இந்தியாவில் ஒலிம்பிக் சங்கம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புக்களின் நிர்வாகிகள் பதவிக்காலம் 12 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
புதிய விதிமுறைகளால், விளையாட்டு அமைப்புக்களின் தன்னாட்சி பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று விளையாட்டு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, இந்திய ஒலிம்பிக் சங்கம், பேட்மின்டன், வாலிபால் உள்பட பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது.
அதாவது அந்த அமைப்புக்களின் தலைவர்கள், தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளிவிட்டோ 12 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். செயலாளர், பொருளாளர் போன்ற நிர்வாகிகள், எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவியில் நீடிக்கலாம். மீண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த விதிமுறைகள் ஏற்கெனவே 1975-ல் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், 2002-ல் ஓர் உத்தரவின் மூலம் அது மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அந்த விதிமுறைகள் செயல்படுத்தப் படுவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கில் தெரிவித்தார்.
அரசின் புதிய விதிமுறைகளால், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி, வாலிபால் சங்கத் தலைவர் பி.எஸ். சிவந்தி ஆதித்தன், வில்வித்தை சங்கத் தலைவர் வி.கே. மல்கோத்ரா உள்பட பலர், தங்கள் பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
ஆனால், அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. விளையாட்டு அமைப்புக்களின் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று இந்தப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் நாயகம், ரன்தீர் சிங், அரசின் விதிமுறைகள் நியாயமற்றவை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் – IOC தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை மேம்பட, தேசிய விளையாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐஓசி, அந்த அமைப்புக்களின் செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது என்று கூறியள்ளதாகவும் ரன்தீர் சிங் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விளையாட்டு அமைச்சகம், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள்தான் இப்போது மீண்டும் அமல்படுத்தப் படுவதாகவும், விளையாட்டுத் துறையில் உள்ளவர்களும் பொதுமக்களும் இதை முறைப்படுத்த நீண்டகாலமாகக் கோரி வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் புதுடெல்யில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளை புதிய விதிமுறைகள் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அமைச்சர் எம்.எஸ். கில் தெரிவித்தார்.
source:BBC
0 கருத்துகள்: on "விளையாட்டு அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு"
கருத்துரையிடுக