27 அக்., 2009

ஆர்.எஸ்.எஸ் VS பா.ஜ.க

டெல்லி: பாஜகவுக்கு புற்று நோய் வந்துவிட்டது. அதற்கு பெரிய அறுவை சிகிச்சையும் கீமோதெராபி சிகிச்சையும் தேவைப்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதையடுத்து அவருக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே நேரடி மோதல் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து 3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக மரண அடி வாங்கியுள்ளது. இதையடுத்து இந்தக் கருத்தைத் தெரிவித்தார் மோகன் பகவத்.

இதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் காட்டாமான பதிலைத் தந்துள்ளார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.
அவர் கூறுகையில், பாஜகவுக்கு புற்றுநோய்- ஆபரேசன் என்றெல்லாம் கூறுபவர் நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்றார்.
இதன்மூலம் ஆர்எஸ்எஸ்சை இதுவரை எந்த பாஜக தலைவரும் தாக்காத அளவுக்கு கடுமையான வார்த்தையால் சாடியுள்ளார் ராஜ்நாத். தொடர் தோல்விகளால் கட்சி கலகலத்தாலும் தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு உள்ளிட்ட டாப் 5 தலைகள் பதவி விலக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் குறித்த ராஜ்நாத்தின் விமர்சனம் அவரது பதவிப் பறிப்பில் போய் முடியும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பாவுக்கும் சிக்கல்:
இந் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து முதல்வரை மாற்றும் முயற்சிகளில் ரெட்டி சகோதரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர பெருமளவு உதவியவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். பெல்லாரியைச் சேர்ந்த சுரங்க அதிபர்களான இவர்கள் சுஷ்மா சுவராஜு்க்கு நெருக்கமானவர்கள். பாஜக ஆட்சிக்கு வர ஏராளமாக பணம் செலவிட்டதோடு, மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் செய்து பாஜகவுக்கு தாவ வைத்து மெஜாரிட்டியை உறுதி செய்தவர்கள். இதனால் இவர்களுக்கு அவர்கள் விரும்பிய முக்கிய துறைகள் தரப்பட்டுள்ளன.

ஆனாலும் முதல்வர் எடியூரப்பாவுடன் எப்போதும் மோதியே வரும் இவர்களை பாஜக மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்வது வழக்கம்.
இந் நிலையில் அமைச்சரவையில் தங்களை விட ஆச்சாரியா, ஷோபா ஆகிய அமைச்சர்களுக்கே எடியூரப்பா அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் கருதுகின்றனர். மேலும் ஷோபாவை மாநில பாஜக தலைவராக்க எதியூரப்பா முயற்சித்து வருவதையும் எதிர்த்து வருகின்றனர்.
அத்தோடு சமீபத்திய மழை, வெள்ளத்தையடுத்து நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி திரட்ட சுரங்க-மணல் லாரிகளுக்கு கூடுதல் வரி விதிக்க எடியூரப்பா முடிவு செய்தார். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்கள் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகி்ன்றனர்.
இந் நிலையில் நேற்று மாலை ரெட்டி சகோதரர்கள் தங்களது ஆதரவு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினர். அமைச்சர் கருணாகர ரெட்டி தலைமையில், அவரது வீட்டில் நடந்த இக் கூட்டத்தில் அவரது நெருங்கிய நண்பரான அமைச்சர் ஸ்ரீராமலு, அமைச்சர்கள் சிவன கவுடா நாயக், ஆனந்த் அஸ்னோடிகர், சந்திரசேகர், சுதாகர், பாலச்சந்திர ஜார்கிஹோளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் எடியூரப்பா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து அவரை மாற்றுமாறு தலைமையைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாகர ரெட்டி,
வெள்ள நிவாரண பிரச்சனையில் முதல்வர் எடியூரப்பா தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வருகிறார். காடக் மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஸ்ரீராமலு உள்ளார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தின் மூலம் எங்களது எண்ணத்தை எடியூரப்பா புரிந்து கொள்வார். இல்லாவிட்டால் அதற்கான பயனை அனுபவிப்பார் என்றார்.
அமைச்சர்களின் கூட்டம் குறித்து எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
ரகசிய கூட்டம் நடந்ததாக எனக்கு தகவல் ஏதும் இல்லை. கருத்து வேறுபாடு எதுவும் இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளப்படும் என்றார்.
எடியூரப்பாவை ரெட்டி பிரதர்ஸ் பாடாய்படுத்துவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்.எஸ்.எஸ் VS பா.ஜ.க"

கருத்துரையிடுக