விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 ஜன., 2011

ஆஸி. கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் காஜா

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். 24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

முதல் இரு பந்துகளை ஒன்றை பவுண்டரிக்கும், இன்னொன்றில் 2 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலிய ரசிகர்களையும், போட்டியை நேரில் பார்த்து வரும் அவரது பெற்றோரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் காஜா.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முஸ்லிம் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அதை விட முக்கியமாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவதும் இதுவே முதல் முறையாகும்.
read more...

14 செப்., 2010

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனைப் படைத்தார் சுஷில் குமார்

மாஸ்கோ,செப்.14:உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுஷில் குமார். நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ரஷ்யாவின் கோகேவ் ஆலனை வீழ்த்தினார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், ஒலிம்பிக் வெண்கல நாயகன் சுஷில் குமார் கலந்து கொண்டார். நேற்று நடந்த 66 கி.கி., "பிரிஸ்டைல்' பிரிவின் பைனலில் சுஷில் குமார் மற்றும் ரஷ்ய வீரர் கோகேவ் ஆலன் மோதினர். துவக்கத்தில் இருந்தே 27 வயதான சுஷில் குமார் ஆதிக்கம் செலுத்தினார். இவரது கிடுக்கிப்பிடியில் சிக்கிய ஆலன் மீள முடியாமல் தவித்தார். இறுதியில் சுஷில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் சீனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதலாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். அரியானாவை சேர்ந்த சுஷில் குமார், கடந்த 2008ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக், மல்யுத்தத்தில்(66 கி.கி., "பிரிஸ்டைல்') வெண்கலம் வென்றார். தற்போது உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை தேடி தந்துள்ளார். அடுத்து டில்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
read more...

6 செப்., 2010

கிரிக்கெட்:'ஸ்பாட் பிக்ஸிங்' சூதாட்ட ஆதாரங்களை வெளியிடுகிறது இங்கிலாந்து பத்திரிக்கை

லண்டன்,செப்.6:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக இங்கிலாந்துப் பத்திரிக்கை நியூஸ்ஆப் தி வேர்ல்ட். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கவுள்ளது.

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தப் பத்திரிக்கை நடத்திய 'ஸ்டிங்' ஆபரேஷனில்தான் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த பத்திரிக்கை மேலும் என்ன தகவல்களை வெளிடப்போகிறது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே,மூன்று வீரர்களையும் விசாரித்த ஸ்காட்லாந்து யார்டு இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
read more...

1 செப்., 2010

80 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளது

லண்டன்/இஸ்லாமாபாத்,செப்.1:உலக கிரிக்கெட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தான் சூதாட்ட சர்ச்சையில் பிரிட்டீஷ் போலீஸாரின் விசாரணை நடந்துவரும் வேளையில், முன்பு நடந்த ஏராளமான போட்டிகளிலும் முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்திவரும் தங்களது சூதாட்டக் கும்பல் இதுவரை 80 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக இடைத்தரகர் மஸ்ஹர் மஜீத் போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான்-இங்கிலாந்திற்கிடையே நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும்,சிட்னியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் லஞ்சம் பெற்று மோசமாக ஆடியதாக பிரிட்டீஷ் ரியல் எஸ்டேட் வியாபாரியும்,ஸ்போர்ட்ஸ் ஏஜண்டுமான மஸ்ஹர் மஜீத் வெளிப்படுத்தியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் மூலம் மட்டும் எட்டு அரை லட்சம் பவுண்ட்(அரைக்கோடி இந்திய ரூபாய்) சூதாட்டக் கும்பலுக்கு கிடைத்ததாக மஜீத் ஒப்புக்கொண்டுள்ளார். தேவைப்படும்பொழுது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மஜீத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, லண்டனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் அறைகளில் பல மணிநேரம் நீண்ட சோதனையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கணக்கில் இல்லாத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.இது சூதாட்டக்காரர்களிடமிருந்து கிடைத்த பணம் என்று கருதப்படுகிறது.

லட்சக்கணக்கான பண கொடுக்கல் வாங்கல் ஆதாரங்களும் காசோலைகளும் கண்டெடுத்த பாக். வீரர்களின் கூடுதலான மொபைல் ஃபோன்களையும் கண்டெடுத்தனர்.

