ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் என்ற விளையாட்டின் மீதான அலாதி ஆர்வம் நமது இந்தியர்களுக்கு கிரிக்கெட், கால்பந்திற்கு அடுத்தப்படியாக டென்னிஸ் மீதுதான் உள்ளது.
இறுக்கமான ஆடைகளுடன் ஆடுகளத்தில் இறங்கி ஹைதராபாத்தின் அழகு நங்கை சானியா மிர்ஷா ஆடத்துவங்கிய பொழுதுதான் இந்தியர்களின் ஆர்வம் டென்னிஸை நோக்கி திருப்பியதாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறுகிறார்.
சானியாவின் திருமணம் இப்பொழுது இந்திய, பாகிஸ்தான் அரசியல் அரங்குகளிலும் சூடுபிடித்துள்ளது. பத்திரிகைகளுக்கும் இது கோலகலமாகி போய்விட்டது.
பெண்ணின் உள்ளம் புரியாத புதிர் எனக் கூறுவார்கள். தனது பால்யக்கால தோழனான ஸுஹ்ராப் என்ற மஜீதுடன் திருமண நிச்சயார்த்தாத்தம் முடிந்த பின்னர் திடீரென மனம் மாறிய சானியாவின் முடிவு இதற்கு சிறந்த உதாரணம். சானியாவின் ஏஸுகளுக்கு ஸுஹ்ராப் அடித்த ரிட்டேன்களால் விளையாட்டு வினையாகிப் போனது. ஸுஹ்ராபை பிடிக்காவிட்டால் என்ன வேறு இந்திய பணக்காரர்கள் எவரும் கிடைக்கவில்லையா சானியாவுக்கு அங்கலாய்க்கிறார் பால்தாக்கரே.
ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ் என்று சானியா கூறிவிட்டபிறகு இந்தியரை ஏன் மணமகனாக தேர்ந்தெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில் என்ன அர்த்தம் உள்ளது.
சானியாவின் மிக்ஸட் டபிள்ஸில் புதிதாக ஜோடி சேர்ந்துள்ளார் சோயப் மாலிக். வெறும் ஆஃப் ஸ்பின்னராக ஆடத்துவங்கிய சோயப் பின்னர் ஆல்ரவுண்டராக மாறி தனது நாட்டிற்காக சிறப்பானதொரு பங்களிப்பை ஆற்றியுள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கெதிராக நல்லதொரு கேரியர் ரிக்கார்டு சோயபிற்கு உண்டு. அதேப்போல் குடும்ப வாழ்க்கையிலும் நல்லதொரு பங்களிப்பை இந்திய மண்ணில் அளிக்கலாம் என சோயப் மாலிக்கிற்கு நம்பிக்கையிருக்கும்.
இதற்கிடையில் சோயப் முன்பு ஹைதராபாத்தைச் சார்ந்த ஆயிஷா சித்தீக்கியை திருமணம் முடித்ததாக கூறிய சலசலப்பும் சோயப்-சானியா திருமணம் தொடர்பான செய்திகளுக்கு மெருகூட்டியுள்ளது.
என்னவாயினும், வருகிற ஏப்ரல்-15 ஆம் நாள் சோயப் என்ற கிரிக்கெட் வீரர் சானியாவுக்கு ஒரு லைஃப் வழங்கப் போகிறார் என்பது நிச்சயம்.
அந்நிய தேசத்தவர்களை திருமணம் முடிப்பது நாட்டு வழக்கமாகி காலங்கள் கடந்துவிட்டன.இது ஒன்றும் புதிதல்ல. பின்னர் ஏன் சானியா-சோயப் விஷயத்தில் மட்டும் இவ்வளவு அக்கறை? மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பர்மாவைச் சார்ந்த பெண்மணியை திருமணம் செய்து அவரது பெயரையும் உஷா என்று மாற்றினார். கனடா நாட்டைச் சார்ந்த கிறிஸ்டிதான் நமது வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் இஸ்ரேல் சிநேகிதருமான சசி தரூரின் துணைவி. இந்தியாவிலுள்ள பெண்ணையே திருமணம் முடிக்கலாம் என மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீர்மானித்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபையில் நிறைவேறியிருக்குமா? பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாகவும், மீரா குமார் சபாநாயகராகவும் பதவியில் அமர்ந்திருக்கத்தான் முடியுமா? இருநூறு ஆண்டுகலாம் இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டீஷாரின் கடைசி கவர்னர் மெளண்ட் பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவுடன் நமது நேருமாமா கொண்ட மெய்யல் ஊரறிந்த ரகசியமல்லவா? இந்தக்காதலை எந்த ரகத்தில் சேர்ப்பது என்பது வேறு விஷயம்.
பால்தாக்கரேயும் சில பாசிச வானரங்களும் சானியாவின் திருமணத்தை எதிர்ப்பது வேறொன்றுமில்லை, சானியா பாகிஸ்தானிற்காக யு.எஸ் ஓபனிலோ அல்லது ஆஸ்திரேலியன் ஓபனிலோ ஆடிவிடுவாரோ என்ற பயம்தான் காரணமெனில் சில முன்னேற்பாடுகளை இப்பொழுது செய்யலாமே!
பாலிவுட்டை வட்டமிடும் நமது மஹேந்திர சிங் டோனியை செரீனா வில்லியம்ஸையும், யுவராஜ் சிங்கை மரியா ஸரபோவாவையும் திருமணம் முடிக்கவைப்பதன் மூலம் இந்தியாவுக்கு பல க்ராண்ட்ஸ்லாம் டைட்டில்களை சொந்தமாக்கலாமே! "களி முடக்கியாலும் கல்யாணம் முடக்கருதே" என்றதொரு மலையாள பழமொழி உண்டு. அதாவது ஆட்டத்தை நிறுத்தினாலும் திருமணத்தை நிறுத்திவிடாதீர்கள் என்று. ஆகவே ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!விளையாட்டு வீரர்களின் சொந்த வாழ்க்கையில் வேண்டாம் ப்ளீஸ்!
தேஜஸிலிருந்து
0 கருத்துகள்: on "ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் விளையாட்டோடு மட்டும் போதும்"
கருத்துரையிடுக