சிந்தனைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மார்., 2011

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டளித்த முஸ்லிம்கள் சமீப ஆண்டுகளாக அரசியல் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கருத்து வேகமாக ஒலித்து வருகிறது. திருமாவளவனையும் ராமதாசையும் இவர்கள் உதாரணமாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெளியிட்டனர்.

பெரும்பான்மையினரின் கூற்று 'நாம் இனியும் யாருக்கும் ஓட்டளித்து ஏமாறக் கூடாது. நாம் தனித்து போட்டியிட வேண்டும்' என்பதாகவே இருந்தது. கருத்துக்களை தாங்கள் கூறிய அடுத்த நிமிடத்திலேயே மற்றவர்கள் இதனை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்பினர். இது நடக்காது போகவே முஸ்லிம்களின் இயக்கங்களையும் தலைவர்களையும் வசைமாறி பொழிய ஆரம்பித்தனர்.

ஆனால் இனியும் இவர்கள் இதனை தொடர முடியாது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக தாங்கள் போட்டியிடப் போகும் ஆறு தொகுதிகளையும் அறிவித்துள்ளனர். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்கிளல் வெற்றி எண்ணிக்கையை தொடங்கியுள்ளனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு கட்சி அல்ல. தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி.

முஸ்லிம்களுக்கு ஐந்து சதவிகித இடஒதுக்கீடு, வக்ஃப் சொத்துக்களை முறைப்படுத்துதல், தேர்தலில் முஸ்லிம்களுக்கு பத்து தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்வது என்ற நிலைப்பாட்டை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த கட்சியும் முன் வராத நிலையில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எடுத்துள்ளது.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை என்பதை தான் இக்கட்சிகளின் நிலைப்பாடு நமக்கு உணர்த்துகிறது. இச்சூழலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முடிவு சரியான முடிவாகவே நமக்கு படுகிறது.
தற்போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது. இனியும் கட்சிகளும் இயக்கங்களும் எதுவும் செய்யவில்லை என்று காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இனி இவர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதுதான் மக்களின் கடமை.

தேர்தலில் போட்டியிடும் மற்ற முஸ்லிம் கட்சிகளும், பிற கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களும் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை முற்றிலும் விரும்பாத திராவிட கட்சிகளும் அவர்களின் கூட்டாளிகளும் நிச்சயம் இந்த முயற்சியை மேற்கொள்வார்கள். எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் தங்களின் சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களையோ அல்லது தங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு இத்தொகுதிகளை வழங்குவதற்கு முன்வருவார்கள். இந்த வலையில் முஸ்லிம்கள் சிக்கி விடக்கூடாது.

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்களும் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் சிலரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு சமுதாய நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

சந்திக்கும் முதல் தேர்தலிலேயே வெற்றியை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் எதுவும் கிடையாது. இனியும் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பிற கட்சிகள் உணர வேண்டும். அதற்கு இத்தேர்தலை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.

'எதுக்குங்க தனியா நிக்கனும்?''எதுக்கு கூட்டணியில நிக்கனும்?' என்று ஹாயாக உட்கார்ந்து கொண்டு கேள்விகளை கேட்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். அரசியல் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதை இன்று பாமரர்களும் அறிந்து கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இன்னுமா உறக்கம்?
சிந்தனைக்கு
-ஏர்வை ரியாஸ்
read more...

ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!.....

11-மார்ச்-2011 இப்படியொரு வெள்ளிக்கிழமை ஜப்பானியர்களுக்கு விடியாமல் இருந்திருக்கலாம். 140 வருடங்களில் இல்லாத அளவிற்கு இயற்கையின் பேரழிவு சுனாமி என்ற ஆழிப்பேரலையின் வடிவில் ஜப்பானின் வடகிழக்கு நகரமான செண்டாயை தாக்கியுள்ளது.

8.9 ரிக்டர் அளவில் பெரும் நில நடுக்கத்தினையடுத்து 02:46 பிற்பகல் உள்ளூர் மணியளவில் முதலில் சுனாமி தாக்கியுள்ளது.
பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது.

இன்று அதிகாலையிலேயே சென்னையை ஒரு சுனாமி தாக்குகிறது என்ற செய்தி அறிந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தால் மதியம் ஜப்பானில் மிகக் கொடூரமான நில நடுக்கம் என்ற செய்தி உலக மக்களை எல்லாம் கவலைக்குள்ளாக்கியது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் கொடூர பாதிப்புகளை பார்த்த அதிர்ச்சியில் உள்ளூர் செய்திகள் நம் மனதைவிட்டு நீங்கி விட்டது.

வாழ்நாளிலே எவரும் பார்த்திராத மனதை உருக வைக்கும் காட்சிகளாக தொடர்ந்து வருகிறது. வானத்தில் பறந்து கொண்டே நகரின் அழிவினை காணொளியில் பதிவு செய்து நேரடியாக அனைத்து தேசிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.

கற்பனைக்கு எட்டாத அழிவுகள். நகரத்திற்குள் புகுந்த சுனாமி ஆழிப்பேரலை கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, மார்பில் ஒன்று என அப்பிக் கொண்ட பிள்ளைகளை ஊருக்கு அழைத்துச் செல்லும் அவசர தாய் போல அரித்து கொண்டு செல்கிறது, இருப்பிடம் மாற்றி கொண்ட கடல் நகரத்திற்குள் புகை போல பரவியது, அது பயணிக்கும் எல்லா நிலப் பரப்புகளையும் தனது வடிவமாகவே மாற்றுகிறது. நகரமே நகர்ந்து செல்கிறது. வீடுகளும்,மாளிகைகளும், கட்டங்களும், வாகனங்களும், படகுகளும் மென்று தின்ற சக்கைகளாக, மந்திரத்திற்கு கட்டுப்பட்டு ராட்ச ஆழிஅலைகளுடனே மறு பேச்சின்றி பயணிக்கிறது.

