இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய ஏவுகணையின் பழைய தொழில்நுட்பம் மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் வரை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்து உளவு நிபுணர்கள் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள், கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: இந்தியாவின் ராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது.
இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன. அந்தவகையில் பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, சைப்ரஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன.
நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல. அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை.
இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. தவிர, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது.
இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது. இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
source:dinamani
0 கருத்துகள்: on "இந்திய ராணுவ ரகசியங்களை திருடியது சீனா!- அமெரிக்கா மற்றும் கனடா உளவு நிபுணர்களின் அறிக்கையால் பரபரப்பு"
கருத்துரையிடுக