1 மார்., 2011

போபால் விஷவாயு கசிவு இழப்பீடு: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,மார்ச்.1:போபால் விஷ வாயுக்கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் யூனியன் கார்பைடு, டெள கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1984-ம் ஆண்டில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு உடல்பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கேசுப் மஹிந்த்ரா, நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே, துணைத் தலைவர் கிஷோர் கம்தார் உள்ளிட்டோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போபால் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தன்னார்வ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரபரப்பானது. சாதாரண பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதாலேயே குறைந்த தண்டனை கிடைத்தது என்று கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.750 கோடியில் இருந்து ரூ.7700 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கில் உள்ள குற்றங்கள் தொடர்பான அம்சங்களை வரும் ஏப்ரல் 13-ம் தேதியில் இருந்து தினசரி விசாரிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷவாயு கசிவு இழப்பீடு: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்"

கருத்துரையிடுக