கடலலைகள் பயணிக்கும் முன்னர் அது கட்டடமாகவும், வாகனமாகவும், மனிதனென்றும் ,மிருகமென்றும் மரமென்றும் தனித் தனியாய் இருந்தது, கடல் அலைகள் அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்து ஒரு நாசகர கொள்ளைக்காரனாய் அனைத்தையும் இழுத்துக் கொண்டு செல்கிறது. பேரலை கடந்து போகும் இடமெல்லாம் உயிர் எது, உடல் எது ,வலி எது என்று எதுவுமாய் இல்லாமல் ஒரு பரமபொருள் திராவக கலவையாக அலைந்து அலைந்து அழித்து எடுக்கிறது.

ஜப்பானின் பல நகரங்கள் மிதக்கும் தண்ணீர் கலவை ஆனது. ஒரு பக்கம் பேரலை நீரின் அடித்து துவைக்கும் ஆக்கிரமிப்புகள், இன்னொரு பக்கம் உருவங்களை உருக்குலைத்து குழுக்கி எடுக்கும் நிலநடுக்கங்கள், உயரங்கள் எல்லாம் குப்பைகளாகவும் இரத்தங்களாகவும் சிதைந்து கிடக்கிறது. கட்டடங்கள் எல்லாம் குழந்தைகளின் தொட்டில்களாய் ஆடுகிறது.

கழுத்தளவு தண்ணீரில் மிதக்கும் போது தலையில் நெருப்பு பற்றி எரிவது. போன்ற வினோத காட்சிகள், சுற்றிலும் சுனாமி வெள்ளம் அடித்து செல்கிறது, நகரங்கள் பற்றி எரிகிறது. கோபுரங்கள் மண்ணானது, மண்ணெல்லாம் தண்ணீரானது அது மக்களின் கண்ணீரானது. நில நடுக்கத்தை தொடர்ந்த தீ விபத்துக்களால் பற்றி எரியும் நகரங்கள், உடைந்து நொருங்கும் கட்டிடங்கள், அடித்துச் செல்லும் சுனாமி ஆழிப்பேரலை என்று எல்லா வகையிலும் அந்த சின்னஞ் சிறு நாட்டிற்கு பேராபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் மின் உற்பத்திகளில் முக்கிய பங்களிக்கும் ஐந்து அனுமின் நிலையங்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று வெடித்து அணுக் கதிரியக்கத்தை வெளியேற்ற ஆரம்பித்து விட்டது. புவிஅதிர்வுகளையும், சுனாமி அலைகளையும் கடந்து உயிர் பிழைத்த மக்கள் அடுத்து அணு உலைகள் வெளிப்படுத்த இருக்கும் கதிரியக்கத்தை நினைத்து அச்சமடைய வேண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாய் வெளியேறி வருகின்றனர். சுற்றிலும் தண்ணீர் மரணம் சூழப்பட்டபோது மிஞ்சி இருக்கும் மக்கள் எந்த திசைகளும் இனி தன் உயிரை காப்பாற்ற போவது இல்லை என்ற நிலையில் அறுக்கபோகும் ஆட்டு குட்டியைப் போல மிரண்டு அங்கேயே நிற்கின்றனர்...

வானிலிருந்து பார்க்கையில் தரையில் பரவும் ஒரு திரவமாக நகரத்தை அரித்து செல்கிறது. இழுத்து செல்லும் தண்ணீர் கலவையில் எத்தனை உடல்களும், உயிர்களும், உறவுகளும், பாசங்களும், ஆணவங்களும், கனவுகளும் மிதக்கின்றன என்பதை யார் அறிவார்?...

பாதசாரிகள் முதல் நாடாளும் பிரதமர் வரை எல்லோரும் மரணத்தை அருகில் பார்த்த அதிச்சியில் உறைந்து போய் உள்ளனர். இறந்தவர்களை விட படுகாயம் பட்டு உயிர் பிழைத்தவர்களின் துயரம் பெரும் கொடுமை, அன்பானவர்களை இழந்து அனாதையாய், உணவின்றி, உறைவிடமின்றி, தூக்கமின்றி, எந்த அடிப்படை தேவைகளும் இன்றி மீண்டும் ஒரு முறை இந்த உலகத்தில் தன் இருப்பை பதிவு செய்யபோகும் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது.

அத்தனை பேரிடர்களுக்கு பின்னும் பல உயிர்களை பறிகொடுத்தும், மிகவும் மனத் தைரியத்துடன் வாழ்கையை தொடங்குவதற்கு மீண்டும் தன் நாட்டை உலகத்தின் முன்னோடி நாடாய் மீண்டும் புணரமைக்க போராடிவரும் ஜப்பானிய மக்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு துணையாய் உலக நாடுகள் முன்வரவேண்டும்.

சுனாமி என்ற வார்தையே ஜப்பானியர்களுடையது தான். இதுவரை 195 முறையேனும் அவர்கள் சுனாமி பேரழிவுகளை சந்தித்து வந்திருப்பார்கள். ஜப்பானிய மக்கள் தங்களது இளம் வயதிலிருந்தே இயற்கை இடர்பாடுகளுக்கிடையே வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக மனதளவில் எப்பொழுதுமே தங்களை தயார் நிலையிலேயே வைத்துகொள்கிறார்கள். அவர்களின் கட்டங்களும், உள்கட்டமைப்புகளும் இயற்கை போரழிவுகளுக்கு தாக்குபிடிக்கும் விதமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதன் இயற்கையின் ஆதிக்கத்தின் பிடியில் செயலற்றவனாய் முடங்கிவிடுகிறான்.

ஓய்வறியாது எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கும் ஜப்பானை இன்று ஆழியலை எந்த ஒரு வரையரையும் இல்லாமல் இயக்கிவருகிறது.
மரணம் எப்பொழுதும் வரலாம் என்ற போதும் தங்களின் தன்னம்பிக்கையினாலும் விடா முயற்சியினாலும் அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிலப்பரப்பில் மிகவும் குட்டி நாடென்றாலும், இயற்கை அழிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்று உலகில் பயன்படுத்தும் எல்லா மின்னனு பொருட்களும் கார்களும் ஜப்பானியர்களுடையது, எல்லா நூற்றாண்டுகளுக்குமான தொழில் நுட்பத் தாய் ஜப்பான். மீண்டும் துளிர்த்தெழும் ஜப்பான் தன்னம்பிக்கையோடு...

