11 பிப்., 2011

வால்பாறையில் யானைகள் அட்டகாசம் - 3 பெண்கள் பலி

கோவை,பிப்.11:வால்பாறையை அடுத்த பெரிய கல்லாறு எஸ்டேட் அருகே தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான டேன்டீ எஸ்டேட் உள்ளது. நேற்று 25 பெண் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணி அளவில் தேயிலை தோட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் எஸ்டேட்டுக்குள் புகுந்தன.

யானைகளை பார்த்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். யானைகள் அவர்களை துரத்தின. இதில் செல்வத்தாய் (வயது 50), பரமேஸ்வரி (58), கதீஜா (56) ஆகியோர் தப்பி ஓட முடியாமல் யானையின் பிடியில் சிக்கி கொண்டனர். 3 பெண்களையும் யானைகள் துதிக்கையால் சுற்றி வளைத்து வீசின.

பின்னர் அப்படியே காலில் போட்டு நசுக்கியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் தியாகராஜன் தலைமையில் வன பாதுகாவலர் பசவராஜ், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அழகிரிசாமி, வால் பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பலியான 3 பெண் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். சம்பவம் நடந்த இடத்திலேயே காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. வனத்துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் 3 பெண்களின் உடல்களையும் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு திரண்ட எஸ்டேட் தொழிலாளர்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்தனர்.

கலெக்டர் சம்பவ இடத்துக்கு வரவேண்டும். தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்த முயன்றனர். அவர்களது முயற்சிக்கு பலன் இல்லை. 3 பெண்களின் உடல்களையும் எடுக்க விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். விடிய விடிய அவர்கள் போராட்டம் நடந்தது.

நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டன. இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதற்கிடையேயானை மிதித்து பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த தலா ரூ.1 1/2 லட்சம் உதவித் தொகைக்கான காசோலைகளை அதிகாரிகள் வழங்கினார்கள். அவற்றையும் வாங்க மறுத்துவிட்டனர்.

தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரும்வரை உடல்களை உறவினர்கள் வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்களை உறவினர்கள் பெற்றுச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வால்பாறையில் யானைகள் அட்டகாசம் - 3 பெண்கள் பலி"

கருத்துரையிடுக