பிரிட்டனில் வைத்து பொருளாதார மோசடியில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். செப்டம்பர் 22 ஆம் தேதி சுற்றுப்பயணம் முடியும் வரை கைதிலிருந்து தப்ப பாக். கிரிக்கெட் அணி தூதரக உதவியை நாடியுள்ளது.

தங்களுடைய தேசிய அணி அந்நிய நாட்டில் அவமானப்படுவதை தடுக்க பாக். அரசு முயலும் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் மூத்த 3 அதிகாரிகள் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியின் உத்தரவின்படி லண்டனுக்கு பறந்துள்ளனர். பிரிட்டீஷ் போலீசாருடன் இணைந்து இவர்கள் விசாரணையில் ஈடுபடுவர். அவமானகரமான தலைதாழ்த்தும் நிலைமை தனது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூஸஃப் ரஸா கிலானி இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடரவேண்டும் என ஐ.சி.சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சியின் ஊழல் ஒழிப்பு பிரிவும் இச்சம்பவத்தில் விசாரணையை மேற்கொள்ளும். புலனாய்வுகளின் அறிக்கை கிடைத்தவுடன் வீரர்கள் குற்றவாளிகள் எனத் தெரியவந்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திற்கும் சூதாட்டம் நடத்தும் ஸ்பாட் பிக்சிங் என்ற சூதாட்டத்தின் ஏஜண்டுகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் தொடர்பை நேற்று முன் தினம் பிரிட்டீஷ் பத்திரிகையான 'நியூஸ் ஆஃப் த வேல்ட்' வெளியிட்டது.

இங்கிலாந்திற்கெதிரான நான்காவது டெஸ்டில் தொடர்ந்து 'நோ'பால் எறிய பாக்.வீரர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட மஸ்ஹர் மஜீதை இப்பத்திரிகையின் நிரூபர் 150000 பவுண்ட் வாக்களித்து ரகசிய கேமராமூலம் சிக்கவைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக நோபால் எறிய நிரூபர் மஸ்ஹருக்கு பணம் கொடுத்துள்ளார். மஸ்ஹரின் உத்தரவின் படி பாக்.வீரர்கள் ஆஸிஃபும், ஆமிரும் நோபால் வீசினர்.

கைதுச் செய்யப்பட்ட மஸ்ஹர் மஜீதின் அளித்த தகவலின் படி பாக். கேப்டன் சல்மான் பட், வேகப் பந்து வீச்சாளர்களான முஹம்மது ஆஸிஃப், முஹம்மது ஆமிர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் உள்ளிட்ட ஏழு பாக்.வீரர்களை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை செய்திருந்தனர்.

செய்தி:மாத்யமம்
read more...

3 ஆக., 2010

காமன்வெல்த் விளையாட்டிற்காக வீண்விரயம் செய்யும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு - சேரை ரூ.8000க்கு வாடகைக்கு எடுத்த கொடுமை

டெல்லி,ஆக்,3:காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியுள்ள ஊழல், முறைகேடுகள் புற்றீசல் போல கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில் போட்டி ஒருங்கிணைப்புக் குழு பணத்தை வீண் விரயம் செய்திருக்கும் செயல்களும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இதுவரை எங்குமே கேள்விப்பட்டிராத வகையில் பல பொருட்களை மிக மிக உயர்ந்த வாடகைக்கு எடுத்துள்ளனர் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள்.

உதாரணமாக,உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் கருவிகளை கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதாவது ஒரு டிரெட் மில்லின் வாடகை கட்டணம் இது. இப்படி பல டிரெட்மில்களை ஒன்றரை மாதத்திற்கு வாடக்கைக்கு எடுத்துள்ளனர்.

அதேபோல ஒரு ரெப்ரிஜிரேட்டர் வாடகை ரூ.42,000 என பல ரெப்ரிஜிரேட்டர்களை எடுத்துள்ளனர். இது 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ் ஆகும்.

லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஹாரோட்ஸ் கடைக்குப் போனால் ஒரு டிரெட்மில் அதிகபட்சம் ரூ.7 லட்சத்திற்கு வாங்க முடியும். இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கும் சற்று கூடுதலான விலைதான் இருக்கும். ஆனால் பல லட்சம ரூபாய் பணத்தை தேவையல்லாமல் வாடகைக்கு என்ற பெயரில் விரயமாக்கியுள்ளனர்.

