குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தை விசாரித்து வரும் குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவாதி கமிசனின் முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகும் விஷயம் தொடர்பான முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நானாவதி கமிசனுக்கு குஜராத் உயர் நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுக்கொலையில் சுமார் 2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத் நகரிலுள்ள குல்பர்க் சொசைட்டி பகுதியில் 70 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இந்தப் படுகொலையில் பலியானவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாப்ரியும் ஒருவராவார். அத்தோடு நூற்றுக்கணக்கான பெண்களும் இப்படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
குஜராத் படுகொலையைக் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி நானாவதி தலைமையிலான கமிசன், கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி பிறப்பித்த ஒரு உத்தரவில், "முதல்வர் நரேந்திரமோடி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராவதற்கான முகாந்திரம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கலவரத்தில் பலியானவர்கள் சார்பில் அமைக்கப்பட்ட "ஜன சங்கர்ஷ் மஞ்ச்" என்ற சமூக சேவை அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு குஜராத் உயர் நிதிமன்ற டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் இன்று(திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நரேந்திரமோடி ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவு தற்காலிகமானதா? அல்லது இறுதியான முடிவா? என்பதை ஏப்ரல் 1-ந்தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று நானாவதி கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.
source:inneram
0 கருத்துகள்: on "'மோடி கமிஷன் முன்பு ஆஜராவதற்கான முகாந்திரம் இல்லை' என்ற உத்தரவு தற்காலிகமானதா? அல்லது இறுதியான முடிவா?- நானாவதி கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு!"
கருத்துரையிடுக