இன்னொரு சுனாமி சென்னையை தாக்கியதாய் குறிப்பிட்டு இருந்தேன் அது வேறெங்கும் இல்லை முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் புகுந்த சிபிஐ வேட்டை தான்.

ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ அதிகாரிகள்., டிபி ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை காலையிலேயே விசாரிக்கத் தொடங்கினர். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளின் உரிமையாளர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாவும் விசாரிக்கப்பட்டார். இதே கனிமொழியை வைத்து தான் 63 தொகுதிகளையும் மிரட்டி வாங்கியது காங்கிரஸ், இப்பொழுது எந்தெந்த வெற்றித் தொகுதிகள் வேண்டும் என்று செல்லமாய் மிரட்டுவதற்காக இந்த சிபிஐ சுனாமி இருக்கலாம், இல்லை உச்ச நீதிமன்றம் போட்ட போடில் சென்னையை முற்றுக்கையிட்டிருக்கலாம் சிபிஐ.

ஆக மொத்தம் உள்ளூரில் ஒருவனை அடிபணிய வைப்பதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் இல்லை என்றால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவார்கள். அது போலத்தான் இங்கு சிபிஐயை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தனது அடியாள் போல் வைத்துள்ளது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து கருணாநிதி ஒரு சுனாமி ஒன்றை டெல்லி நோக்கி அனுப்பினார். சமிபத்தில் சென்னையை கலங்கடித்த சுனாமி காங்கிரஸிடமிருந்து திருப்பி விடப்பட்டது. தமிழுக்காக சாவேன் என்று இடியாய் முழங்கிய தலைவன். மனிதகுல விரோதி ராசபக்சே தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்த போதும் காங்கிரஸுடன் கை கோர்த்து உல்லாசமாய் திரிந்த தமிழ் இனத் தலைவன் தன் குடும்பத்திற்குள் புகுந்த சுனாமியால் இன்று தகர்ந்துபோய் கிடக்கின்றார்.

இனி அடுத்தடுத்து வரப்போகும் சுனாமிகளை நினைத்து நடுங்கி போய் உள்ளார் கருணாநிதி. இது வழக்கமான அரசியல் மோடி வித்தைகள் தான். மற்றபடி இந்தியர்களுக்கு ஊழல் சுனாமிகள் புதுமையானது ஒன்றும் இல்லை, ஜப்பானியர்கள் எப்படி இயற்கை சீரழிவுகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்களோ அதே போல் இந்தியர்களும் தங்களை சூழ்ந்துள்ள ஊழல் சுனாமிகளுக்குள்ளேயே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது இயற்கை பேரழிவு ஏற்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களை கொண்டது இந்தியா, அதில் தான் உலகளவில் பட்டினிச் சாவுகள் அதிகமாக நடைபெறுகிறது. உணவு உற்பத்தியில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் உணவிற்கு பதிலாய் எலிகளை மற்றும் மலத்தை திண்ணும் கொடுமையும் நடக்கிறது.

தொழிற் துறைகளில் முன்னோடியாய் இருக்கும் நம் நாட்டில் தான் வேலையின்மை அதிகமாய் இருக்கிறது. நடுத்தர மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றும் இந்த சமூகத்தில் தான் உலகமே அதியசயக்கும் ஊழல்களும், பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களும் உள்ளது.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகி கொண்டே வருகிறது. மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது பேரழிவுகள் நிச்சயமாக நடைபெறும்.

இந்தியாவில் சமீபத்திய ஊழல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக ஊழல் அளவுகோல்களில் பதிவாகியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பசி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விரக்தி, ஆதிக்க, அதிகார மையங்களின் வேட்டை, கேலி கூத்தாகும் ஜனநாயக மாட்சிமை என வாழ்கையை சூன்யமாக்கும் பல சுனாமிகளை இந்தியாவும் தினம் தோறும் சந்தித்து வருகிறது.

எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது உறுதி அதற்குள் நாம் இந்த சமூகத்தில் எப்படியான வாழ்கையை நாம் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நம் கடமை.

ஒவ்வொருவருக்குள்ளும் உற்பத்தியாகும் சுனாமி ஒருசேர கொதித்தெழும் பொழுதுதான் சமூகப் புரட்சி எனும் சுனாமி உருவாகும்.

மால்கம்-X ஃபாரூக்
read more...

9 மார்., 2011

பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்

ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.

ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார். அவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின்
சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், நமது வாழ்க்கையில் இதைப்போல் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பிறரின் பொறுமையை சோதிப்பதே பலருடைய வழக்கமாகிவிட்டது. இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் மறந்து விடுகின்றனர்.

நமது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ்லாத்தின் பண்புகள் மிளிர வேண்டும். அப்பொழுது பலர் இக்கொள்கையின்பால் ஈர்க்கப்படுவார்கள். அதற்கு ஒரு உதாரணம்:

துபையில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்கும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுச் செய்திருந்தது. இந்நிறுவனம் பெண்களால் நடத்தப்படுவதாகும். நிகழ்ச்சியில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.

இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள என்னக் காரணம் என்பதுக் குறித்து அங்கே குழுமியிருந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ஆயினும், இங்கே ஒரு நிகழ்வை எடுத்தியம்ப விழைகிறேன்:

பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம். அவர்களின் வீட்டுப் பணிகளுக்கு உதவுவதற்காக மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். அந்த பாகிஸ்தான் குடும்பத்தினர் பிற மனிதர்களிடம் பண்புடனும், பாசத்துடனும், கனிவோடும் நடந்துக் கொள்பவர்களாக இருந்தனர். இந்த பணிப் பெண்ணிடமும் பாரபட்சமின்றி கனிவோடு பழகுபவர்களாகயிருந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல பணிப் பெண்ணிற்கு அக்குடும்பத்துடனான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. அவர்களுடைய நடத்தை பணிப் பெண்ணை பரவசப்படுத்துகிறது. ஏன் இவர்கள் இவ்வளவு கனிவோடும், பண்போடும் நடந்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுகிறது. தொடர்ந்து அவர்களை கண்காணிக்க ஆரம்பிக்கிறாள்.