அதேபோல இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி உள்ளிட்டோருக்காக சேர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு சேருக்கான வாடகைத் தொகை ரூ.8 ஆயிரமாம். இவ்வளவு வாடகை கொடுத்து எடுக்கப்படும் சேரில்தான் கல்மாடி உள்ளிட்டோர் அமர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இதெல்லாம் நிச்சயம் தேவை. அப்போதுதான் சர்வதேச தரம் இருக்கும் என்கிறார்கள் போட்டி அமைப்பாளர்கள்.

இந்தச் சூழ்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான தொடர் சர்ச்சைகளால் நாட்டின் பெயர் கெட்டு வருகிறது.எனவே இந்தப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தலையிட வேண்டும் என பாஜக கோரியுள்ளது
read more...

22 ஜூலை, 2010

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன்

ஜூலை.22:டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார்.

இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார்.

தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
read more...

12 ஜூலை, 2010

உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்

ஜோகனஸ்பர்க்:உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர் லாந்தை(4வது இடம்) எதிர் கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

கடுமையான போராட்டத்திற்க்குப் பிறகு ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர் லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

ரூ.142 கோடி பரிசு: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ.142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.
read more...

8 ஜூலை, 2010

இளைஞர் ஒலிம்பிக் தொடரின்(YOG) தூதராக உசேன் போல்ட் நியமனம்

சிங்கப்பூரில் நடக்க உள்ள இளைஞர் ஒலிம்பிக் தொடரின் (YOG), தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் 26 வரை இளைஞர் ஒலிம்பிக் தொடர் நடக்க உள்ளது. இத்தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், இதன் தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் தொடரின், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப் போட்டிகளில் உலக சாதனை படைத்தவர் போல்ட். இது குறித்து போல்ட் கூறுகையில், "முதன் முதலாக ஒலிம்பிக் தொடரின் தூதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், செயல்படுவேன்." என்றார்.

நீச்சல் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸ், போல் வால்ட் சாம்பியன் எலினா இசின்பயாவோ ஆகியோரும் இளைஞர் ஒலிம்பிக் தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

read more...

23 ஜூன், 2010

டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஷபீர் தன்காட், ஷபீனா சலீம்

பெங்களூரில் நடந்த தேசிய டென்பின் பவுலிங் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஷபீர் தன்காட், ஷபீனா சலீம் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இப்போட்டியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 20 பெண்கள், 80 ஆண்கள் கலந்து கொண்டனர்.
read more...

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லீம் வீரர்

சிட்னி:இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
read more...

11 ஜூன், 2010

19வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடங்கியது

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது.தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில்,தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும்,ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன.பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
read more...

5 ஜூன், 2010

டெல்லி:காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது

புதுடெல்லி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை புதுடெல்லியில் நடக்கிறது.

போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்திர கண்ணா, காமன்வெல்த் அமைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாதி, தில்லி மேயர் பிரிதிவிராஜ் சாஹ்னி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டிகளை பொறுத்து ஒரு டிக்கெட்டின் விலை ரூ.50 முதல் ரூ.50 ஆயிரம் வரையுள்ளது. ஆன்லைன் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாக முன்பதிவு செய்தும் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து கல்மாடி கூறியதாவது;'காமன்வெல்த் போட்டி துவக்க நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.50,000 வரையும், நிறைவு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலை ரூ.750 முதல் ரூ.50 ஆயிரம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாரத்தான், வாக் சைக்கிளிங், ரோடு ரேஸ் உள்ளிட்ட 4 போட்டிகளுக்கு அனுமதி இலவசம். 40 சதவீத போட்டிகளுக்கு ரூ.200 மற்றும் அதைவிட குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஅனைவரும் வாங்கும் விலையிலேயே டிக்கெட் கட்டணம் உள்ளது.

கேளிக்கை வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.கொடுத்த பணத்திற்கு மனநிறைவு அளிக்கும் வகையில் இருக்கும்' என்றார் கல்மாடி.

டிக்கெட் விற்பனை செய்யுமிடங்கள்
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஹீரோ ஹோண்டா ஸ்டோர்ஸ், காமன்வெல்த் டிக்கெட் கால்சென்டர், காமன்வெல்த் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை முதல் டிக்கெட் விற்பனைக்கு வந்தன.

