14 பிப்., 2011

குற்றவாளிகளின் தேசமா நாம்??

ஊழல்... எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நம் நாட்டில் மிகவும் மலிந்து விட்டது. இன்று எந்த ஊழல் வெளிப்படும் என்றுதான் தினமும் படுக்கையை விட்டு எழும்முன் நினைப்பு வருகிறது. ஊழல் செய்யப்பட்ட தொகைக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் வரும் என்று தலையை சொறியும் நிலையில்தான் அப்பாவி பொதுஜனம் உள்ளார். 1.76 இலட்சம் கோடி... இதனை எப்படி எழுதுவது என்று தெருக்கோடியில் நின்று கொண்டு அப்பாவி பொதுஜனம் யோசித்து கொண்டிருக்கும் போதே 2 லட்சம் கோடி ரூபாயில் இஸ்ரோ ஊழல் என்றொரு செய்தி வருகிறது!!

அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் அதிகாரிகள், ஊடகத்துறை பெரும் புள்ளிகள், தொழில் அதிபர்கள் என அனைவரும் தத்தமது பங்கை இதில் செவ்வனே செய்துள்ளனர்.

இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டவர்களுள் ஒருவர்தான் பி.ஜே.தாமஸ். கேரளா அரசின் தலைமை செயலாளர், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். இந்நிலையில் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையளராக இவர் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

கேரள அரசின் தலைமை செயலளாராக இருந்தபோது பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இவரை இப்பதவியில் நியமனம் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஊழல் கண்காணிப்பு ஆணையாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் சுஷ்மாவும் ஒருவர். இருந்த போதும் காங்கிரஸ் அரசு இவரை பரிந்துரை செய்து பதவியிலும் அமர்த்தியது. அன்றிலிருந்து இவ்விவகாரத்தில் கூச்சல் குழப்பம்தான்.


ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையளராக நியமிப்பது? இயல்பாக எழும் கேள்விதான். இறுதியாக இவரை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கோரியது. இதனை மறுத்த பி.ஜே.தாமஸ் சில தர்மசங்கடமான கேள்விகளை பத்திரிகையாளர் சந்திப்பிலும் உச்ச நீதி மன்றத்திலும் கேட்டு வைத்தார்.

ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்ந்து பதவியில் நீடித்திருக்கும் போது தான் மட்டும் எதற்காக பதவி விலக வேண்டும் என்றொரு வாதத்தை எடுத்து வைத்தார். எல்லா திருடர்களும் பதவியில் இருக்கும் போது என்னை மட்டும் எதற்கு பதவி விலக சொல்கிறீர்கள் என்பது போல் உள்ளது இவரது கேள்வி.

இவரின் மற்றொரு கேள்விதான் தற்போது விவாத பொருளாக மாற வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 545 உறுப்பினர்களில் 153 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றொரு தகவலை தாமஸ் வழங்கியுள்ளார். இவர்களில் சிலர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளன.

மாநில சட்டசபைகளிலும் இதே நிலைதான் உள்ளது. மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதும் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சட்டமன்ற உறுப்பினர் அந்த பெண்ணாலேயே கொலை செய்யப்படுவதும் தற்போது செய்திகளாக வருகின்றன. இவை எதனை உணர்த்துகின்றன?

குற்றவாளிகளை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் நமது நாட்டின் நிலை மோசமடைந்து விட்டதா? இல்லையென்றால் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் நல்ல எண்ணம் நம்மிடம் குறைந்துவிட்டதா? இல்லை, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாமும் லஞ்சம், ஊழல், மோசடி என அனைத்திலும் ஈடுபபட்டு வருகிறோம். நம்மில் ஒருவரைதானே நமது பிரதிநிதியாக தேர்வு செய்கிறோம், அவர் பின் எப்படி இருப்பார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டதா? இதில் ஏதேனும் ஒன்றுதான் நமது கேள்விக்கு பதில் என்றால் இது நமது நாட்டின் பரிதாப நிலையைதான் உணர்த்துகிறது.

இந்த நிலையில் இருந்துகொண்டு 2020ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று எப்படி கனவு காண்பது??

இன்று நம் மக்களில் சிலர் 'அரசியல் சாக்கடைதான்' என்று கூறி ஒதுங்கிவிட முனைகிறோம். ஆனால் இந்த சாக்கடையை அப்படியே விட்டுவிட்டால் அது ஒட்டுமொத்த தேசத்தையும் சீரழித்து விடும் என்பதை நாம் உணர வேண்டும்.

இரத்தத்தையும் உயிரையும் விலையாக கொடுத்த நமது முன்னோர்கள் நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தது நாட்டை சில பேர் கொள்ளையடிப்பதற்கு அல்ல. இது நமது நாடு, இதனை பாதுகாப்பதும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதும் நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

-சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குற்றவாளிகளின் தேசமா நாம்??"

கருத்துரையிடுக