20 மார்., 2010

கோடி ரூபாய் நோட்டு

அம்மா தாயீ! சாப்பிட ஏதாவது கொடும்மா! பசி தாங்கமுடியலே!வீட்டு வாசலில் யாசகனின் குரல் கேட்டு காலையில் மீதமான தோசையை எடுத்து ஒரு பேப்பரில் மடித்துக் கொடுத்தார் வீட்டுக்காரம்மா.

ரொம்ப நன்றித்தாயீ! என்று கூறிவிட்டு வீட்டிற்கு வெளியேவந்து ஓரமா நின்று பேப்பரை பிரித்தார் யாசகர். தோசையை சாப்பிட்டுவிட்டு பேப்பரை கசக்கி எறிய எத்தனித்தவருக்கு பேப்பரில் கண்ட புகைப்படத்துடன் கூடிய செய்தியை பார்த்து விழிகள் உன்னிப்பாகின.

உ.பி.முதல்வர் செல்வி.மாயாவதிக்கு கோடி ரூபாய் நோட்டுக்களை ஆளுயர மாலையாக அவரது ஆதரவாளர்கள் அணிவித்த செய்தி.

"அடப்பாவிகளா! ஒரு ரூபாவுக்கே நான் திண்டாட வேண்டியிருக்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாயில் நோட்டு மாலையா?" யாசகனுக்கு பசி அடங்கி வயிறு எரிய ஆரம்பித்தது!இவருக்கு மட்டுமல்ல இந்த செய்தியை படிக்கும் இந்தியாவில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும், அன்றாட வாழ்வுக்கே திண்டாடும் சாதாரண குடிமக்களுக்கும் இதே மனோநிலைதான் ஏற்படும்.

தலித்துக்களை தரணியில் தலைசிறக்க வைப்பதற்காக சபதம் செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தானையத் தலைவி மாயாவதிக்கு ஆடம்பரமாக சிலைகளை நிர்மாணிப்பதும், நோட்டு மாலைகளையும், பரிசுகளையும் பெறுவதும்தான் அரசுப்பணியாகிப் போனது. மாயாவதிக்கு நோட்டுமாலை அணிவித்தவர்கள் சும்மாவா அணிந்திருப்பார்கள்! ஒரு முறை திராவிட முன்னேற்றக்கழகத்தை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவிற்கு நிகழ்ச்சியொன்றில் ஒருவர் ஆளுயர மாலையை அணிவித்தார். அப்பொழுது அண்ணா நகைச்சுவையாக குறிப்பிட்டார், "இவர் ஆள் உயர எனக்கு ஆளுயர மாலையை அணிவிக்கிறார்" என்று. உண்மைதானே!ஆதாயம் தேடித்தான் இந்தக் கோடியை கொடுத்திருப்பார்கள்.

மாயாவதி என்றவுடன் நமது ஒபாமாவும் நினைவில் நிழலாடுகிறார். கறுப்பு இனமக்களின் வாழ்வில் ஒளியேற்றப் போகிறார் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு தனது முன்னவர் புஷ்ஷின் அழிவுப் பாதையிலேயே பயணம் செய்யும் ஒபாமா புஷ்ஷாமாவாகிவிட்டார்.

ஏன் இங்கே இதனை குறிப்பிடப்படுகிறேன் என்றால் சில மாதங்களுக்கு முன்பு இணையதள இதழ் ஒன்று ஒபாமாவை அமெரிக்காவின் மாயாவதி என்றுக் குறிப்பிட்டிருந்தது. மாயாவதிக்கு நோட்டுமாலை அணிவித்தைக் கண்டித்து பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி, பா.ஜ.க,ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட மாயாவதி எதிர்ப்புக்கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து மாயாவதிக்கு இந்தப்பணம் வந்ததன் வழியைக் குறித்து ஆராயவேண்டுமென்றும், மாயாவதியின் ஆடம்பர பேரணியைக் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென்றும் குரல் எழுப்பின. காங்கிரஸ் கட்சிக்கும் மாயாவதிக்கு மூக்கணாங்கயிறு கட்டத்தான் யோசிக்கிறது. ஆனால் இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் மாயாவதியின் ஆதரவாளர்கள் முதல்கட்டமாக லக்னோவில் தங்களது தானையத் தலைவிக்கு 18 லட்சம் ரூபாய் நோட்டுமாலையை அணிவித்துள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நோட்டுமாலைகளும், பிறந்த நாளுக்கு எடைக்கு எடை நாணயமும் அளிப்பதும், மிக உயரமான கட் அவுட்டுகளை அதிகப் பொருட் செலவில் வைப்பதும், லட்சக்கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆடம்பர பேரணிகளை நடத்துவதும் பணத்திமிரின் அடையாளங்களாகும்.

ஆதரவாளர்களின் அன்பளிப்புகள் என்பதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் காட்டும் மாய வித்தைகளாகும். இவர்களுக்கு வழங்கப்படும் பணத்தை நுகர்ந்துப் பார்த்தால் கறுப்புப்பணம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்ததின் வாசம் மூக்கைத் துளைக்கும். இவ்விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைமையும் ஒன்றுதான். இந்தியாவில் அரசியல் கட்சிகள் நடத்திவரும் பாரம்பரியத்தைத்தான் செல்வி மாயாவதியும் பின் தொடர்கிறார்.

அரசியல் கட்சிகளின் இத்தகைய கேடுக்கெட்டத்தனத்திற்கு எதிராக நாட்டுமக்களின் எதிர்ப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்கு செலவிடவேண்டிய பொருளாதாரத்தை தான் தோன்றித்தனமாக சீரழிக்கும் இவர்களை நாம் அடையாளம் காணவேண்டும். அது தலித் ஆனாலும் சரி, பிராமணன் ஆனாலும் சரி. அத்துடன் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மாயாவதியின் நோட்டுமாலைப் போன்றது தான் கம்யூனிஸ்டுகளின் பக்கெட் கலெக்சனும். இடதுசாரிகளின் செயல்பாடுகளுக்கு சாதாரண மக்களிடமிருந்து பெறும் பக்கெட் கலெக்சன் மட்டும்தான் என்று புரிந்துக் கொள்ள நாம் முட்டாள்களா என்ன? பக்கெட் கலெக்சன் வெறும் போர்வையே. அவர்களின் வருமானத்தின் எதார்த்த நிலையைக் குறித்து ஆராய்ந்தால் காம்ரேடுகளுக்கு கலக்கம்தான் ஏற்படும். அதேப் போன்றுதான் பா.ஜ.கவும் , பாரம்பரிய காங்கிரசும், அவர்களின் வருமானத்தின் வழிகளை ஆராயவேண்டியது முக்கியமாகும்.

அரசியல் கட்சிகளின் வருமானத்தின் வழிகளை ஆராய நடுநிலையான விசாரனைக்கு உத்தரவிட்டால் இன்று மாயாவதிக்கு எதிராக பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கவைப்பவர்கள் துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
விமர்சகன்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோடி ரூபாய் நோட்டு"

கருத்துரையிடுக