இந்தியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட் அரங்கில் சமீபத்தில் தோன்றிய குதிரை வியாபாரம் தற்ப்பொழுது அதன் உண்மையான முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.இந்திய குடிமகன்களின் கிரிக்கெட் மோகத்தை பயன்படுத்தி பண முதலைகளும் அவர்களுடைய காட்ஃபாதர்களாக விளங்கும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் பகல் கொள்ளையடிக்க தேர்ந்தெடுத்த வழிதான் இந்த ஐ.பி.எல். குதிரைப்பந்தயம் போல் கார்ப்பரேட் முதலாளிகள் கிரிக்கெட் வீரர்களை விலை கொடுத்து வாங்கி நடத்தும் ஒரு திருவிழா கொண்டாட்டமே இது.
பண மூட்டைகளை கொண்டுவந்து குவித்துப் போட்டுவிட்டு கிரிக்கெட்டையும், கிரிக்கெட் வீரர்களையும் ஏலத்திற்கு வாங்கவும் விற்கவும் செய்யும் அடிமைகளாக மாற்றியதைத் தவிர வேறென்ன பயன் இதனால் விளைந்தது. ஆனால் ஐ.பி.எல் ஒளிரும் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றும் சின்னமாக முன்னிறுத்தப்படுகிறது.
இந்தியாவின் உயர்ஜாதியினர் மற்றும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய உலகின் சிந்தனையில் மூழ்கியிருக்கும் மத்தியதர வர்க்கத்தினரின் விருப்பங்கள்தான் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை.
அதுவல்லாமல், ஐ.பி.எல்லில் குவிந்துக் கிடக்கும் பணம் பெரும்பாலும் கறுப்புப் பணமும், தவறான வழிகளில் திரட்டப்பட்டபணமுதான் என்பது சசி தரூர் விவகாரத்தில் வெளிப்பட்டுவிட்டது.
சசி தரூரின் பிரியசகியான சுனந்தாவின் பங்குத் தொகை 70 கோடி என்று கூறப்படும் பொழுது செல்வாக்கும் பதவியும் உடைய அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பணமுதலைகள் எதனையும் செய்யத் துணிவார்கள் என்பது தெளிவாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண மனிதனாக் உலாவந்த லலித் மோடி இன்று விமானத்திற்கும், சொகுசுகப்பலுக்கு உரிமையாளராக மாறினார் என்றால் இது எப்படி சாத்தியம் ஆனது?தரூரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றக் காரணமானது ஊழல் பணத்தின் கரன்சி நோட்டுகளுடன் அவருக்கிருந்த தொடர்புகளாகும். தான் ஊழலில் ஈடுபடவில்லை என்றும், ஐ.நா வில் உன்னத பதவிகளில் அமர்ந்த தனக்கு ஊழலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லை என சசி தரூர் கூறுகிறார்.
இது சரியாக இருக்கலாம். ஆனால் தரூர் துரதிர்ஷ்டவசத்தால் அவர் இன்று வீழ்ந்துகிடப்பது ஊழல் மற்றும் கறுப்புப்பண சாக்கடையிலாகும். இதன் நாற்றத்தை காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கூட பொறுக்கவியலாமல் தான் பிரதமர் மன்மோகன் சிங் சசி தரூரை அமைச்ச்ரவையிலிருந்து நீக்கியுள்ளார்.
சசி தரூர் என்ன சமாதானம் கூறினாலும், ஐ.பி.எல்லில் புரளும் பணத்தின் இருள் பக்கங்களைக் குறித்து ரகசிய புலனாய்வுக் குழுவும், வருமான வரித்துறை அதிகாரிகளும் கண்டறிந்தவைகள் தான் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற முக்கியக் காரணமாகும். மேலும் இவை நமது தேசத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதாக தம்பட்டம் அடிப்பவர்களின் லட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
விமர்சகன்

0 கருத்துகள்: on "ஊழலில் திளைக்கும் ஐ.பி.எல்"
கருத்துரையிடுக