14 டிச., 2010

கர்காரே படுகொலையும் காங்கிரசும்

மும்பைத் தாக்குதலின் போது முற்றிலும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே.

அவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் தனது உயிருக்கு தீவிர ஹிந்துத்துவா சக்திகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தன்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கூறியதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரின் அறிக்கை ஹிந்துத்துவா சக்திகளிடம் பல்லிளிக்கும் காங்கிரஸின் கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும்.

திக் விஜய் சிங்கின் அறிக்கையைத் தொடர்ந்து பா.ஜ.கவின் எதிர்ப்பிலிருந்து தலைதப்பினால் போதும் என்ற ரீதியில் அமைந்திருந்தது அவ்வறிக்கை.

காங்கிரஸ் கட்சியின் இச்செயல் முற்றிலும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு வாய்ப்பளித்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அக்கட்சி செய்துவரும் தொடர் துரோகத்தின் ஒரு பகுதியாகும் இது.

திக் விஜய்சிங்கின் அறிக்கையில் புதியதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் காவல்துறை ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட 'ஹூ கில்ட் கர்காரே' (கர்காரேயைக் கொன்றது யார்?) என்ற நூலில் பகிரங்கமாக வெளியிட்ட தகவல்தான் இது.

மலேகான் குண்டுவெடிப்பிலும், இந்தியாவில் அண்மையில் நடந்த இதர குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா சக்திகளின் கரங்கள் இருந்தது பயங்கரமான உண்மையாகும். ராணுவ அதிகாரிகளின் துணையுடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதும், பின்னர் அந்த குற்றத்தை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீது சுமத்தி அவர்களை ஒன்று போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளவது, அல்லது அவர்களை அரேபிய உடையினால் முகத்தைமூடி ஊடகங்களின் முன்னிலையில் காட்சிப் பொருளாக்கி பின்னர் சிறையில் தள்ளுவது என காலங்காலமாக ஹிந்துத்துவா சக்திகள் நிகழ்த்தி வந்த சதித்திட்டம் கர்காரே மூலம் வெட்ட வெளிச்சமானது.

திக்விஜய் சிங்கின் அறிக்கைக்கு பா.ஜ.க வின் பதில் வழக்கம்போல் உண்மையை மூடிமறைக்க நடத்தும் நாடகமாகும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் கர்காரேயின் படுகொலை. இதனைத்தான் திக்விஜய்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

குற்றவாளிகளை சுற்றித்திரிய விட்டுவிட்டு, தெருவோரங்களிலும், மஸ்ஜிதுகளிலும், தர்காக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் தலையில் கட்டிவைப்பதுதான் இவர்களின் பார்வையில் தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம்.

காங்கிரஸிற்காக திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள ஜனார்தன் திரிவேதி பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவலன் என்ற ரீதியில் பதிலளித்துள்ளார். அதனடிப்படையில், திக்விஜய்சிங் வெளியிட்டது கர்காரேயுடன் அவரது தனிப்பட்ட ரீதியிலான உரையாடலாகும். அதாவது, காங்கிரஸ் கட்சி முறையாக பதிலளிக்க வேண்டுமானால்,கர்காரே தான் கொல்லப்படுவதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டியைக் கூட்டி அய்யோகோ! நான் கொல்லப்படவிருக்கிறேன்! என உரக்க கூறியிருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வாக்குகள் முக்கியம். ஆனால், பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான நரசிம்மராவ் அரசு தோல்வியைத் தழுவியது ஹிந்துத்துவா சக்திகளின் வாக்குகளால் அல்ல என்பதை காங்கிரஸ் புரிந்துக்கொள்ள வேண்டும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்காரே படுகொலையும் காங்கிரசும்"

கருத்துரையிடுக