1 மே, 2010

மே 1 தொழிலாளர் தினம்

வேலை நேரத்தை குறைக்கவும், தொழிலாளிகளை மனிதர்களாக அங்கீகரிப்பதற்காகவும் உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்தன.

'எட்டு மணிநேரம் வேலை, எட்டு மணிநேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் பொழுது போக்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் தொழில் நகரமான சிகாகோவில் 1886-ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி உலக வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்த போராட்டங்கள் நடந்தேறின.

சிகாகோவில் போராட்டக்களத்தில் குதித்த தொழிலாளர்களை முதலாளித்துவ வாதிகள் துப்பாக்கிக் குண்டுகளால் எதிர்க்கொண்டனர். ஆனால் குண்டடிபட்டு வீழ்ந்த தொழிலாளிகளின் குருதியின் ஊடே ஒரு பெரிய தொழிலாளர்கள் விடுதலை அமைப்பு உருவானது. இவ்வாறு உலக முழுவதும் விடுதலையை விரும்பிய தொழிலாளர்கள் மே 1 ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க துவங்கினர்.

பிற்காலத்தில் தொழிலாளர் அமைப்புகளின் தலைமைப் பதவியிலிருந்தவர்கள் பலரும் அரசியல் அதிகாரத்தின் முக்கிய பதவிகளில் இடம் பிடித்தனர். அமைப்புச் சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தை புறக்கணித்துவிட்டு ஒரு அரசாங்கத்தாலும் செயல்பட முடியாது என்ற நிலை பொதுவாகவே உருவாகியுள்ளது. தொழிலாளர் அமைப்புகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதனடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எந்த அரசும் தயாராக சூழல்தான் இன்று உள்ளது.

மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வேளையில் உலக முழுவதும் தொழிலாளர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்பது மறைக்கவியலாத உண்மையாகும். 18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படாத மாற்றங்கள் 21-ஆம் நூற்றாண்டில் ஓரளவு ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இந்த மாற்றங்கள் உலக முழுவதும் ஒரேபோல ஏற்படவில்லை. சம்பள உயர்வும், சலுகைகளையும் போராடி பெற்றதில் அமைப்புசார்ந்த தொழிலாளர் வர்க்கத்திற்கு நீண்ட தூரம் செல்ல இயன்றுள்ளது. ஆனால் தொழிலாளர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையிலான அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வேலை வாய்ப்பு இல்லாததும், கதவடைப்புகளும், வேலையை விட்டு நீக்குதலும் இப்பொழுதும் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உலகமயமாக்கலாலும், அதனால் ஏற்பட்ட எதிர்விளைவான பொருளாதார நெருக்கடியாலும் அதிகம் பாதிக்கப்படுவது தொழிலாளர் வர்க்கமாகும். இவ்வாறான பிரச்சனைகளிருந்தாலும் ஐரோப்பாவிலிலுள்ள தொழிலாளர் அமைப்புகளால் போதிய சம்பளத்தையும், தேவையான சலுகைகளையும் போராடி பெற முடிந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழிலாளர் அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் ஏற்படுத்தவிருக்கும் கொள்கை மாற்றங்களுக்காக பல நாடுகளின் அரசுகளும் தொழிலாளர் அமைப்புகளை கலந்தாலோசிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

உலகில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வந்த மாற்றங்கள் தொழிலாளர் அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளன. வெறும் அரசியல் லட்சியங்களை மட்டும் இலக்காக வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களை இடதுசாரி அமைப்புகளும் கைவிட்டுவிட்டன. தொழிலாளர் அமைப்புகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தவும், தொழிலாளர் அமைப்புகளை வைத்து ஆதாயம் தேடவும் முற்படும் முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கத்தை பெரும்பாலான தொழிலாளர் அமைப்புகள் புரிந்துக்கொண்டன. தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக செயல்படவேண்டும் என்ற கோரிக்கை பல தொழிலாளர் அமைப்புகளிடமிருந்தும் எழுந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தொழிலாளர் அமைப்பு போதும் என்ற மனோநிலைக்கு தொழிலாளர் அமைப்புகள் வந்துவிட்டன எனக்கூறலாம்.

நமது அயல் நாடான பாகிஸ்தானில் பல தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக மாறியுள்ளது. தொழில் துறையில் மிக முன்னேற்றம் அடைந்துள்ள ஜப்பானில் அனைத்து தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக மாறியுள்ளது.