ஒட்டுமொத்தக் குடும்பமும் தொழுகை உள்பட இஸ்லாத்தின் கடமைகள், கொள்கையின் மீது காட்டும் ஈடுபாட்டையும், நெருக்கத்தையும் அப்பணிப் பெண் கவனிக்கிறாள். இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிடுகின்றன.

ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு! ஆம் அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், முஹம்மது நபி(ஸல்...) அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார்.

இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் ஒரு பெண்மணியின் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது!

ஆம்!நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் முறைகூட ’தஃவா’வாக மாறிவிடுகிறது. ஆகவே, நாம் நமது செயல்களை இஸ்லாத்தின் உயரிய பண்புகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தவர்களாகவும், அதேவேளையில் பிறரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பவர்களாகவும் மாறமுடியும். இன்ஷா அல்லாஹ்.

இஸ்மாயீல், ஷார்ஜா
read more...

7 மார்., 2011

கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!

கல்லூரி நாட்களின் போது பர்தா அணிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல!' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம். சில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்!!' பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பர்தாக்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக நிற்பது தான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக அமைகின்றன.

பெண்களை போகப் பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட உலகில் பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கியது இஸ்லாம். பெண்கள் தங்கள் உடலை அந்நிய ஆண்கள் முன் காட்டுவதை கண்டிக்கும் இஸ்லாம் அதற்கான வழிமுறையாக கூறியதுதான் ஹிஜாப் என்னும் அழகிய நடைமுறை.

பிரத்தியேகமாக ஒரு ஆடையைதான் ஹிஜாபாக அணிய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எதுவும் கிடையாது. பெண்கள் சாதாரணமாக அணியும் ஆடைகள் இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் அதுவே போதுமானதுதான். ஆனால் நடைமுறையில் ஒரு ஆடை சந்தையில் இருப்பதால் பெண்கள் அதனை அணிந்து கொள்கின்றனர்.

ஆனால் தற்போது சந்தையில் உள்ள பர்தாக்களின் நிலை என்ன? இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சீரழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் மேற்குலகு முஸ்லிம் பெண்கள் கண்ணியமாக ஆடை அணிவதை கண்டு சும்மா இருக்குமா? பர்தாக்களிலும் தங்கள் கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்தார்கள். ஆரம்ப நாட்களில் இருந்தது போன்று வெறும் கறுப்பு கலரில் எத்தகைய அலங்காரமும் இல்லாத பர்தாக்களை இன்று உங்களால் காண இயலாது. இத்தகைய ஒரு பர்தாவை இன்று கடைகளில் சென்று கேட்டால் கடைக்காரர் ஏதோ ஒரு வேற்றுக் கிரக வாசியை பார்ப்பது போல் நம்மை பார்க்கிறார்.

பல விதமான அலங்காரம் கொண்ட, இறுக்கமாக தைக்கப்பட்ட, பல வண்ணங்களில் ஸ்கார்ப்களை கொண்ட ஆடைகள் தான் இன்று பர்தாக்களாக காட்சி தருகின்றன. அதிலும் இவர்கள் தலையில் அணியும் ஸ்கார்ப் கழுத்திற்கு கீழ் வருவதே இல்லை. இத்தகைய ஒரு பர்தாவை அணிவதற்கு பதிலாக சாதாரண உடையை அணியலாம்.

மேற்குலகின் இந்த சதியில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஹிஜாபை முறையாக பேண வேண்டும். இதில் ஆண்களுக்கும் கணிசமான அளவு பங்கு இருக்கிறது. ஹிஜாபின் முக்கியத்துவத்தை பெண்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் பின்னர் அவர்களை பர்தாவை அணிய வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் பெண் பேசி முடித்தவுடனே சம்பிரதாயமாக ஒரு ஜிகு ஜிகு பர்தாவை எடுத்து அனுப்பினால் என்ன பிரயோஜனம்? தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் சகோதரிக்கும் பர்தாவின் முறையை விளக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பர்தாவை ஆபாசமாக காட்டிய பெருமை சினிமாக்களுக்கு உண்டு என்றால் அதற்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை நமது பெண்களுக்கு உண்டு. இருபது வருடங்களுக்கு முன்னர் நமது ஊர்களில் எல்லாம் நாம் இந்த பர்தா என்ற ஆடையை காண இயலாது. ஆனால் அப்பெண்களிடம் ஹிஜாபை பேணும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்றோ பர்தா அணியாத இஸ்லாமிய பெண்களை பார்ப்பது அரிது. ஆனால்...
சிந்தனைக்கு
- ஏர்வை ரியாஸ்
read more...

1 மார்., 2011

குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள்!

"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…"
சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறியது இது.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…
"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் சமத்தா குடிக்கணும் என்ன…" – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.

"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான்(Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

"நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வருகின்றது.
ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வருகிறது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சுற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.

கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.

குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.
MSAH

read more...

28 பிப்., 2011

தொலைந்து போன வருடங்கள்!!

கல்லூரியை முடித்து விட்டு வேலையை தேடிக்கொண்டிருந்த நாட்கள். நண்பர்களுடன் ஒன்றாக இருந்து பத்திரிகைகளை புரட்டுவதும் இண்டர்வியூக்கு செல்வதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. வேலை இன்றி திரும்பும் நண்பனை வாஞ்சையுடன் வரவேற்பதும் வேலை கிடைத்தவை 'உன்னைய சங்கத்துல இருந்து நீக்கிட்டோம்' என்றும் கூறியும் நகர்ந்து கொண்டிருந்தன நாட்கள்.

என்ன தான் சிரித்து பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் கழிந்து செல்லச் செல்ல வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்தோம். சிலருக்கு வேலை உடனே கிடைத்தது. சிலருக்கு பல மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. எப்படியோ எல்லோருக்கும் வேலை கிடைத்தது, சம்பளமும் கிடைத்தது.

