சிவசேனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் ‘மை நேம் இஸ் கான்’ படத்துக்கான டிக்கெட் முன் பதிவு (அட்வான்ஸ் புக்கிங்) நேற்று மாலை அனைத்து தியேட்டர்களிலும் தொடங்கியது.
ஐபிஎல் கிரிக்கெட் அணியில் பாகிஸ்தான் வீரர்களையும் சேர்த்திருக்க வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஷாருக்கான் மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்த எந்த படத்தையும் மும்பையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்தது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் மை நேம் இஸ் கான் படத்தை திரையிட உள்ள தியேட்டர் ஒன்றை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினார்கள். தியேட்டர் முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மராட்டிய அரசு எச்சரித்தது.
சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்படும் மாநில அரசின் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்படும் என்று மாநில முதல்-மந்திரி அசோக் சவான் எச்சரித்து இருந்தார். ஆனால் அதையும் மீறி நேற்று தியேட்டர் தாக்கப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில் இந்த படம் 63 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் சிவசேனா தொண்டர்கள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 1000 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலும் முதல்-மந்திரி அசோக் சவான் எச்சரித்தபடி உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. மாநில போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை. நானே திருப்பி அனுப்ப தயாராக இருக்கிறேன் என்று உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவர் திருப்பி அனுப்புவதற்குள் மாநில அரசே பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
0 கருத்துகள்: on "அசோக் சவான் எச்சரித்தபடி உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டு வந்த 'z plus' பாதுகாப்பு வாபஸ்"
கருத்துரையிடுக