உலகில் அதிக தொழிலாளர்களைக்கொண்ட நாடுதான் நமது இந்தியா. நமது நாட்டில் சிறிய தொகையிலான தொழிலாளர்கள்தான் அமைப்பு ரீதியாக செயல்படுகின்றனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாவர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு போதிய கூலி கிடைப்பதில்லை. பெரும்பாலோருக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சம்பளம் கிடைப்பதில்லை.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏராளமான தொழிலாளர்கள் நமது நாட்டில் உள்ளனர். இந்தியாவில் செயல்படும் தொழிலாளர் அமைப்புகளுக்கு இவர்களைப்பற்றி எந்த கவலையுமில்லை. கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல் போதுமான சம்பளம் கிடைக்கும் ‘வைட் காலர்'(white colour) தொழிலாளர்களைப் பற்றித்தான் இவர்களது கவலையெல்லாம். தொழிலாளர்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி அவர்களை மதவெறிக்கொண்டவர்களாக மாற்றும் முயற்சியில் பாசிச சக்திகளும் தொழிலாளர் அமைப்பை நடத்திவருகிறது. இவ்வமைப்புக்கு தொழிலாளர்களைப்பற்றிய எக்கவலையுமில்லை. மாறாக இவர்களிடம் மதவெறிதான் மேலோங்கியுள்ளது. இவர்களின் சதிவலைகளைப் புரிந்துக் கொள்ளாமல் ஒரு பிரிவினர் இவர்களிடம் சிக்கியுள்ளனர்.

’உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பது மே தினத்தின் முழக்கமாக யிருந்தாலும் இது சாத்தியமற்ற சூழலில்தான் உள்ளது. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னால்தான் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. இன்றும் போதிய உரிமைகளை பெறாத சூழலில்தான் தொழிலாளர்கள் உள்ளனர். அவ்வப்போது சிற்சில போராட்டங்களின் மூலமாகத்தான் தங்களது அடிப்படைத் தேவைகளை பெற முடிகிறது உலகின் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு.

இந்நிலையில் உலகின் ஒரு கொள்கை மட்டுமே எந்தவொரு போராட்டமும் இல்லாமலும், எத்தகைய தொழிலாளர் அமைப்புகளில்லாமலும் கேட்காமலேயே சலுகைகளை அள்ளி வழங்கி அவர்களின் வாழ்வில் வசந்தத்தை வீசச் செய்தது. அதுதான் இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி.

"நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.” (அல்குர்ஆன் 21:92)

என்ற வசனத்தின் மூலம் பிரபஞ்சத்தின் இறைவனான அல்லாஹ் உலகில் ஏழை,பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்று பாகுபாடு இல்லை எல்லோரும் ஓரினம்தான் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறான்.

இஸ்லாத்தின் புரட்சிகரமான உள்ளீடுகளை புரிந்துக் கொள்ளாதவர்கள் இஸ்லாத்தை சில சடங்குகள் சார்ந்த மதமாக தவறாக புரிந்து வைத்துள்ளனர். இதில் சில முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

இஸ்லாத்தை நபி(ஸல்...) அவர்கள் பிரச்சாரம் செய்ய துவங்கும் காலக்கட்டத்தில் வர்த்தகம் சார்ந்த பெரும் பணக்காரர்கள் சிறுவர்த்தகர்களை ஏமாற்றுதல் மிக இயல்பாக இருந்தது. செல்வத்தை சேமித்தல் என்கின்ற பேராசை எல்லாவிதமான நீதிமீறல்களுக்கும் வழி வகுத்திருந்தது.

"நீங்கள் மிக்க அளவு கடந்து பொருள்களை நேசிக்கிறீர்கள்" (89:20) "நீங்கள் கப்ருகளை சந்திக்கும் வரையிலும் (பொருளை) அதிக வசப்படுத்திக் கொள்ளும் பேராசை அல்லாஹ்வை விட்டும் பாராக்காக்கிவிட்டது" (102:1,2) என்றெல்லாம் திருக்குர்ஆன் இது குறித்து எச்சத்தது. மக்காவையும் அதனைச் சுற்றியும் இருந்த சிறுவணிகர்கள் இதனால் மிகுந்த பாதிப்படைந்தனர்.

