புதுடெல்லி: மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காயால் உடல் நலனுக்கும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து இல்லை என்பது நிரூபிக்கப்படும் வரை, அதை பயிரிட அனுமதி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
காய்கறிகளில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காயின் மரபணுவில் மாற்றம் செய்து புதிய வகை கத்தரிக்காயை உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பி.டி.கத் தரிக்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்த கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் பயிரிடவும் பயன் படுத்தவும் மத்திய உயிரி தொழில்நுட்ப பொறியியல் அங்கீகாரக் குழு ஏற்கனவே அனுமதி அளித்தது. முழுமையாக ஆய்வு செய்யும் முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குழு உறுப்பினர்களில் ஒருவரான புஷ்பா பார்கவா கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது.பி.டி.கத்தரிக்காயின் தோல் பகுதி கடினமாக இருக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், கத்தரிக்காயை புழு தாக்காமல் இருப்பதோடு நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும். புழு தாக்காததால் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்து விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், மரபணு மாற்றம் செய்யப்படுவதால் பி.டி.கத்தரிக்காயில் உள்ள விஷத்தன்மை புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு காரணமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு விவசாய நிலங்கள் பாழாகிவிடும் என்றும் எச்சரித்தனர். இதனால், பி.டி. கத் தரிக்காய்க்கு பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்து கேட்பு:பெங்களூர் உட்பட 7 நகரங்களில் விவசாயிகள், பொதுமக்களிடம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து கேட்டார். ஐதராபாத், பெங்களூர் நகரங்களில் ஜெய்ராம் ரமேஷை விவசாயிகள் முற்றுகையிட்டு பி.டி.கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ப, பி.டி. கத்தரிக்காயை அனுமதிப்பது பற்றி 10ம் தேதி (இன்று) முடிவு அறிவிக்கப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
ஆனால், அரசின் முடிவை நேற்றே அவர் அறிவித்தார்.இது தொடர்பாக டெல்லியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது பற்றி விஞ்ஞானிகள், விவசாயிகளிடம் ஒருமித்த க ருத்து ஏற்படவில்லை. பி.டி. கத்தரிக்காய்க்கு எதிரான உணர்வு மக்களிடம் நிலவுகிறது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்க வேண்டியது எனது கடமை. பி.டி.கத்தரிக்காயால் உடல் நலனுக்கு ஆபத்து இல்லை என்று நிரூபிக்கப்படும் வரை அதை பயிரிட அனுமதி இல்லை. விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பி.டி.கத்தரிக்காய் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடரும்.
வர்த்தக ரீதியில் பயிரிட அனுமதி இல்லை என்ற முடிவு பி.டி. கத்தரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும். எதிர்காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெண்டைக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை பயிரிடுவதற்கு இந்த தடை பொருந்தாது.
பி.டி.கத்தரிக்காய் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத் திலும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பி.டி. கத்தரிக்காயை எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது தொடர்பாக மரபணு மாற்றம் செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை நான் சந்திக்கவும் இல்லை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு பி.டி. கத்தரிக்காய் வராது"
கருத்துரையிடுக