9 டிச., 2009

லிபரான் சுட்டிக் காட்டிய 68 பேரையும் கைது செய்ய வேண்டும்- திருமாவளவன்

டெல்லி: அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்றால், பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?. எனவே லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 68 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு குறித்த லிபரான் அறிக்கை மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் அவர் பேசுகையில்,

லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று நடுநிலையாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

வழக்கமான கமிஷன் அறிக்கைகளை போல இதுவும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ என்ற ஐயமும் மக்களிடையே உள்ளது.

எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியான எந்த விஷயத்தையோ கூறிவிடவில்லை.

இந்த அறிக்கையில் எனக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக்க் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவ சேனா, பாஜக ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அது முஸ்லீம்களுக்கு காங்கிர‌ஸ் கட்சி துரோகம் செய்தாதகவே அமையும்.

இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி, அங்கே இந்த கோயில்களை எழுப்பியுள்ளனர்.

(ராமர் குறித்தும், ராமயணம் குறித்தும் மிக சர்ச்சையான விஷயங்களைச் சொல்லி) ராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் வாஜ்பாய்,அத்வானி,ஜோஷி போன்றவர்கள் அனைவரையும் அரசு உட‌னே கைது செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?.

அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார். எனவே இந்துத்துவ பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் மத வெறியர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்றார் திருமாவளவன்.

thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபரான் சுட்டிக் காட்டிய 68 பேரையும் கைது செய்ய வேண்டும்- திருமாவளவன்"

கருத்துரையிடுக