பாக்தாத்:ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த நூரி அல் மாலிகி தனது ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக எதிர்கட்சி எம்.பிக்களை பொய் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிச் செய்வதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
பிரதான் எதிர்கட்சியான இயாத் அல்லாவியின் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற 4 சுன்னி பிரிவு எம்.பிக்களை தீவிரவாதத் தொடர்பு எனக்கூறி சிறையிலடைக்க மாலிக்கியின் பாதுகாப்பு படை முயற்சிகளை மேற்க்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
வடக்கு பாக்தாதில் சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் தியாலா மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இந்த 4 எம்.பிக்களும். இதில் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் ஒருவரை பாக்தாதில் ஒரு சிறைச்சாலையில் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் அனுமதிக்காமல் சிறைவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இரண்டு எம்.பிக்கள் தலைமறைவாக உள்ளனர். 4-வது வேட்பாளரான பெண்மணியைக் குறித்து எந்த விபரமும் இல்லை.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களில் சிலர் தீவிரவாதத்துடன் தொடர்புக்கொண்டிருந்து வழக்கில் சிக்கி சிறையிலிருந்தால் என்ன நிகழும் என்று மாலிக்கி கேள்வி எழுப்பினார்.
நூரி அல் மாலிகியின் கட்சியை விட இரண்டு இடங்கள் அதிகம் பெற்றுள்ள இயாத் அல்லாவியின் இஃதிலாஃப் வதனி அல் ஈராகி கூட்டணியில் உட்பட்ட அரசியல் எதிரிகளை தகுதியற்றவர்களாக்குவதற்கு கடைசி முயற்சியாக பாதுகாப்பு படையை பயன்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ராணுவத்தினர் தனது வீட்டை இரண்டு முறை சோதனை நடத்தியதாக தலைமறைவாக இருக்கும் பகூபா நகர கவுன்சில் சேர்மனும் வேட்பாளர்களில் ஒருவருமான ரஅத் தஹ்லாகி தொலைபேசி மூலமாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். வீட்டிற்கு செல்லாமல் தான் எவ்வாறு பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்யல் இயலும் என அவர் கேட்கிறார்.
நான்கு எம்.பிக்களுக்கெதிராக விசாரணை நடந்து வருவதாக ஈராக்கின் மூத்த பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தினாலும், அவர்களுக்கெதிரான ஆதாரங்கள் என்ன என்பதுக் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற தஹ்லாகி,28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற தியாலா மாகாண கவுன்சில் உறுப்பினர் நாஜிம் அப்துல்லாஹ் அல் ஹர்பி, ஸஅதியாவில் முன்னாள் சேர்மன் முஹம்மது உஸ்மான், அரசியலில் புதுமுகமான கைதா ஸஈத் ஆகியோருக் கெதிராகத்தான் விசாரணை நடைபெறுவதாக பெயர் வெளியிடாத ஒரு அதிகாரி தெரிவித்தார். மூன்று பேருக்கெதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும், கைதா ஸஈதிற்கெதிராக எந்த நிமிடமும் வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி 4 பேர்கள் மீதும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பதவியை நிலைநிறுத்த எதிராளிகளை வேட்டையாடும் நூரி அல் மாலிகி"
கருத்துரையிடுக