15 டிச., 2009

சோபியான் சம்பவம்: கற்பழிப்பு, கொலை இல்லை - மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இன்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலோபர் ஜான் (22), அவரது மைத்துனி ஆசியா ஜான் (17) ஆகியோர் மே 30ம் தேதி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மரணம் குறித்து விசாரித்ததில் இருவரும் கற்பழிக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. மாறாக இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரிய வந்தது. இவர்களை பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கொலைகள் தொடர்பாக 6 டாக்டர்கள், ஐந்து வக்கீல்கள், 2 பொதுமக்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர்கள் அனைவரும் சாட்சியங்களை கலைத்ததாகவும், சாட்சிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சோபியான் கொலைகள் தொடர்பாக விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், சிபிஐ இப்படி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து நிலோபரின் கணவர் ஷகீல் அகங்கர் கூறுகையில், எனது நீதிக்கான போராட்டம் ஓயாது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன். சிபிஐயின் கண்டுபிடிப்புகளை நாங்கள் நம்பவில்லை. அனைவரும் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்புகின்றனர். நான் சிபிஐயை நம்ப மாட்டேன். ஷகீலின் மனைவி மற்றும் சகோதரி மட்டும் கற்பழிக்கப்படவில்லை. மாறாக ஒட்டுமொத்த காஷ்மீர் பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மத்திய அரசுக்குப் புரிய வைப்பேன். எனது போராட்டம் தொடரும். என்றார்.
இதற்கிடையே, சிபிஐ அறிக்கை குறித்து மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்க வேண்டாம் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முசாபர் பெய்க் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை அறிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரு பெண்களின் கொலைகள் தொடர்பாக சோபியானில் பெரும் வன்முறை வெடித்தது. 47 பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை செப்டம்பர் மாதம் முதல் விசாரித்து வந்தது சிபிஐ.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சோபியான் சம்பவம்: கற்பழிப்பு, கொலை இல்லை - மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கை"

கருத்துரையிடுக