால், கருணை மிக்க அல்லாஹ் தொடரான சந்தர்ப்பங்களை எமக்காக உருவாக்கித் தந்திருக்கிறான். இவற்றுள் ஒன்றுதான் நாம் சந்திக்க விருக்கும் துல்ஹஜ் மாத ஆரம்பப் பத்து நாட்களாகும். இந்த நாட்களின் சிறப்புக்களையும் இவற்றினை எவ்வாறு எமக்கும் எமது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம் என்பதனையும் இங்கு நோக்குவோம்.

துல் ஹஜ் முதன் பத்தின் சிறப்புக்கள்

1. அல்லாஹ் சத்தியம் பண்ணு கின்ற நாட்கள் : ஸூறதுல் பஜ்ரில் (அதிகாலை யின் மீதும் பத்து நாட்களின் இரவுகள் மீதும் சத்தியமாக) என வருவது அவற்றின் மகத்துவத்தினைக் காட்டும்.

2. அல்லாஹ்வின் பெயர்உச்சரிக் கப்படும் நாட்கள்ஸூறதுல் ஹஜ்ஜில் (கால்நடைகளை அருளியமைக்காக அல்லாஹ் வின் பெயரை நினைவுகூறிக் கொண்டு "குறிப்பிட்ட நாட்கள்" வருவார்கள்) இது மேற்படி பத்து நாட்களை குறிப்பிட்டே வருகிறது என இப்னு உமர் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் கருதுகின்றனர்.

3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் பத்து நாட்களில் வணக்க வழிபாடு களில் ஈடுபடுவது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாகும். அந்நாளில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமானது. ஒரு இரவு நின்று வணங்குவது (கியாமுல் லைல்) லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குவதற்கு ஈடானது. (திர்மிதி)இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் ‘அல்லாஹு அக்பர்’ ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ போன்ற திக்ரு களில் அதிகமாக ஈடுபடல், அத்தினங்களில் ஒருநாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமானது. அத்தினங்களில் செய்கின்ற நற் காரியங்களுக்கு 700 மடங்கு நன்மை வழங்கப்படுகின்றது."

4.அறபா தினம் ஹஜ் கிரியைகளின் அதிவிஷேட தினம் அறபாவாகும்அன்று பாவங்கள் மன் னிக்கப்படும். நரக விடுதலை வழங்கப்படும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: அறபா தினத்தில் (பிறை 9) நரகவாசிகளுக்கு விடுதலை அளிக்கப்படுவதுபோல வேறு எத்தினத்திலும் விடுதலை அளிக்கப்படுவதில்லை. உல கில் மிகச் சிறந்த நாட்கள் துல்ஹஜ் முதல் பத்து நாட்களாகும்.

5.அறுத்து பலியிடும் உழ்ஹிய்யா தினங்கள்சில அறிஞர்கள், இது வருடத்தில் சிறந்த தினம் என்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் லாஹ்விடத்தில் மகத்தான தினம் உயிர் பலி கொடுக்கும் தினமாகும்... (ஸஹீஹ் அல்பானி)

6.அடிப்படையான இபாதத்துகள் இங்கு ஒன்றுபட்டு வருகின்றன.இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: துல்ஹஜ் முதல் பத்து விஷேடம் பெறுவதற்கான காரணம், அத்தினங்களில் தலையாய இபாதத்க ளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய நான் கும் ஒன்றுபடுவதாகும். இத்தினங்கள் வந்துவிட்டால், ஸஈத் பின் ஸுபைர் (ரழி) அவர்கள் மிகவும் கடு மையாக நிறைய நல்லமல்களில் ஈடுபடுவார்கள். (தாரமி)

7. நல்லமல்கள் செய்வதற்கு அல் லாஹ்வுக்கு மிக விருப்பமான தினங்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள் "நல்லமல்கள் செய்கின்ற நாட்களிலேயே அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்கள் இந்த நாட்களாகும். அப்போது ஸஹாபாக்கள், அல் லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் போராடுவது எப்படி என்று கேட்க, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிட இதுவே சிறப்புக்குரி யது. ஆனால், ஒருவர் தனது உயிரையும் பொருளையும் வைத்துப் போராடி மரணிக்கின்றார் எனில், அவர் நிலை வேறு" என பதிலளித்தார்கள்.

இந்த நாட்களில் செய்யக்கூடிய சிறப்பான நற்செயல்கள்

1. ஹஜ், உம்ரா கிரியைகள்: ஒரு உம்ரா அதற்கு முந்திய உம்ராவுக்கு இடைப் பட்ட காலத்திற்குரிய குற்றப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக் கான கூலி சுவனத்தை தவிர, வேறு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (முத்தபகுன் அலைஹி)

2.அறபா தினத்தில் நோற்கும் நோன்பினால் அல்லாஹ் அதற்கு முந்திய வருடத்திற்கும் பிந்திய வருடத்திற்குமான குற்றப்பரிகாரமாக அதனை ஆக்கு கின்றான். (முஸ்லிம்)பத்து நாட்களுக்கான நோன்பு மிகவுமே விரும்பத்தக்கது என்கிறார் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்.

3.பர்ளான, ஸுன்னத்தான தொழு கைகளை உரிய நேரத்தில் தொழுதல்.4. அல்லாஹு அக்பர், அல்ஹம் துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் முதலிய திக்ருகளை அதிகமாக கூறுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மகத்துவம் நன்மை செய்வதில் அவனுக்கு அதிக விருப்ப முடைய நாட்கள் இந்த பத்து நாட் களை விட வேறில்லை. ஆகவே, இதில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல் லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் முதலியவற்றை அதிமாகச் சொல்லிக் கொள்ளுங்கள். (அஹ்மத்)

5.இத்தினங்களில் ‘ஸதகா’ கொடுப்பது மிக சிறந்ததாகும்.

6.பெருநாள் தொழுகைக்காக தூய்மையான ஆடைகளை அணிந்து நேர காலத் துடன் தொழும் இடத்திற்குச் சமூகமளித்தல்.

7.உழ்ஹிய்யா கொடுத்தல்: இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாஹ் எனவும் வசதியுள்ளவர்களுக்கு கட்டாயக் கடமை என்றும் பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வசதியிருந்தும் யார் உழ்ஹிய்யா கொடுக்க வில்லையோ அவர் நாம் தொழுகின்ற இடத்தினை நெருங்கவே கூடாது. (அஹ்மத், இப்னு மாஜா)

source:meelparvai.net
read more...