8 பிப்., 2011

எதிரிகளுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்!

சிறிய ஒரு விருந்து நிகழ்ச்சி. என்னையும் அழைத்திருந்தார்கள். உறவினர்களும், நண்பர்களுமாக எட்டு, பத்து பேர் இருந்தார்கள். பேச்சு பொது விஷயத்திற்கு மாறியது. ஓர் இஸ்லாமிய அமைப்பு பிளந்து கொண்டிருந்த சமயம் அது. ஒரு நிலையில் இல்லையென்றாலும் வேறொரு நிலையில் அங்கிருந்த அனைவரும் அதனோடு சம்பந்தப்பட்டிருந்தார்கள். விவாதம் இறுதியில் ஓர் ஆளைப் பற்றிச் சுற்றிச் சுற்றி வந்தது.

மிகவும் சாந்தமான மௌலவி அவர். களங்கமில்லாத மனிதர். தன் ஊரையும், வீட்டையும் விட்டு விட்டு மார்க்கப் பணிக்காக எங்கள் பகுதியில் வந்து தங்கியிருப்பவர். அமைப்பு பிளவுபட்ட பிறகும் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையாக இருப்பவர்.

பேச்சினிடையில் ஒரு ஆள் கூறினார்: "அவர் ஒரு முனாஃபிக்." நான் திடுக்கிட்டேன். எவ்வளவு வேகமாக ஒருவர் முனாஃபிக்காக மாற்றப்படுகிறார். பிளவுகளில் சிக்காமல் தன்னை நடுநிலையாக ஆக்கிக்கொண்ட ஒருவருக்குக் கிடைக்கும் பட்டத்தைப் பார்த்தீர்களா?

ஷைத்தானின் வேலை எப்பொழுதும் ஒரே மாதிரிதான் இருக்கும். பகீரதப் பிரயத்தனம் எடுத்து முஸ்லிம்களின் தலைமையைக் கைப்பற்றிய முஆவியா(ரலி) தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளை வரலாற்றில் காணலாம்.

முக்கிய நகரங்களுக்கெல்லாம் அவர் தன் படையை அனுப்பினார். தனது உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர்களின் தலையைக் கொய்வதற்கு அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். வாஇல் இப்னு ஹிஜ்ர்(ரலி) அவர்களைக் கைதியாக்கி படையினர் முஆவியா(ரலி) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

கொலை செய்யப்பட்ட மூன்றாம் கலீஃபா ஹஸ்ரத் உஸ்மான்(ரலி) அவர்களின் மருமகன்தான் வாஇல்(ரலி).

ஹஸ்ரத் உஸ்மான்(ரலி) அவர்களைக் கொலை செய்த கிராதகர்களைக் கைது செய்யவில்லை என்று அலீ(ரலி) அவர்கள் மேல் குற்றம் சாட்டித்தான் முஆவியா(ரலி) அவர்கள் கலகம் செய்தார். ஆதலால் இந்தக் கலகத்திற்கு ஹஸ்ரத் உஸ்மான்(ரலி) அவர்களின் மருமகன் வாஇல்(ரலி) இயல்பாகவே உடந்தையாக இருப்பார் என்றுதான் முஆவியா(ரலி) எண்ணினார்.

ஆனால் வாஇல்(ரலி) இந்தக் கலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. "எனக்கு உதவி செய்வதற்கு உங்களுக்கு என்ன தடங்கல் இருக்கிறது?" என்று முஆவியா(ரலி) அவர்கள் வாஇலை(ரலி) நோக்கி வினவினார்.

வாஇல் இப்னு ஹிஜ்ர்(ரலி) அவர்கள் இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அருங்கரம் பிடித்து இஸ்லாத்தை இதயத்தில் ஏந்தியவர். அவர் முஆவியா(ரலி) அவர்களிடம் ஒரு சம்பவத்தை விவரித்தார்.

ஒரு தடவை வாஇல்(ரலி) அண்ணலாருடன் இருந்தார். அண்ணலாருடன் இன்னும் பல நபித்தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். அண்ணல் நபிகள்(ஸல்) அவர்கள் கிழக்கு திசை நோக்கி தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தன் தலையைத் தாழ்த்திய அண்ணலார் அருமை நபிகள்(ஸல்..) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "இருள் மூடிய இரவில் கருத்த பல்லியைப் போல் உங்களுக்கிடையில் குழப்பங்கள் தலை தூக்கும்."

