விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும்,அப்பீல் மனு விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளின் நிலை பற்றி முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தண்டனை பெற்ற கைதிகள், அப்பீல் செய்தாலும், அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதுபோல, குற்றம் காரணமாக அடைக்கப்பட்ட விசாரணை கைதிகள் , விசாரணைக்கு உட்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இப்படி சிறையில் கண்டுகொள்ளப் படாத கைதிகள் பல்லாயிரக்கணக்கான பேர், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல், இப்படி விசாரணை செய்யப்படாமலேயே அனுபவித்து விட்டனர். இன்னமும் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவர் கள் பற்றிய விரிவான கருத்துக்கள், பிரதமர் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. சமீபத்தில் ஒரு பத்திரிகையும் இது தொடர்பாக ஆய்வு அறிக்கை வெளியிட்டது.
இதை அடிப்படையாக வைத்து, ராஜ்யசபா காங்., உறுப்பினர் அஸ்வினி குமார், சமீபத்தில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார்."பல முறை கோர்ட்கள் எச்சரித்தும், இது போன்று நிலை நீடிக்கிறது. தண்டனை கைதிகளின் அப்பீல் மனு மீதான நடவடிக்கை பற்றி கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அதுபோல, விசாரணைக் கைதிகளின் நிலையும் படுமோசம். சிறையில் அடைப்பதோடு சரி; அவர்களை கண்டுகொள்வதே இல்லை' என்றும் தன் கடிதத்தில் குமார் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த விஷயம் குறித்து விசாரித்து உரிய முடிவு எடுக்கும்படி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்: on "விசாரணை கைதிகளுக்கு விடிவு! சட்ட அமைச்சருக்கு பிரதமர் உத்தரவு!"
கருத்துரையிடுக