1 மார்., 2011

குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள்!

"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…"
சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறியது இது.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…
"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் சமத்தா குடிக்கணும் என்ன…" – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.

"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான்(Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

"நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வருகின்றது.
ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வருகிறது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சுற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.

கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.

குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.
MSAH


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள்!"

பெயரில்லா சொன்னது…

யதார்த்தமான உண்மை

பெயரில்லா சொன்னது…

MSAH edharthathaye solluvar.

shajahan devipattinam சொன்னது…

masa budgetla kulandhaingalukku thaniya budget odhukkanumpola

கருத்துரையிடுக