குஜராத்தில் நடந்தேறிய மிகக்கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி உச்சநீதிமன்றத்தால் குஜராத் இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணக்கு ஆஜராகும் பொழுது நிறைவுறுவது நீதிக்கான போராட்டத்தின் எட்டு ஆண்டுகளாகும்.
இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் லால் கிருஷ்ணா அத்வானிக்கு எதிராக அவருடைய பாதுகாவலராக பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சுகுப்தா நீதிமன்றத்தில் சாட்சி கூறிய பொழுது நிறைவுற்றது பாப்ரி மஸ்ஜிதின் வீழ்ச்சிக்கு ஒரு சமூகம் நீதிக்காக காத்திருக்கும் பதினெட்டு ஆண்டுகளாகும். முன்தினமும் மறு தினமும் சங்க்பரிவாரின் இரண்டுத் தலைவர்கள் இந்தியாவின் நீதிபீடத்தின் முன்னிலையில் காலம் தாழ்ந்தாலும் விசாரணைக்கு ஆளாகும் பொழுது இந்திய நீதி சாசனத்திற்கு அது ஒரு புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்னிலையில் ஒரு மாநில முதல்வர் ஆஜராகுவது சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல்முறை. பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் எனக்கு வேதனை உண்டு என்றுக் கூறி நாடகமாடிய இந்தியாவின் இரும்புமனிதர் என சங்க்பரிவார்களால் புகழப்பட்ட லால் கிருஷ்ணா அத்வானியின் மதசார்பற்ற முகமூடியை அவருடைய பாதுகாவலராக செயல்பட்டிருந்த அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் கிழித்தெறிந்தார். நீதிமன்றத்தில் அத்வானிக்கெதிரான முக்கிய ஆதாரமாக அது மாறியுள்ளது.
இந்நாட்டின் சட்டங்களுக்கு சவால் விட்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் நரவேட்டைக்கு தலைமைத் தாங்கிய மோடிக்கு மூக்கணாங்கயிறைக் கட்டியது உச்சநீதிமன்றமாகும். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பியதற்கு காரணம் மோடிக்கெதிராக வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலாகும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
விசாரணையைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழு தயாராக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் இனி மோடியின் எதிர்காலம். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பெரும்பாலும் முடிவுற்றிருக்க விரைவில் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதேப்போல் அத்வானியின் நிலைமையும். பல ஆண்டுகளாக பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கிலிருந்து தனது தலைதப்புவதற்கான முயற்சியை அத்வானி மேற்க்கொண்டிருந்தார். ஆனால் அவ்வழக்கில் 9-வது சாட்சியும் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் வேளையில் அத்வானியின் பாதுகாவலருமான அஞ்சுகுப்தாவின் அத்வானிக்கெதிரான சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சட்டம் தனது கடமையைச் செய்யும் என மோடி கூறுவது கபட நாடகமாகும். சட்டத்தை மதிப்பவராக இருந்திருந்தால் குஜராத் தனது தலைமையில் நடந்த கோர தாண்டவத்திற்கு தனது முதல்வர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் உச்சபட்சத் தண்டனையை ஏற்க தயாராகவேண்டும்.
தங்களைச் சார்ந்த இருத்தலைவர்கள் நீதிபீடத்தின் முன்னிலையில் தலை குனிந்து நிற்கும் பொழுது அதுபற்றிய பா.ஜ.கவின் பதிலில் சுருதிக் குறைந்தே காணப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நபர் விசாரணைக்கு ஆஜராவது இந்தியாவில் இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளது. கம்யூனிஸ்டு கட்சியினர் மோடி ராஜினாமாச் செய்ய கோரியுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற இருபெரும் மோசமான நிகழ்வுகளுக்கு தலைமைத் தாங்கிய இருவர் நீதிபீடத்தின் விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் காலம் தாழ்ந்தாலும் நீதி கிடைக்குமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளாகும்.
விமர்சகன்
0 கருத்துகள்: on "மோடிக்கு 8 அத்வானிக்கு 18"
கருத்துரையிடுக