14 மார்., 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ

புதுடெல்லி,மார்ச்.13:சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது.

குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறைவாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மொடாஸா, மலேகான் ஆகிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் நேபாளத்தில் ரகசியமாக தங்கியிருப்பதாக அந்நாட்டிலிருந்து என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நேபாளத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தொடர்புகள் குறித்து பரிசோதித்த பொழுது புலனாய்வு அதிகாரிகளுக்கு இவ்விஷயம் தெரியவந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்துவரும் இவர்களுக்கு உதவி புரிந்தவர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது.

2010-ஆம் ஆண்டு மே மாதம் வரை ராம்ஜி கல்சங்கரா ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்துள்ளார். இதனை என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு இவர் மேற்குவங்காளத்திலும் தலைமறைவாக தங்கியிருந்தார். இவரின் இடது காலில் மூட்டிற்கு கீழே காயத்திற்கு தையல் போட்ட அடையாளம் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக வாழும் காலக்கட்டத்தில் இவர் தனது வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதில்லை. வழக்கமாக லேப்டாப் உபயோகிக்கும் இவரின் கழுத்தில் ஒரு பென் ட்ரைவ் எப்பொழுதும் தொங்குவதாக கல்சங்கராவின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

நேபாளத்தில் டாங்கேவுக்கு உறவினர்கள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்கண்டில் வைத்து கல்சங்கராவை டாங்கே சந்தித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானாந்தா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்களிருவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது என்.ஐ.ஏ.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் சி.பி.ஐ குழுவினர் அஸிமானந்தாவை கைது செய்தபொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்குள்ளது தெளிவானது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டால் புலனாய்வில் திருப்புமுனையாக அமையும் என என்.ஐ.ஏ நம்புகிறது.

இந்தூர் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற டாங்கேவும், மும்பை ஐ.டி.ஐயிலிருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற கல்சங்கராவும் வெடிக்குண்டுகளை தயார் செய்வதில் வல்லுநர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ"

கருத்துரையிடுக