3 ஆக., 2010

காமன்வெல்த் விளையாட்டிற்காக வீண்விரயம் செய்யும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு - சேரை ரூ.8000க்கு வாடகைக்கு எடுத்த கொடுமை

டெல்லி,ஆக்,3:காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியுள்ள ஊழல், முறைகேடுகள் புற்றீசல் போல கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில் போட்டி ஒருங்கிணைப்புக் குழு பணத்தை வீண் விரயம் செய்திருக்கும் செயல்களும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இதுவரை எங்குமே கேள்விப்பட்டிராத வகையில் பல பொருட்களை மிக மிக உயர்ந்த வாடகைக்கு எடுத்துள்ளனர் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள்.

உதாரணமாக,உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் கருவிகளை கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதாவது ஒரு டிரெட் மில்லின் வாடகை கட்டணம் இது. இப்படி பல டிரெட்மில்களை ஒன்றரை மாதத்திற்கு வாடக்கைக்கு எடுத்துள்ளனர்.

அதேபோல ஒரு ரெப்ரிஜிரேட்டர் வாடகை ரூ.42,000 என பல ரெப்ரிஜிரேட்டர்களை எடுத்துள்ளனர். இது 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ் ஆகும்.

லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஹாரோட்ஸ் கடைக்குப் போனால் ஒரு டிரெட்மில் அதிகபட்சம் ரூ.7 லட்சத்திற்கு வாங்க முடியும். இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கும் சற்று கூடுதலான விலைதான் இருக்கும். ஆனால் பல லட்சம ரூபாய் பணத்தை தேவையல்லாமல் வாடகைக்கு என்ற பெயரில் விரயமாக்கியுள்ளனர்.

அதேபோல இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி உள்ளிட்டோருக்காக சேர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு சேருக்கான வாடகைத் தொகை ரூ.8 ஆயிரமாம். இவ்வளவு வாடகை கொடுத்து எடுக்கப்படும் சேரில்தான் கல்மாடி உள்ளிட்டோர் அமர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இதெல்லாம் நிச்சயம் தேவை. அப்போதுதான் சர்வதேச தரம் இருக்கும் என்கிறார்கள் போட்டி அமைப்பாளர்கள்.

இந்தச் சூழ்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான தொடர் சர்ச்சைகளால் நாட்டின் பெயர் கெட்டு வருகிறது.எனவே இந்தப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தலையிட வேண்டும் என பாஜக கோரியுள்ளது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் விளையாட்டிற்காக வீண்விரயம் செய்யும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு - சேரை ரூ.8000க்கு வாடகைக்கு எடுத்த கொடுமை"

கருத்துரையிடுக