8 ஜன., 2011

குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்

புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.

ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார்.

அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்"

Unknown சொன்னது…

why do u not allow us to share these in facebook

கருத்துரையிடுக