1800-200-1294 என்ற கால் சென்டர் எண்ணில் தொடர்பு கொண்டும், http://www.tickets.cwgdelhi2010.org/​ என்ற இணையதளத்தின் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 17 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மூன்று கட்டங்களாக விற்பனை செய்யப்படவுள்ளன.

டிக்கெட் விற்பனை சர்வதேச சந்தையில் கடந்த 2009 நவம்பர் மாதம் துவங்கியது. ஸ்பான்சர்கள் மூலமான விற்பனை கடந்த மாதம் துவங்கியது. டிக்கெட் வாங்கியவர்கள், போட்டி நடைபெறும் தினத்தில் தங்களது இருப்பிடங்களில் இருந்து மைதானத்திற்கு டெல்லி மெட்ரோ ரயில், டெல்லி போக்குவரத்துக்கழக பஸ் ஆகியவற்றில் இலவசமாக சென்று வரலாம்.
read more...

6 மே, 2010

விளையாட்டு அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் ஒலிம்பிக் சங்கம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புக்களின் நிர்வாகிகள் பதவிக்காலம் 12 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

புதிய விதிமுறைகளால், விளையாட்டு அமைப்புக்களின் தன்னாட்சி பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று விளையாட்டு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, இந்திய ஒலிம்பிக் சங்கம், பேட்மின்டன், வாலிபால் உள்பட பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது.
அதாவது அந்த அமைப்புக்களின் தலைவர்கள், தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளிவிட்டோ 12 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். செயலாளர், பொருளாளர் போன்ற நிர்வாகிகள், எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவியில் நீடிக்கலாம். மீண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தேர்தலில் போட்டியிட முடியும்.

இந்த விதிமுறைகள் ஏற்கெனவே 1975-ல் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், 2002-ல் ஓர் உத்தரவின் மூலம் அது மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அந்த விதிமுறைகள் செயல்படுத்தப் படுவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கில் தெரிவித்தார்.

அரசின் புதிய விதிமுறைகளால், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி, வாலிபால் சங்கத் தலைவர் பி.எஸ். சிவந்தி ஆதித்தன், வில்வித்தை சங்கத் தலைவர் வி.கே. மல்கோத்ரா உள்பட பலர், தங்கள் பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

ஆனால், அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. விளையாட்டு அமைப்புக்களின் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று இந்தப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் நாயகம், ரன்தீர் சிங், அரசின் விதிமுறைகள் நியாயமற்றவை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் – IOC தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை மேம்பட, தேசிய விளையாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐஓசி, அந்த அமைப்புக்களின் செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது என்று கூறியள்ளதாகவும் ரன்தீர் சிங் தெரிவித்தார்.

அதே நேரத்தில், விளையாட்டு அமைச்சகம், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள்தான் இப்போது மீண்டும் அமல்படுத்தப் படுவதாகவும், விளையாட்டுத் துறையில் உள்ளவர்களும் பொதுமக்களும் இதை முறைப்படுத்த நீண்டகாலமாகக் கோரி வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் புதுடெல்யில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளை புதிய விதிமுறைகள் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்தார்.
source:BBC
read more...

1 மே, 2010

இந்தியாவுக்கு ஆச்சர்யம் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபீர் கான் கூறியுள்ளார்.

20-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், புதிய அணியான ஆப்கானிஸ்தான் வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவார்கள் என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை.

இதுதவிர 20 ஓவர் போட்டிகளில் வெற்றி, தோல்வியை எளிதில் கணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆச்சர்யம் அளிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கபீர்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது:

ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே நன்கு அறிந்து வைத்துள்ளோம். இதுதவிர ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஆட்ட நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளோம். அணியில் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சமஅளவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே ஒருவர் சிறப்பாக விளையாடத் தவறினாலும் மற்றொருவரின் ஆட்டம் குறிப்பிடும் படியாக இருக்கும். எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் நவ்ரோஸ் மங்கள் கூறும்பொழுது; இந்தப் போட்டிக்காக நாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளின் கடின முயற்சிக்குப் பின்னர்தான் உலகில் உள்ள 12 சிறந்த அணிகளில் ஒன்றாக தேர்வாகி 20-20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளோம். எனவே தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார் அவர்.
read more...

