8 மார்., 2011

அரசியல்-மாத்தியோசி-2 - ஹைஜாக் செய்யப்படும் ஜனநாயகம்

ஹைஜாக் செய்யப்படும் ஜனநாயகம்
ஜனநாயகத்தின் தத்துவமாக பெரும்பான்மையை குறிப்பிடுவார்கள். இதனை எவ்வாறு மோசடியாக பயன்படுத்துகிறார்கள் என்பதுக் குறித்து நாம் சி்றிது ஆராய்வோம்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக பெரும்பான்மையான மக்கள் பேசுகின்றார்கள் என்ற அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட பொழுது, "ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே" என ஜனநாயகத்தின் பெரும்பான்மை தத்துவத்தைக் குறித்து கிண்டலாக குறிப்பிட்டார்.

இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பெரும்பான்மை என்பது பெரும்பாலும் குறுக்கு வழியில்தான் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு மிகப்பெரிய உதாரணம்: குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியைக் குறிப்பிடலாம். கோத்ரா ரெயில் எரிப்பைக் காரணங்காட்டி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுக் குவித்து இந்திய வரலாற்றிலேயே கொடூரமாக அரங்கேறிய இனப் படுகொலைக்கு தலைமைத் தாங்கியவர் மோடி. நேரடியாக ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு முஸ்லிம்களை கொன்று குவிக்கவில்லையே தவிர முஸ்லிம் இனப் படுகொலைக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளார். இதனை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையும் தெளிவாக கூறுகிறது.

இவ்வளவு மோசமான கொடூரமான படுகொலையை முன்னின்று நிகழ்த்தியவர் எவ்வாறு தொடர்ந்து குஜராத்தில் முதல்வராக தொடர்கிறார் என்பது ஆச்சரியமாகத் தோன்றலாம். சிலர் மோடி குஜராத்தை வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றிவிட்டார் எனக்கூறுவர். ஆனால் வளர்ச்சித் திட்டமே ஒரு மோசடி என்பது வேறு விஷயம். உண்மையில், மோடி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றிப்பெற காரணம் நாம் மேலே குறிப்பிட்ட ’ஜனநாயக ஹைஜாக்’ ஆகும்.

ஆம், தீவிரமான மதவெறி கிளர்ந்தெழுந்துள்ள மாநிலமாகவே குஜராத் உள்ளது. மதவெறி என்ற விஷவிருட்சம் ஏற்படுத்திய மாயைதான் ஜனநாயகத்தின் போர்வையில் மோடி குஜராத்தின் முதல்வராக தொடர்வதற்கு உதவுகிறது.

குஜராத்தில் அதிகார வர்க்கம் ஹிந்துத்துவ மயமாகி பல வருடங்களாகிவிட்டது. இந்நிலையில் இங்கு ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது என்பதல்ல அதைவிட குழி தோண்டி புதைக்கப்பட்டது எனலாம்.

'குஜராத் ஸே முஸல்மான் கோயி இன்ஸாஃப் நஹீ மிலேகா' (குஜராத்திலிருந்து முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது)-இது குஜராத் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான எம்.எம்.முன்ஷி தனது கட்சிதாரரான ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ஒருவரிடம் கூறிய வார்த்தைகளாகும்.

தனது இருமகன்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க குஜராத்தில் வாய்ப்பு இல்லாததால் வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுமாறு அந்த தந்தையிடம் வழக்கறிஞர் முன்ஷி ஆலோசனைக் கூறுகிறார்.

பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலையில் உற்றாரையும் உறவினர்களையும் இழந்த பல்கீஸ் பானு, உச்சநீதிமன்றத்தை அணுகி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரினார். இச்சம்பவங்கள் குஜராத்தில் நீதி எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாகும். அந்த வகையில்தான் தற்பொழுது வெளியாகியுள்ள கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு தீர்ப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமே நீதி அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டுமென்பதுதான். இவ்வாறு நீதி மறுக்கப்படும் மாநிலத்தை ஆளும் மோடியின் அரசு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என எவ்வாறு கூற இயலும்? சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை ஒரு மாநில முதல்வரின் தலைமையில் கொடூரமாக இனப் படுகொலையை செய்துவிட்டு சுதந்திரம், நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்ற இந்தியாவின் அனைத்து மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை குழித்தோண்டி புதைத்த குஜராத்தை இந்தியாவின் சோதனைக் கூடம் என கூக்குரலிடுகிறது ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாத கூட்டம்.

அதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு அநியாயங்களை புரிந்து வருகின்றனர். அதிகாரத்தை பயன்படுத்தி இவர்கள் புரியும் அட்டூழியங்களை ஒதுக்கி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பலிகடாவாக மாறுவதற்கா நமது முன்னோர்கள் தங்களின் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள்?

இஸ்லாமிய அறிஞரும்,ஆட்சியாளருமான அலீ (இறைவன் அவருக்கு அருள் புரிவானாக!) அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு கவனிக்கத்தக்கது: "சத்திய வாதிகள் பாராமுகமாக இருக்கும் பொழுதுதான் அசத்தியம் தலை தூக்கும்".
யோசிப்புகள் தொடரும்...
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசியல்-மாத்தியோசி-2 - ஹைஜாக் செய்யப்படும் ஜனநாயகம்"

கருத்துரையிடுக