27 டிச., 2009

டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்

வேலூர்: பிரபலமான தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அது போலவே செய்து பார்த்து முகம், உடல் கருகி உயிருக்குப் போராடி வருகிறான் ஒரு மாணவன்.

சினிமாவுக்கு உள்ளது போல டிவி களுக்கு சென்சார் கிடையாது. இதனால் கண்ட கண்ட நிகழ்ச்சிகளெல்லாம் நம் வீட்டின வரவேற்பரையிலும், படுக்கை அறையிலும் புகுந்து கலாச்சார சீரழிவுக்கும், பல்வேறு அபாயங்களுக்கும் வித்திட்டு வருகிறது.

மெகா தொடர்களில் கள்ளக்காதலும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் ஒரு நிரந்தர அம்சமாக மாறிப் போயுள்ள நிலையில் தற்போது துணிகரமாக செய்யும் காரியங்கள் கொண்ட தொடர்களும் லேட்டஸ்டாக பிரபலமாகி வருகின்றன.

ஒரு முன்னணி தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் இப்படித்தான் 'தில்'லான ஒரு சாகச நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் இடம் பெறும் காட்சிகள் கண்டிப்பாக சிறார்களைப் பாதிக்கும். ஆனால் ஒப்புக்காக இதை நிஜத்தில் செய்து பார்க்க வேண்டாம் என்ற ஒற்றை வரியை மட்டும் போட்டு விட்டு படு பயங்கரமான காட்சிகளைக் காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்த்த வேலூர் சிறுவன், அதே போல செய்து பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறான்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் வினீத் (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து டி.வி.யில் வரும் அந்த குறிப்பிட்ட சாகச நிகழ்ச்சியை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். சம்பவத்தன்று அந்த டி.வி. நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்தியவர் வாயில் மண்எண்ணையை ஊற்றி அதனை வெளியில் கொப்பளித்து தீவைக்கும் சாகசத்தை செய்து காட்டினார்.

இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்த வினீத் தனது நண்பர்களுடன் இது பற்றி விவாதித்தான். நாமும் அதுபோல் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வினீத்துக்கு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மாலையில் வீட்டில் இருந்த மண்எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வினீத் வெளியில் எடுத்து சென்றான். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து காயந்த சறுகுகள் மற்றும் குப்பைகளை கூட்டி அதில் தீவைத்தான். பின்னர் அதன் அருகில் அமர்ந்து வாயில் மண்ணெண்ணையை ஊற்றி வினீத் சருகில் பற்றிய தீயை கையில் எடுத்தான். அப்போது அவனது உடலில் தீப் பற்றிக் கொண்டது. இதில் வினீத்தின் முகத்தில் இருந்து வயிறு வரை தீயில் கருகி விட்டது.

உடனடியாக அவனை கீ்ழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். வாய் பேச முடியாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறான் சிறுவன் வினீத்.

இப்படிப்பட்ட விபரீதமான நிகழ்ச்சிகளை காட்டுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடுவதிலிருந்து அப்பாவிகளைக் காக்க முடியும்.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்"

கருத்துரையிடுக