17 ஏப்., 2010

லலித் மோடிக்குப் பின்னணியில் நரேந்திரமோடி

புதுடெல்லி:கொச்சி ஐ.பி.எல் அணியை அஹ்மதாபாத்திற்கு மாற்றுவதற்கு லலித் மோடி முயற்சித்தது முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமைத் தாங்கிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வற்புறுத்தலால்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

கொச்சி அணியில் பங்குகளை வாங்கியுள்ள குஜராத் தொழில் அதிபர்களுக்கும் இத்தகையதொரு விருப்பம் இருந்தது. இதற்காக அவர்கள் மத்திய அமைச்சர் சரத்பவாரையும், குஜராத் நரேந்திரமோடியையும் சந்தித்தனர்.
ஆனால் ஏலத்தில் தோற்கப் போகிறோம் என்ற உறுதி ஏற்பட்டதும் இவர்கள் சசி தரூரை சந்தித்துள்ளனர். தரூரோ இவ்வணியை கொச்சிக்கு மாற்றிவிட்டார். கொச்சி அணியின் பங்குதாரர்கள் தன்னை சந்தித்ததாக சரத்பவார் உறுதிச்செய்திருந்தார். ஒருக்கட்டத்தில் கொச்சிக்கும் அஹ்மதாபாத்திற்குமிடையே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது ரொண்டேவ் ஸ்பொர்ட்ஸ் வேர்ல்ட்.
சசி தரூர் தலையிட்டதும் இவர்கள் கொச்சிக்கு ஆதரவாளரானார்கள். ரோஸி ப்ளூடயமண்ட்சின் ஹர்ஷத் மேத்தா, ஆங்கர் எர்த்தின் மேஹுல் ஷா ஆகியோர் நரேந்திரமோடியுடனும், சரத்பவாரிடனும் சந்திப்பை நடத்தியுள்ளனர். இவர்களிருவருக்கும் கொச்சி அணியில் 38 சதவீத பங்குகள் உள்ளன. இதர பங்குதாரர்களான பாரினி டெவலப்பேர்ஸின் விபுல் ஷா, ஸ்ரீராம் குரூப்பின் முகேஷ் பட்டேல் ஆகியோர் குஜராத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கும் அஹ்மதாபாத்திற்கு ஐ.பி.எல் அணியைக் கொண்டுச் செல்லத்தான் ஆர்வம்.
ஒரேயொரு கிரிக்கெட் மைதானம் உள்ள கேரளத்திலிலுள்ள நகரின் பெயரில் அணியைக் கொண்டுவருவது லாபத்தை தராது என்பது இவர்களது பிரச்சனை. இதற்கு மோடிகளின் ஆதரவும் இருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

7 ஏப்., 2010

ஐக்கிய அரபு அமீரகத் திரையரங்குகளில் ஐபிஎல்

துபை:ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள திரையரங்குகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பெரிய திரைகளில் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

ஐபில் கிரிக்கெட் போட்டியில் 3-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.​ முதல் ஆண்டு இந்தியாவிலும்,​​ 2-வது ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.​ 3-வது ஆண்டாக இப்போது மீண்டும் இந்தியாவில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.​ இந்தியாவின் சில இடங்களில் இப்போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகின்றன.​ இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இதைப் பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஐபிஎல் போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகின்றன.​ பெரிய திரைகளில் தங்களது அபிமான அணி வீரர்களை விளையாடுவதைப் பார்ப்பதற்காக அந்த நாட்டிலும் கிரிக்கெட் ரசிகர்கள் குவிகின்றனர். ஐக்கிய அரபு அமீரக நாடு முழுவதும் 9 தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி காட்டப்படுகிறது.​

இதற்காக துபையைச் சேர்ந்த எண்டர்டெயின்மெண்ட் அண்ட் ஸ்போர்ட்ஸ் ​ டைரக்ட் ​(இஎஸ்டி)​ நிறுவனம் அல் நிசார் சினிமா மற்றும் கல்ஃப் பிலிம்ஸூடன் இணைந்து போட்டிகளை எச்.டி.​ தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பி வருகிறது.​

இதுபோன்ற போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்காக அந்த நாட்டின் உரிமையை இஎஸ்டி 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பெற்றுள்ளது.

