7 ஏப்., 2010

ஐக்கிய அரபு அமீரகத் திரையரங்குகளில் ஐபிஎல்

துபை:ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள திரையரங்குகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பெரிய திரைகளில் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

ஐபில் கிரிக்கெட் போட்டியில் 3-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.​ முதல் ஆண்டு இந்தியாவிலும்,​​ 2-வது ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.​ 3-வது ஆண்டாக இப்போது மீண்டும் இந்தியாவில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.​ இந்தியாவின் சில இடங்களில் இப்போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகின்றன.​ இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இதைப் பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஐபிஎல் போட்டிகள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகின்றன.​ பெரிய திரைகளில் தங்களது அபிமான அணி வீரர்களை விளையாடுவதைப் பார்ப்பதற்காக அந்த நாட்டிலும் கிரிக்கெட் ரசிகர்கள் குவிகின்றனர். ஐக்கிய அரபு அமீரக நாடு முழுவதும் 9 தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி காட்டப்படுகிறது.​

இதற்காக துபையைச் சேர்ந்த எண்டர்டெயின்மெண்ட் அண்ட் ஸ்போர்ட்ஸ் ​ டைரக்ட் ​(இஎஸ்டி)​ நிறுவனம் அல் நிசார் சினிமா மற்றும் கல்ஃப் பிலிம்ஸூடன் இணைந்து போட்டிகளை எச்.டி.​ தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பி வருகிறது.​

இதுபோன்ற போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்காக அந்த நாட்டின் உரிமையை இஎஸ்டி 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பெற்றுள்ளது.

பெரிய திரைகளில் ரசிகர்கள் போட்டிகளைப் பார்க்கும்போது,​​ ஸ்டேடியத்தில் பார்ப்பது போன்ற உணர்வு இருப்பதால் திரையரங்குகளில் குவிகின்றனர்.​ மேலும் ஐபிஎல் போட்டிகளை ஹோட்டல்கள்,​​ ரெஸ்டாரண்டுகளில் பெரிய திரைகளில் ஒளிபரப்பவும் இஎஸ்டி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.​

இதுகுறித்து இஎஸ்டி நிறுவனத்தின் தாய் நிறுவனமான தர் கேப்பிட்டல் குரூப் நிறுவனத்தின் தலைவர் அருண் ரங்காச்சாரி கூறியதாவது: "உலகிலேயே முதன்முறையாக எச்.டி.​ தொழில்நுட்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒளிபரப்பி வருகிறோம்.​ இந்தப் போட்டிகளை அடுத்த ஆண்டு முதல்தான் ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்தோம்.​ ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு முதலே ஒளிபரப்பத் துவங்கிவிட்டோம்.​ மேலும் பெரிய நிறுவனங்கள் இப்போட்டிகளை தங்களது ஊழியர்கள் காண வேண்டும் என்பதற்காக அதிக அளவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளன.​திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்டுக்கு என்ன விலையோ,​​ அதே விலையைத்தான் கிரிக்கெட் போட்டியைக் காணவும் வாங்குகிறோம்" என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத் திரையரங்குகளில் ஐபிஎல்"

கருத்துரையிடுக