புதுடெல்லி:நீதிபதி கீதா மிட்டல் தீர்ப்பாயத்தின்(ட்ர்ப்யூனல்) அறிக்கையின் அடிப்படையில் சிமிக்கெதிரான தடையை நீக்கக்கோரும் "சிமியின் மீதான தடை ஏன்? எத்தனை நாள்?" என்ற தலைப்பில் டெல்லியில் ஏற்பாடுச் செய்யப்பட்ட கன்வென்சனில் முஸ்லிம் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் சிமி மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க அரசு தனது முஸ்லிம் விரோத கொள்கையின் காரணமாகத் தான் சிமி க்கு தடை விதித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அதனைத் தொடர்வதற்கான அவசியம் இல்லை என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிமி தடைச் செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் அதன் மீதான தடையை நீக்கக்கோரும் மாநாடு கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிமியின் பெயரால் ஏராளமான அப்பாவிகள் நாடுமுழுவதும் வேட்டையாடப்படுவதாக கன்வென்சனில் உரைநிகழ்த்திய டெஹல்கா எடிட்டர் அஜித் ஸாஹி குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: இவ்விஷயத்தில் பா.ஜ.க வும் காங்கிரஸும் ஒரேபோல் தான் செயல்படுகின்றன. ஊடகங்கள் சிமியின் பெயரால் பீதியை பரப்பி வருகின்றன. அதனால் எனக்கு பத்திரிகைகளை வாசிக்கவே பயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடைபெறும்பொழுது அப்பொழுது சிமி தான் இதன் பின்னணியில் செயல்படுவதாக பத்திரிகைகளும், போலீஸும் கூறுவார்கள். ஆனால் பத்திரிகைகளிலிருந்து நமக்கு ஒன்றிற்கும் விடை கிடைக்காது. அறிக்கையை படித்து முடிக்கும்பொழுது நமக்கு கேள்விதான் மிஞ்சும்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர். இந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் வரும் முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்திவிட்டு இந்நாட்டை எவ்வாறு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். கடந்த ஆண்டு குண்டு வெடிப்புகள் ஒன்றும் நடைபெறவில்லை என அரசு கூறுகிறது. அதற்கு தீவிரவாதிகளெல்லாம் கைதுச்செய்யப்பட்டு விட்டார்கள் என்றா பொருள் கொள்வது?.
ஊடகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக நீதிமன்றங்களை மட்டும் நாடாமல் அரசியல் ரீதியாகவும் தீர்வு காணவேண்டும்." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
கடந்த காலங்களில் நடந்த எல்லா கலவரங்களையும், அதன் தொடர்பான செயல்பாடுகளையும் சுதந்திரமாக விசாரிக்க கமிசன் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை பேணும் இதரத்துறைகளிலும் அவசரமாக புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும். காவல்துறை நடத்தி வரும் போலி என்கவுண்டர் கொலைகள், சித்திரவதை,சட்டத்திற்கு புறம்பாக சிறைவைத்தல், லாக்கப் மரணம் ஆகியவற்றை இல்லாமலாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். கைதுச் செய்யப்பட்டவர்களின் சமுதாயம், உறவினர்கள் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். குற்ற சம்மதம் என்ற பெயரால் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த கன்வென்சனில் பதேபூர் ஷாஹி இமாம் மவ்லான முஃப்தி முகர்ரம், டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமி துணைச் செயலாளர் ரஃபீக் அஹ்மத், மவ்லானா தஸ்னீம் ரஹ்மானி, மவ்லானா அர்ஷத் ஃபாரூகி, எஸ்.கியூ.ஆர்.இல்லியாஸ், மவ்லானா ஸீஷான் ஹிதாயத்தி, வழக்கறிஞர் ஷாநவாஸ், ஜாவித் ஹபீப், மனீஷா சேத்தி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிமி மீதான தடையை நீக்க தேசிய மாநாட்டில் கோரிக்கை"
கருத்துரையிடுக