பெரிய திரைகளில் ரசிகர்கள் போட்டிகளைப் பார்க்கும்போது,​​ ஸ்டேடியத்தில் பார்ப்பது போன்ற உணர்வு இருப்பதால் திரையரங்குகளில் குவிகின்றனர்.​ மேலும் ஐபிஎல் போட்டிகளை ஹோட்டல்கள்,​​ ரெஸ்டாரண்டுகளில் பெரிய திரைகளில் ஒளிபரப்பவும் இஎஸ்டி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.​

இதுகுறித்து இஎஸ்டி நிறுவனத்தின் தாய் நிறுவனமான தர் கேப்பிட்டல் குரூப் நிறுவனத்தின் தலைவர் அருண் ரங்காச்சாரி கூறியதாவது: "உலகிலேயே முதன்முறையாக எச்.டி.​ தொழில்நுட்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒளிபரப்பி வருகிறோம்.​ இந்தப் போட்டிகளை அடுத்த ஆண்டு முதல்தான் ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்தோம்.​ ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு முதலே ஒளிபரப்பத் துவங்கிவிட்டோம்.​ மேலும் பெரிய நிறுவனங்கள் இப்போட்டிகளை தங்களது ஊழியர்கள் காண வேண்டும் என்பதற்காக அதிக அளவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளன.​திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்டுக்கு என்ன விலையோ,​​ அதே விலையைத்தான் கிரிக்கெட் போட்டியைக் காணவும் வாங்குகிறோம்" என்றார் அவர்.
read more...

5 ஏப்., 2010

ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் விளையாட்டோடு மட்டும் போதும்

ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் என்ற விளையாட்டின் மீதான அலாதி ஆர்வம் நமது இந்தியர்களுக்கு கிரிக்கெட், கால்பந்திற்கு அடுத்தப்படியாக டென்னிஸ் மீதுதான் உள்ளது.

இறுக்கமான ஆடைகளுடன் ஆடுகளத்தில் இறங்கி ஹைதராபாத்தின் அழகு நங்கை சானியா மிர்ஷா ஆடத்துவங்கிய பொழுதுதான் இந்தியர்களின் ஆர்வம் டென்னிஸை நோக்கி திருப்பியதாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறுகிறார்.

சானியாவின் திருமணம் இப்பொழுது இந்திய, பாகிஸ்தான் அரசியல் அரங்குகளிலும் சூடுபிடித்துள்ளது. பத்திரிகைகளுக்கும் இது கோலகலமாகி போய்விட்டது.

பெண்ணின் உள்ளம் புரியாத புதிர் எனக் கூறுவார்கள். தனது பால்யக்கால தோழனான ஸுஹ்ராப் என்ற மஜீதுடன் திருமண நிச்சயார்த்தாத்தம் முடிந்த பின்னர் திடீரென மனம் மாறிய சானியாவின் முடிவு இதற்கு சிறந்த உதாரணம். சானியாவின் ஏஸுகளுக்கு ஸுஹ்ராப் அடித்த ரிட்டேன்களால் விளையாட்டு வினையாகிப் போனது. ஸுஹ்ராபை பிடிக்காவிட்டால் என்ன வேறு இந்திய பணக்காரர்கள் எவரும் கிடைக்கவில்லையா சானியாவுக்கு அங்கலாய்க்கிறார் பால்தாக்கரே.
ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ் என்று சானியா கூறிவிட்டபிறகு இந்தியரை ஏன் மணமகனாக தேர்ந்தெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில் என்ன அர்த்தம் உள்ளது.

சானியாவின் மிக்ஸட் டபிள்ஸில் புதிதாக ஜோடி சேர்ந்துள்ளார் சோயப் மாலிக். வெறும் ஆஃப் ஸ்பின்னராக ஆடத்துவங்கிய சோயப் பின்னர் ஆல்ரவுண்டராக மாறி தனது நாட்டிற்காக சிறப்பானதொரு பங்களிப்பை ஆற்றியுள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கெதிராக நல்லதொரு கேரியர் ரிக்கார்டு சோயபிற்கு உண்டு. அதேப்போல் குடும்ப வாழ்க்கையிலும் நல்லதொரு பங்களிப்பை இந்திய மண்ணில் அளிக்கலாம் என சோயப் மாலிக்கிற்கு நம்பிக்கையிருக்கும்.