இதனைக் கேட்ட வாஇல்(ரலி) வினவினார்: "அல்லாஹ்வின் தூதரே, அக்குழப்பங்களின் தன்மை எப்படியிருக்கும்?"

அண்ணலார் சொன்னார்கள்: "முஸ்லிம்கள் பரஸ்பரம் வெட்டிக்கொள்ள ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்குவார்கள். அப்படிக் கண்டால் நீ எந்தப் பிரிவிலும் உன்னை இணைத்துக் கொள்ளாமல் தனித்து இருக்கவேண்டும்."

இந்தச் சம்பவத்தைக் கூறிவிட்டு, "இதனால்தான் நான் இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்" என்று வாஇல்(ரலி) கூறினார். செய்தி தெளிவாகப் புரிந்த பிறகும் முஆவியா கேட்டார்: "நீங்கள் ஷியா ஆகிவிட்டீர்களா?"

வாஇல்(ரலி): "இல்லை. நான் மொத்த முஸ்லிம்களுக்கும் நன்மையை நாடுகின்றேனே தவிர வேறொன்றும் இல்லை."

கொஞ்சம் கண்ணியம் குறைவான நிலையிலேயே ஹஸ்ரத் அலீ(ரலி) அவர்களுடன் முஆவியா(ரலி) யுத்தம் செய்துகொண்டிருந்த நிலையில் சில கிறிஸ்தவ உளவாளிகள் சில சில்லறை உதவி வாக்குறுதிகளுடன் முஆவியா(ரலி) அவர்களை அணுகினார்கள். ஆனால் அந்த முயற்சிக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டை முஆவியா(ரலி) எடுத்தார்.

"இது எங்களுக்கிடையிலுள்ள உள் விவகாரம். நீங்கள் இதில் தலையிட வேண்டாம். உங்களுக்கெதிராக நாங்கள் யுத்தத்திலிருக்கிறோம். அதன் முன்வரிசையில் நானும், அடுத்த வரிசையில் அலீயும் நிற்போம்."

ரோமப் பேரரசுக்கு முஆவியா(ரலி) அவர்கள் கொடுத்த பதிலடி இப்படித்தான் இருந்தது.

தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு யுத்தமே வெடிக்கும் நிலையிலும் முஸ்லிம்களின் மொத்த எதிரிக்கு இடம் கொடுக்கவில்லை அவர்கள். இந்தக் கண்ணோட்டம் இப்பொழுது அரிதாகி விட்டது.

முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் முற்படும் நபர்களை "இவர்கள் ஷியாக்கள்" என்று வாய் கூசாமல் குற்றம் சுமத்தும் போக்குதான் இன்று உள்ளது.

பள்ளிகளில் மாறி மாறி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு எதிரிகளே காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். இது எதிரிகளின் மிகப் பெரிய தந்திரமாகக் கருதப்படுகிறது. ஆஃப்கானிஸ்தானையும், ஈராக்கையும் துவம்சம் செய்த பிறகு ஏகாதிபத்திய சக்திகள் இப்பொழுது ஈரானைக் குறி வைக்கின்றன.

ஈரானை அடிப்பதற்கு முஸ்லிம்களிடம் ஆதரவை உண்டாக்குவதற்காக ஷியா விரோதப் பிரச்சாரத்தை ஏகாதிபத்திய சக்திகள் முடுக்கி விட்டுள்ளன.

எதிரிகளின் இந்தத் தந்திரக் குழியில் முஸ்லிம்களில் சிலரும் விழுந்து கிடக்கிறார்கள். முஸ்லிம்களை அழிக்கும் எதிரிகளுக்கு ஆதரவாக இவர்களின் ஜும்ஆ மிம்பர்களும், மேடைகளும் பயன்படுகின்றன.

எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!
மூலம்:தேஜஸ் மலையாள நாளிதழ்
MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எதிரிகளுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்!"

கருத்துரையிடுக