சில வருடங்கள் முன் நடைபெற்ற இந்த சம்பவங்கள் சில தினங்களுக்கு முன் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிய போது மீண்டும் மனதில் வந்தன. குற்றம் சாட்டப்பட்ட 94 நபர்களில் 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகள்!!

அன்று சில மாதங்கள் சும்மா இருப்பதையே வாழ்க்கையை தொலைத்து கொள்வதாக நினைத்தோமே... ஆனால் இவர்கள் தொலைத்ததோ ஒன்பது வருடங்கள். எவ்வித குற்றமும் செய்யாமல் ஒன்பது ஆண்டுகள் இந்த அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சிறையில் கிடைக்கும் சொகுசுகளா இவர்களுக்கு வழங்கப்பட்டது? சித்திரவதைகளும் நிந்தனைகளும்தான் இவர்களை ஒன்பது ஆண்டுகள் வாட்டி வதைத்தன.

அதிலும் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் இன்னும் கனத்தது. சில நாட்கள் வேலையும் சம்பளமும் இல்லாமல் இருந்தாலே என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.

பெற்றோர்களின் சம்பாத்தியமும் ஆதரவும் இருந்ததால் அன்று நாங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போதும் சாப்பாட்டிற்கு பிரச்சனையில்லை. ஆனால் இவர்களின் நிலை?? பலரும் தினக்கூலிகள். சம்பாத்தியம் இருந்தால் அன்று வீட்டில் அடுப்பெரியும். குடும்பத்தின் ஆண் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தால் அக்குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கும்?

மனக்கஷ்டம் ஒரு புறம் என்றால், மற்றொரும் புறம் பொருளாதார சிக்கல். உண்மையில் சிக்கித்தான் போனார்கள் இந்த குடும்பத்தின் பெண்மணிகள். சாப்பாட்டிற்கே வழி இல்லை எனும் பொழுது குழந்தைகளுக்கு எங்கிருந்து கல்வி வழங்குவது? குடும்பத்தின் சுமையை ஏற்ற இவர்கள் வீட்டு வேலைகளை செய்து சொற்பமாக சம்பாதித்து குடும்பத்தை நடத்தினர்.

மகன் அநியாயமாக சிறையில் இருக்கும் ஏக்கத்தில் உயிரை விட்டனர் சில தந்தைமார்கள். எல்லாம் கடந்து தற்போது ஒன்பது வருடங்களுக்க பிறகு நிரபராதி என்ற அறிவிப்பு!

இது ஏதோ குஜராத்தில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. தமிழக சிறைகளில் பதிமூன்று வருடங்களாக இருக்கும் அப்பாவிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'நாங்கள்தான் குண்டு வைத்தோம்' என்று அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய போதும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்யுக்தா எக்ஸ்பிரஸ் மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கண்ணீர் கதைகள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இழந்த இவர்களின் ஒன்பது வருடங்களை இவர்களுக்கு திரும்ப கொடுக்கப்போவது யார்?

இந்த அப்பாவிகளைக் கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இவர்கள் குடியிருக்க வாடகை வீடு வழங்கப்போவது யார்?

இவர்களுக்கு இனி வேலை கொடுக்கப் போவது யார்?

சொந்த தொழில் செய்தாலும் இவர்களுடன் வியாபார உறவுகளை வைத்துக்கொள்வது யார்?

தீவிரவாதி என இத்தனை வருடங்கள் அறியப்பட்ட இவர்களை ஏற்றுக்கொள்ள சமுதாயம் தயாராக இருக்கிறதா?

இவர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள சமுதாயம் தயாராக உள்ளதா?

இன்னும் ஏராளமான கேள்விகள்.. விடை தெரியாத கேள்விகள்.

செய்தியை கேள்விப்பட்ட நாம் சிறிது அனுதாபத்தை கொட்டிவிட்டு நமது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை... கேள்வி குறியுடன் முடிக்க நான் விரும்பவில்லை.

சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்

read more...

2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டெல்லி,பிப்.28:இன்று 2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும்.

2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும்

கஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.200 கோடி

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கேரள மாநிலம் மலப்புறம் மற்றும் மே.வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் கேம்பஸ் அமைக்க ரூ.50 கோடி வீதம் ஒதுக்கீடு.

உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதம் மானியம்

விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை அதிகரிக்க முடிவு

நாடு முழுவதும் புதிதாக 15 உணவுப் பூங்கா திறக்க முடிவு

மண்ணெண்ணெய், உரத்திற்கு நேரடி வரி மானியம்

வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு

வீட்டுக்கடன் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

பாரத் நிர்மாண் திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கல்வி முதலீட்டு தொகை 24 சதம் உயர்த்தி நடப்பாண்டில் 52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கீடு.

அங்கன்வாடி:ஊழியர்களுக்கு 1500 லிருந்து 3 ஆயிரமாக ஊதிய உயர்வு

சர்வசிக்ச அபியான் ( அனைவருக்கும் கல்வி ) திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர 5 அம்ச திட்டம்

கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

முதியோர் உதவி பென்சன் திட்டத்தில் வயது (65 ல் இருந்து 60 வயதாக) வரம்பு தளர்வு

உணவுப் பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்ற உறுதி

தாக்குதலில் காயத்திற்குள்ளாகும் பாதுகாப்பு படை வீரர்களின் கருணைத் தொகை உயர்வு

நதிகள் சீரமைப்பு செய்ய சிறப்பு திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி.

நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த சிறப்பு ( 25
முதல் 30 கோடி வரை) திட்டம்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.60 லட்சத்தில் இருந்து 1.80 லட்சமாக உயர்வு

80 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு ரூ.500 உதவித்தொகை

அடிப்படை உணவு மற்றும் எரிபொருளுக்கு சுங்கவரி, ‌சேவை வரியில் மாற்றம் இல்லை

மூத்த குடிமக்களுக்கு வரிவிதிப்பில் விதிவிலக்கு

இரும்பு ,சிமெண்ட் உற்பத்தி வரியில் சலுகை

சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான பலகை இறக்குமதி வரி ரத்து

திரைப்படத்துறையினருக்கு சலுகை

விமான கட்டண சேவை வரி உயர்வு
read more...