இதற்கிடையில் சோயப் முன்பு ஹைதராபாத்தைச் சார்ந்த ஆயிஷா சித்தீக்கியை திருமணம் முடித்ததாக கூறிய சலசலப்பும் சோயப்-சானியா திருமணம் தொடர்பான செய்திகளுக்கு மெருகூட்டியுள்ளது.

என்னவாயினும், வருகிற ஏப்ரல்-15 ஆம் நாள் சோயப் என்ற கிரிக்கெட் வீரர் சானியாவுக்கு ஒரு லைஃப் வழங்கப் போகிறார் என்பது நிச்சயம்.

அந்நிய தேசத்தவர்களை திருமணம் முடிப்பது நாட்டு வழக்கமாகி காலங்கள் கடந்துவிட்டன.இது ஒன்றும் புதிதல்ல. பின்னர் ஏன் சானியா-சோயப் விஷயத்தில் மட்டும் இவ்வளவு அக்கறை? மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பர்மாவைச் சார்ந்த பெண்மணியை திருமணம் செய்து அவரது பெயரையும் உஷா என்று மாற்றினார். கனடா நாட்டைச் சார்ந்த கிறிஸ்டிதான் நமது வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் இஸ்ரேல் சிநேகிதருமான சசி தரூரின் துணைவி. இந்தியாவிலுள்ள பெண்ணையே திருமணம் முடிக்கலாம் என மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீர்மானித்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபையில் நிறைவேறியிருக்குமா? பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாகவும், மீரா குமார் சபாநாயகராகவும் பதவியில் அமர்ந்திருக்கத்தான் முடியுமா? இருநூறு ஆண்டுகலாம் இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டீஷாரின் கடைசி கவர்னர் மெளண்ட் பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவுடன் நமது நேருமாமா கொண்ட மெய்யல் ஊரறிந்த ரகசியமல்லவா? இந்தக்காதலை எந்த ரகத்தில் சேர்ப்பது என்பது வேறு விஷயம்.

பால்தாக்கரேயும் சில பாசிச வானரங்களும் சானியாவின் திருமணத்தை எதிர்ப்பது வேறொன்றுமில்லை, சானியா பாகிஸ்தானிற்காக யு.எஸ் ஓபனிலோ அல்லது ஆஸ்திரேலியன் ஓபனிலோ ஆடிவிடுவாரோ என்ற பயம்தான் காரணமெனில் சில முன்னேற்பாடுகளை இப்பொழுது செய்யலாமே!

பாலிவுட்டை வட்டமிடும் நமது மஹேந்திர சிங் டோனியை செரீனா வில்லியம்ஸையும், யுவராஜ் சிங்கை மரியா ஸரபோவாவையும் திருமணம் முடிக்கவைப்பதன் மூலம் இந்தியாவுக்கு பல க்ராண்ட்ஸ்லாம் டைட்டில்களை சொந்தமாக்கலாமே! "களி முடக்கியாலும் கல்யாணம் முடக்கருதே" என்றதொரு மலையாள பழமொழி உண்டு. அதாவது ஆட்டத்தை நிறுத்தினாலும் திருமணத்தை நிறுத்திவிடாதீர்கள் என்று. ஆகவே ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!விளையாட்டு வீரர்களின் சொந்த வாழ்க்கையில் வேண்டாம் ப்ளீஸ்!
தேஜஸிலிருந்து
read more...

4 ஏப்., 2010

இளைஞர் ஒலிம்பிக்:பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில் இஸ்லாமிய உடை அணிய FIFA தடை. எதிர்ப்புத் தெரிவிக்க ஈரான் அழைப்பு

டெஹ்ரான்:வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியிலிருந்து 26 வரை சிங்கப்பூரில் முதல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதில் பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியும் இடம் பெறுகிறது. இப்போட்டியில் ஆடுவதற்கு ஈரானின் பெண்கள் அணி தயாராக உள்ளது. ஈரான் கால்பந்தாட்ட வீராங்கனைகள் இஸ்லாமிய ஆடை அணிந்துதான் இப்போட்டியில் கலந்துக் கொள்ளவிருந்தனர்.

