ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு வேலைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜெய்ப்பூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை பேரணியைத் தொடங்கினர் குஜ்ஜார்கள் இன மக்கள்.
போலீஸôரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஜெய்ப்பூரில் இருந்து 400 கி.மீ.தொலைவில் உள்ள குத்லா கிராமத்தில் இருந்து குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரி சிங் பெய்ன்ஸ்லா தலைமையில் இந்த பேரணி தொடங்கியது. இதில் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
மாநில அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியைத் தொடங்கிய குஜ்ஜார்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹிண்டன் நகரை அடைந்தனர்.
இதுகுறித்து கரொலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திர சிங் கூறுகையில், "இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ஆயுதப்படை போலீஸார் உள்பட ஆயிரக்கணக்கான போலீஸார் குஜ்ஜார்கள் பேரணி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
5 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 26-ம்தேதி பேரணி செல்ல இருப்பதாக பெய்ன்ஸ்லா அறிவித்திருந்தார். அப்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் ஹெலாட், குஜ்ஜார்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரணி ஒத்தி வைக்கப்பட்டது.
குஜ்ஜார்கள் இட ஒதுக்கீடு பிரச்னையில் 10 நாட்களுக்குள் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குத்லாவில் இருந்து ஹிண்டன் வழியாக ஜெய்ப்பூருக்கு பேரணி நடத்தப்படும் என்று மார்ச் 23-ம் தேதி அரசுக்கு பெய்ன்ஸ்லா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மாநில அரசுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததையடுத்து,மார்ச் 31-ம் தேதி போராட்டத்தை அறிவித்தார் பெய்ன்ஸ்லா.
கடந்த 2007-08-ல் இதே கோரிக்கையை வலியுறுத்தி குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தில் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
source:dinamani

0 கருத்துகள்: on "அரசு வேலைகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஜெய்ப்பூர் நோக்கி குஜ்ஜார் இனமக்கள் பேரணி"
கருத்துரையிடுக