21 பிப்., 2011

எங்கே செல்கிறது நமது கலாச்சாரம்?

டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பல்கலைக்கழகத்தின் விடுதியின் அறை ஒன்றில் மாணவன் ஒருவன் மாணவி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியுலகிற்கு வந்தன. இந்த வீடியோ ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியே கசிந்தவுடன் கல்லூரி நிர்வாகம் சிடியை கைப்பற்றியது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக(!) செல்போன்கள் மூலம் வேகமாக இந்த காட்சிகள் பரவின. ஆபாச வீடியோக்களை வைத்து வியாபாரம் செய்யும் குழுக்களால் இது எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற இந்த கேவலமான செயல் நமது நாட்டின் கலாச்சாரம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

இது போன்ற ஒழுக்க கேடுகள் இனியும் நடைபெறாமல் தடுக்க கல்லூரி நிர்வாகம் சில விதிமுறைகளை விதித்தது. இரவு 10.30 மணிக்கு மேல் வெளியில் உள்ளவர்கள் விடுதிக்கு வரக்கூடாது, இரவு 10.30 மணிக்கு மேல் மாணவர்கள் விடுதிக்கு மாணவிகள் செல்லக் கூடாது, மாணவியர் விடுதிக்கு மாணவர்கள் எப்போதும் செல்லக் கூடாது என்பன புதிய விதிகளாக விதிக்கப்பட்டன. உடனே இதற்கு பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வேறு யாருமல்ல... கல்லூரி மாணவர்கள்தான்!! மாணவர்கள் விடுதி நிர்வாகியின் கட்டிடத்தை முற்றுகையிட்டவுடன் கல்லூரி நிர்வாகமும் புதிய விதிமுறைகளை திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்த விதிகள் ஏற்கெனவே ஏட்டளவில் உள்ளன. இதனை தாங்கள் ஒரு போதும் பின்பற்றப்போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் போது அதனை விதிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்களின் இச்செயல் பெரும் அதிர்ச்சியை தருகிறது.

மாணவர்களின் விடுதியில் மாணவிகளுக்கு என்ன வேலை?? பெண்களுக்கு கல்வி அவசியம்தான், அதற்காக அவர்கள் தங்களின் ஒழுக்கத்தையும் கற்பையும் தான் கட்டணமாக செலுத்த வேண்டுமா? மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டிய கல்வி நிலையங்களின் நிலை இவ்வாறு உள்ளது. அடுத்து வளரக்கூடிய தலைமுறை எந்த நிலையில் வளருவார்கள் என்ற கேள்விதான் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து பெற்றோர்களின் மனதிலும் உள்ளது.

பள்ளிகளும் இதே நிலையில்தான் உள்ளன. மாணவர்களும் மாணவிகளும் ஒரே அறையில் தங்குவது, கேளிக்கைகள் என்ற பெயரில் கும்மாளம் போடுவது இதுதான் இன்றைய கல்லூரி நாட்களின் அடையாளமாக இருக்கின்றன. சில மாணவிகள் அணிந்து வரும் ஆடைகள் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா இல்லை பேஷன் ஷோவிற்கு வருகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதனை எல்லாம் தவறு என்று யாரேனும் சொன்னால் அவரை இருபொத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்வதற்கு லாயக்கற்ற ஒரு மனிதனாகவே மற்றவர்கள் பார்க்கின்றனர்.

பாரம்பரியமிக்க நமது கலாச்சாரம் தற்போது எந்த குழியில் புதைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

இந்நிலைக்கு யார் காரணம்?
பிள்ளைகளுக்கு அளவிற்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்து அவர்களை மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கும் பெற்றோர்களா?

பாடம் எடுப்பது மட்டும்தான் எங்களின் வேலை என்று கடமைக்காக செயல்படும் ஆசிரியர்களும் பேராசிரியர்களுமா?

இல்லை தங்களை நாகரீகத்தின் புதிய பரிணாமமாக நினைக்கும் மாணவ சமுதாயமா?

எது எப்படியோ, நிலைமை எல்லையை மீறி மோசமாகி விட்டது என்பது மட்டும் உண்மை. தற்போதைய நிலையை பார்க்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்னர் மௌலானா மௌதூதி அவர்கள் கேட்ட கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது... 'பள்ளிக்கூடங்களா? பலிபீடங்களா?'
சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்
read more...

14 பிப்., 2011

குற்றவாளிகளின் தேசமா நாம்??

ஊழல்... எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நம் நாட்டில் மிகவும் மலிந்து விட்டது. இன்று எந்த ஊழல் வெளிப்படும் என்றுதான் தினமும் படுக்கையை விட்டு எழும்முன் நினைப்பு வருகிறது. ஊழல் செய்யப்பட்ட தொகைக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் வரும் என்று தலையை சொறியும் நிலையில்தான் அப்பாவி பொதுஜனம் உள்ளார். 1.76 இலட்சம் கோடி... இதனை எப்படி எழுதுவது என்று தெருக்கோடியில் நின்று கொண்டு அப்பாவி பொதுஜனம் யோசித்து கொண்டிருக்கும் போதே 2 லட்சம் கோடி ரூபாயில் இஸ்ரோ ஊழல் என்றொரு செய்தி வருகிறது!!

அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் அதிகாரிகள், ஊடகத்துறை பெரும் புள்ளிகள், தொழில் அதிபர்கள் என அனைவரும் தத்தமது பங்கை இதில் செவ்வனே செய்துள்ளனர்.

இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டவர்களுள் ஒருவர்தான் பி.ஜே.தாமஸ். கேரளா அரசின் தலைமை செயலாளர், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். இந்நிலையில் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையளராக இவர் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

கேரள அரசின் தலைமை செயலளாராக இருந்தபோது பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இவரை இப்பதவியில் நியமனம் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஊழல் கண்காணிப்பு ஆணையாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் சுஷ்மாவும் ஒருவர். இருந்த போதும் காங்கிரஸ் அரசு இவரை பரிந்துரை செய்து பதவியிலும் அமர்த்தியது. அன்றிலிருந்து இவ்விவகாரத்தில் கூச்சல் குழப்பம்தான்.


ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையளராக நியமிப்பது? இயல்பாக எழும் கேள்விதான். இறுதியாக இவரை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கோரியது. இதனை மறுத்த பி.ஜே.தாமஸ் சில தர்மசங்கடமான கேள்விகளை பத்திரிகையாளர் சந்திப்பிலும் உச்ச நீதி மன்றத்திலும் கேட்டு வைத்தார்.

ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்ந்து பதவியில் நீடித்திருக்கும் போது தான் மட்டும் எதற்காக பதவி விலக வேண்டும் என்றொரு வாதத்தை எடுத்து வைத்தார். எல்லா திருடர்களும் பதவியில் இருக்கும் போது என்னை மட்டும் எதற்கு பதவி விலக சொல்கிறீர்கள் என்பது போல் உள்ளது இவரது கேள்வி.

இவரின் மற்றொரு கேள்விதான் தற்போது விவாத பொருளாக மாற வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 545 உறுப்பினர்களில் 153 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றொரு தகவலை தாமஸ் வழங்கியுள்ளார். இவர்களில் சிலர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளன.

மாநில சட்டசபைகளிலும் இதே நிலைதான் உள்ளது. மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதும் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சட்டமன்ற உறுப்பினர் அந்த பெண்ணாலேயே கொலை செய்யப்படுவதும் தற்போது செய்திகளாக வருகின்றன. இவை எதனை உணர்த்துகின்றன?

குற்றவாளிகளை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் நமது நாட்டின் நிலை மோசமடைந்து விட்டதா? இல்லையென்றால் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் நல்ல எண்ணம் நம்மிடம் குறைந்துவிட்டதா? இல்லை, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாமும் லஞ்சம், ஊழல், மோசடி என அனைத்திலும் ஈடுபபட்டு வருகிறோம். நம்மில் ஒருவரைதானே நமது பிரதிநிதியாக தேர்வு செய்கிறோம், அவர் பின் எப்படி இருப்பார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டதா? இதில் ஏதேனும் ஒன்றுதான் நமது கேள்விக்கு பதில் என்றால் இது நமது நாட்டின் பரிதாப நிலையைதான் உணர்த்துகிறது.

இந்த நிலையில் இருந்துகொண்டு 2020ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று எப்படி கனவு காண்பது??

இன்று நம் மக்களில் சிலர் 'அரசியல் சாக்கடைதான்' என்று கூறி ஒதுங்கிவிட முனைகிறோம். ஆனால் இந்த சாக்கடையை அப்படியே விட்டுவிட்டால் அது ஒட்டுமொத்த தேசத்தையும் சீரழித்து விடும் என்பதை நாம் உணர வேண்டும்.

இரத்தத்தையும் உயிரையும் விலையாக கொடுத்த நமது முன்னோர்கள் நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தது நாட்டை சில பேர் கொள்ளையடிப்பதற்கு அல்ல. இது நமது நாடு, இதனை பாதுகாப்பதும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதும் நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

-சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்
read more...

7 பிப்., 2011

செவி சாய்ப்போம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை சரியில்லாதவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். பைத்தியத்திடம் சொல்லி என்ன பயன் என்று நினைத்தவர் சரி நம்முடைய ஆதங்கத்தையாவது கொட்டி தீர்ப்போம் என்று விஷயத்தை கூறினார். அனைத்தையும் கேட்ட அந்த மனநிலை சரியில்லாதவர் மிகவும் இயல்பாக, 'இவ்ளோதானா, மீதமுள்ள மூன்று டயர்களிலும் இருந்து ஒரு போல்ட்டை எடுத்து இந்த டயரில் மாட்டுங்கள். வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடும்' என்றார். கேட்ட ஓட்டுனர் திகைப்பில் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.

இது போன்ற நிறைய சம்பவங்களை நமது வாழ்வில் நாம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆலோசணை கேட்டு என்ன நடந்து விடப்போகிறது என்று நம்மில் பலர் எவரிடமும் ஆலோசணை கேட்பதே இல்லை. இன்னும் சிலர் என்னை விட இவருக்கு என்ன பெரிதாக தெரிந்து விடப்போகிறது, இவர் இப்படித்தான் கூறுவார் என்று தாங்களாகவே ஒரு கருத்தை வளர்த்துக் கொண்டு எவரையும் அணுகுவதில்லை.

இன்னும் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு விஷயம் குறித்த ஒரு கருத்தை ஒரு நபரிடம் கூட கேட்க மாட்டார்கள். ஆனால் அந்த வேலையை முடிப்பதற்கு பல மணிநேரம் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருப்பார்கள். வேறு சிலர் அவர்களின் கருத்தை கூறிவிட்டு மற்றவர்களின் கருத்துக்கு காத்திராமல் அவ்விடத்தை விட்டு செல்வதில் கவனமாக இருப்பார்கள். இதனால் வாழ்வில் நாம் இழந்தவை எத்தனை? சிறிது யோசித்து பார்ப்போம்.

இழந்தது பணம் என்றால் அதனை சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்தது நேரமும் வாழ்க்கையும் என்றால் என்ன செய்வது?