இந்நிலையில் சர்வதேச கால்பந்தாட்டக் கழகமான FIFA(Indernationale de Football Association) இஸ்லாமிய உடை அணிந்து ஆடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதுத் தொடர்பாக ஈரான் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரியான பஹ்ராம் அஃப்ஸர்ஸாதே பார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப்பேட்டியில், FIFA வின் இத்தடை உலக முஸ்லிம்களின் உரிமையை மீறுவதாகும். மேலும் இது பெண்களின் முன்னேற்றத்திற்கு போடப்படும் தடையாகும். இதுத் தொடர்பான கண்டனக்கடிதங்களின் நகல்களை சர்வதேச ஒலிம்பிக் கழகத்திற்கும், ஆசியா மற்றும் உலகின் பல்வேறு விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் ஈரான் தேசிய ஒலிம்பிக் கழகம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்தி:FARSNEWS
read more...

யூசுஃப் பதானின் பாராட்டுதலுக்குரிய முடிவு

புதுடெல்லி:இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக விளங்குபவர் யூசுஃப் பதான். தற்ப்பொழுது ஐ.பி.எல் டுவெண்டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதமடித்தவர் யூசுஃப் பதான்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பொழுது மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் சின்னம்(லோகோ) உடைய டீ-சர்ட் அணிய மறுத்துவிட்டார். இதுத் தொடர்பாக யூசுஃப் பதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "கிங்ஃபிஷர் ஆல்கஹால்(மதுபானம்) தயாரிக்கும் நிறுவனமாகும். மதுபானத்தை அருந்துவதோ அல்லது அதன் விற்பனைக்குத் தூண்டுவதான விளம்பரத்தில் பங்கேற்பதோ எனது சொந்த மத நம்பிக்கைக்கு எதிரானது" என்றார் அவர்.

பரோடாவில் உள்ள மஸ்ஜிதில் தனது இளைமை பருவத்தில் வளர்ந்த இவருடைய தந்தை முஅத்தினாக(மஸ்ஜிதில் அதான் கூறுபவர்) பணிபுரிந்து வருகிறார்.

இதுத் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இது ஒரு சிறிய விஷயம். இது அவருடைய சொந்த விருப்பம். அவர் நன்றாக பேட் செய்கிறார். அணி நிர்வாகம் அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது" என்றார்.

இதற்கு முன் இத்தகையதொரு முடிவை தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஹாஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நீண்டநாள் ஸ்பான்சராக செயல்பட்டுவரும் பீர் கம்பெனியான கேசில் லேகர் என்ற நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

read more...

31 மார்., 2010

காமன்வெல்த் போட்டிகளுக்கு நல்லெண்ணத் தூதராக அமிதாப்பை நியமிக்கமாட்டோம்: சுரேஷ் கல்மாடி

புதுடெல்லி:அமிதாப் பச்சனை காமன்வெல்த் போட்டிகளுக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கையை ஏற்க காமன்வெல்த் போட்டிகளுக்கான அமைப்புக் குழுத்தலைவர் சுரேஷ் கல்மாடி மறுத்துவிட்டார்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு நடிகரல்ல நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவது என கல்மாடி தெரிவித்தார். காமன்வெல்த் போட்டிகளுக்கு இதுவரை எவரையும் நல்லெண்ணத் தூதராக நியமிக்கவில்லை.

போட்டியின் சின்னமான ஷெரா மட்டுமே தற்போதைய நல்லெண்ணத் தூதர். ஓய்வுப்பெற்ற விளையாட்டு வீரர்களான மில்கா சிங், பி.டி.உஷா போன்றவர்களையோ அல்லது இளைய விளையாட்டு வீரரையோ நல்லெண்ணத் தூதராக நியமிக்க ஆலோசித்து வருவதாக கல்மாடி தெரிவித்தார்.

1982 ஆம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மாதிரியில் நல்லெண்ணத் தூதர் நியமிக்கப்படமாட்டார் எனவும் கல்மாடி தெரிவித்தார்.

மூத்த பா.ஜ.க தலைவரும், இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவருமான வி.கே.மல்கோத்ராதான் பச்சனை நல்லெண்ணத் தூதராக நியமிக்க கோரிக்கை விடுத்தவர். பாலிவுட்டின் வேறு நடிகர்களை நல்லெண்ணத் தூதராக்கும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு கல்மாடி பதிலளிக்கையில், இதுவரை எந்தத் தீர்மானமும் இறுதியாக எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...