9 பிப்., 2011

ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு புஷ் என்னிடம் கேட்கவில்லை: ரம்ஸ்பீல்டு

வாஷிங்டன்,பிப்.9:ஈராக் மீது போர் தொடுப்பது பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் என்னிடம் கருத்துக் கேட்கவேயில்லை என்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு கூறியுள்ளார்.

ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் ரம்ஸ்பீல்டு ஆகியோரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தனது சுயசரிதையில் ரம்ஸ்பீல்டு நினைவுகூர்ந்திருக்கிறார். தெரிந்ததும் தெரியாததும் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில் அதிபர் நிக்சன் காலத்திலிருந்து புஷ் காலம் வரை தனது வெவ்வேறு வகையான அனுபவங்களை ரம்ஸ்பீல்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஈராக் போருக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் புஷ்ஷும் நானும் பங்கேற்றிருக்கிறோம். எனினும் ஈராக் மீது போர் தொடுப்பது சரியான முடிவுதானா என்று அவர் என்னிடம் ஒருபோதும் கேட்டதாக நினைவில்லை என்று ரம்ஸ்பீல்டு தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

2003-ம் ஆண்டில் ஈராக் போர் முடிந்ததும், துருப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம் என்று புஷ் கூறிய கருத்துகளை ரம்ஸ்பீல்டு ஏற்க மறுத்தார்.

இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஈராக் போரிலேயே இதுதான் மிகவும் மோசமான தோல்வி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகம் பற்றி ஏபிசி நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாம் தேர்ந்தெடுக்காத பாதை மிகவும் எளிதாக இருந்திருக்கும் என்று கூற முடியாது. அதைத் தெரிந்து கொள்வதும் கடினம்" என்று கூறினார்.

பலர் சேர்ந்து கார் ஓட்டியதைப் போன்ற நிலை ஏற்பட்டதாலேயே ஈராக் போரில் தோல்வி ஏற்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வியட்நாம் போர் மிகமிகத் தவறான நடவடிக்கை என்று ஒப்புக்கொண்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் மெக்னமாராவின் கருத்தை ஈராக் போருடன் ஒப்பிட முடியாது என்றும் ரம்ஸ்பீல்டு கூறியிருக்கிறார்.

"ஈராக் போர் வேறு வகையானது. இப்போது சதாம் இல்லை. ஆப்கானிஸ்தானை விட்டு தலிபான்கள் வெளியேறி விட்டார்கள். உலகம் நல்ல இடமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்" என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

ஈராக் போரில் எதுவும் அவசரப்பட்டு செய்யப்படவில்லை எனவும் எல்லாம் மிகவும் கவனமாகவே ஒன்றன்பின் ஒன்றாகவே செய்யப்பட்டன என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

ஜார்ஜ் புஷ்ஷின் நெருக்கமான ஆலோசகர்களாக இருந்தவர்களில் கான்டலீஸா ரைஸூக்கு அனுபவம் போதாது என்றும், காலின் பவலுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்றும் ரம்ஸ்பீல்டு தனது புத்தகத்தில் சாடியிருக்கிறார்.
தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு புஷ் என்னிடம் கேட்கவில்லை: ரம்ஸ்பீல்டு"

கருத்துரையிடுக