முறையான ஆலோசணை இல்லாமல் கல்வியில் வழி தவறியவர்கள் முதற்கொண்டு வாழ்க்கையில் வழி தவறிய பலரையும் நாம் கண்டு வருகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவம். எதிரிகளை எதிர்கொள்வதற்கு தங்களின் படைகளை அழைத்து பத்ர் நோக்கி வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்..). இஸ்லாமியர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் பெரும் போர் அது. படைகளை ஒரு இடத்தில் முகாமிட கட்டளையிட்டார்கள் நபி(ஸல்..). உடனே ஹூபாப் அல் முன்திர்(ரலி..) என்ற ஒரு தோழர், 'நாயகமே! இது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது தங்களின் கருத்தா?' என்று கேள்வி எழுப்பினார். 'எனது கருத்துதான்' என்றார்கள் நபி(ஸல்..). 'அப்படியென்றால் நாம் முகாமிட இது ஏற்ற இடமில்லை. சிறிது முன்சென்று அங்குள்ள கிணறுகளையும் நமது வசமாக்கி முகாம்களையும் அமைப்போம்' என்றார். 'இதன் மூலம் எதிரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்கலாம்' என்று காரணத்தையும் கூறினார்.

அல்லாஹ்வின் தூதரான எனது கருத்திற்கு மாற்றுக் கருத்தா என்று கூறவில்லை நபி(ஸல்..). தோழரின் கருத்தை ஏற்றார்கள் நபி(ஸல்..). அதன் பின் நடந்ததை உலகறியும். வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த போரின் முக்கிய பங்காற்றிய தோழரின் பெயரை வரலாறு படித்த பலரும் கூட அறிவதில்லை. ஆனால் அவரின் கருத்தை உதாசீனம் செய்யாமல் செவி சாய்த்தார்கள் நபி(ஸல்..).

இதனை கேட்ட மாத்திரத்தில் நாடுகள், இயக்கங்களின் தலைவர்கள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என அனைவரும் எவ்வாறெல்லாம் அடுத்தவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று நமது எண்ணத்தை ஓட விடாமல் நமது நிலையை உரசி பார்ப்போம். எவரையும் குறைத்து மதீப்பீடு செய்யக்கூடாது, எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதுதான் மேற்கூறிய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

மிகப்பெரும் நிறுவனங்களின் சாதாரண தொழிலாளிகள்தான் பிரமிக்கத்தக்க கருத்துக்களையும் ஆலோசணைகளையும் கூறினார்கள் என்று படித்து பரவசம் அடையும் நாம், நமது வாழ்வில் இதனை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் தயக்கம் காட்டுகிறோம்.
சிந்தனைக்கு...
ஏர்வை ரியாஸ்
read more...

31 ஜன., 2011

எல்லாம் குழந்தைகளுக்காக...

வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்... இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம்.

சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்... இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக?

நான் நன்றாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், விதவிதமான உடைகளை அணிய வேண்டும், உலகை சுற்றி வர வேண்டும் என்பதற்காகவா? இக்கேள்விக்கு பலரும் அளித்த பதில் ஒன்றுதான்.. 'எல்லாம் என் குழந்தைகளுக்காக, அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக'.தன்னுடைய குழந்தைகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை இவர்களில் பலரும் கண்ணால் காண்பது கூட கிடையாது. தன்னுடைய வயதான காலத்தில் தன்னை இவர்கள் கவனிப்பார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. வியர்வையை சிந்தும் இவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பது இல்லை. இருந்த போதும் 'எல்லாம் குழந்தைகளுக்காக'. இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக கூறுவார்கள், 'Fathers work for their children' என்று. இவ்வாறு குழந்தைகளுக்கு உழைக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய பார்வையை சற்று விசாலமாக்கினால் எப்படி இருக்கும்?

இன்று நம்முடைய சமுதாயத்தின் நிலையை சற்று கண் முன் கொண்டு வருவோம். வறுமை, கல்வியின்மை, வரதட்சணை, ஊடகங்களில் இருட்டடிப்பு, போலி என்கௌண்டர், இனப்படுகொலை, மஸ்ஜித் இடிப்பு... என சொல்லிக்கொண்டே போகலாம். இதனை தீர்க்க நாம் என்ன செய்துள்ளோம். இதனை கேட்டவுடன் பலரும் தரும் பதில், 'இதெல்லாம் உடனே தீர்க்க கூடிய விஷயங்கள் இல்ல, நாம என்ன செய்ய முடியும்?.'

அழகான ஒரு வரலாற்று நிகழ்வு இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்களின் தலைமையான கிலாஃபத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரம். இதற்காக சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அருமையான பயிற்சிகள். இறுதியாக திட்டத்தை விளக்கியவன் கூறினான், 'இது இருநூறு ஆண்டு திட்டம்'. கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் கேட்டான், 'இருநூறு ஆண்டுகள் கழித்து நான் இதனை அனுபவிக்க போவது இல்லை. அப்படியிருக்கும் போது நான் எதற்காக இந்த வேலையை செய்ய வேண்டும்?' இதற்கு அந்த தலைவன், இவர்களின் தியாகத்தால் இஸ்லாம் எவ்வாறு கீழிறக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் கை மேலோங்கும் என்பதை விளக்கி விட்டு கூறினான், 'Fathers work for their children'. தீட்டிய திட்டத்தை நிறைவேற்றினார்கள், கிலாஃபத்தை ஒழித்தார்கள்.

தற்போது நமது நிலை என்ன? தனி வாழ்வில் சுயநலத்தை விரும்பாத நாம் பொதுவாழ்விலும் அதனை பின்பற்ற தயங்குவது ஏன்? நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு குடும்பத்தின் வறுமையை போக்கலாம். வசதியின்றி தவிக்கும் மாணவர்களின் படிப்பிற்கு வழிவகை செய்யலாம். இளைஞர்கள் முன்வந்தால் வரதட்சணையை இல்லாமல் ஆக்கலாம். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்கள் ஒன்றிணைந்தால் ஊடகத்தை நமதாக்கலாம். சமுதாயம் சிறிது முன்வந்தால் பாசிசத்தை பின்னுக்கு தள்ளலாம்... இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

இதில் சிலவற்றின் பலனை நாம் அனுபவிக்காவிட்டாலும் நமது சந்ததிகள் அதனை அனுபவிப்பார்கள். எங்களின் முன்னோர்கள் எதையும் செய்யவில்லை என்ற பழிச்சொல்லில் இருந்தும் தப்பிக்கலாம்.

சிந்ததைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நேரமிது.
ஏர்வை ரியாஸ்
read more...