இந்திய பார்ப்பண கொள்கையும் இஸ்லாமிய கொள்கையும் ஒன்றுக்கொன்று நேர் முரனாவையாகும். கடவுளின் முகத்தில் தோன்றியவர்கள், முதலில் வந்தவர்கள், உயர்வானவர்கள் என்று மனுதர்மம் அறிமுகப்படுத்தும். பார்ப்பனர்களை வேதத்திற்கு உடமையாளர்களாகவும், வேதம் ஓதவும், ஓதுவிக்கவும் உரிமை படைத்தவர்களாகவும் கூறுகிறது பார்ப்பண மரபு.

இஸ்லாமிய கொள்கையோ மேய்ப்பவர்கள், வேளாண்மையாளர்கள், நெசவாளர்கள், வர்த்தகர்கள், தச்சர்கள் இவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்களாகவும், தூதர்களாகவும் காட்டுகிறது. இது போன்ற தொழில் செய்பவர்களை பார்ப்பண கொள்கை புறசாதிகளாக வர்ணத்திற்கு வெளியே நிறுத்துகிறது.

வர்ணாசிரமக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய அமைப்பை உடைத்துப் போட்டு நவீன இந்திய அமைப்புக்கு அடித்தளமிட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

வருவாய்; நீதி, நிர்வாகம், தத்துவம், இலக்கியம், மொழி, கட்டடம், வழிபாடு, உணவு, உடை என எல்லாத் துறைகளிலும் தனது பங்களிப்பை முழுமையாக செய்த மார்க்கம்; இன்று உலக அரங்கில் ஏகாதிபத்தியத்தின் முன்னும், இந்தியாவில் உயர்சாதி ஏகாதிபத்தியத்தின் முன்னும் சவலாக விளங்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே தொழிலாளர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்றிவைத்த உன்னத மார்க்கம் இஸ்லாம்.

'உழைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலியைக் கொடுங்கள்’ என்று சொன்னதும், உழைப்பாளியின் காய்த்துத் தழும்பேறிய கரங்களைப் பிடித்து முத்தமிட்டார்கள் என்பதும் நபி(ஸல்...)அவர்களின் வாழ்விலிருந்து நமக்கு கிடைக்கும் செய்திகளாகும்.

இன்று உழைப்பவர்கள் மாட்டுக் கொட்டகைப் போன்ற இடங்களில் வாழ்வதும், அவர்களின் மேலதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து அதிகாரம் செய்வதும் நடந்துவரும் காட்சியை நாம் காணத்தான் செய்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் நடைமுறையை இங்கே சற்று பாருங்கள்.

'உங்களில் ஒருவரின் பணியாள் சமைத்து, அந்த உணவைச்சமைப்பதற்காக வெப்பம், புகை ஆகிய சிரமங்களை சகித்துக்கொண்டு, அந்த உணவை அவரிடம் கொண்டு வருகிறான் எனில், எஜமான் அவனைத்தன்னுடன் உட்கார வைத்துக்கொண்டு (இருவரும் சேர்ந்து) உண்ணட்டும்! உணவு குறைவாக இருந்தால், அதிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் கொடுக்கட்டும்!’(நூல்: முஸ்லிம்).

எவ்வளவு உரிமைகளை தொழிலாளர்களுக்கு இஸ்லாம் அளித்தது என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் தேவை?

இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுமுன்பு முந்தியகாலக்கட்டத்தில் நடைமுறையிலிருந்ததுதான் அடிமைமுறை. இஸ்லாம் எப்பொழுது அந்த அராபியத் தீபகற்பத்தில் ஒளிவீச ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அடிமைகளின் வாழ்வை சீர்திருத்தியது. மட்டுமல்லாமல் படிப்படியாக் அவர்களை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்தது. அடிமைகளின் நிலை தொழிலாளர்களின் நிலையை விட மோசமாகும். ஆனால் இன்று உலகில் பல தொழிலாளர்களும் கொத்தடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இதோ அடிமைகள் விவகாரத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதலை பாருங்கள்:

"அடிமைப்பெண்ணும், அடிமை ஆணும் உங்கள் உடன்பிறப்புகள் ஆவர். அவர்களை இறைவன் உங்கள் ஆதிக்கத்தில் தந்திருக்கிறான். உங்களில் ஒருவருடைய ஆதிக்கத்தில் இறைவன் ஒரு சகோதரனைத் தந்தால் அவர், தான் உண்பதையே அவனுக்கு ஊட்டட்டும், தான் அணியும் ஆடையையே அவனுக்கு அணிவிக்கட்டும். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைப்பழுவை அவன் மீது சுமத்த வேண்டாம். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைச்சுமையை அவனுக்குதந்தால்(அவன் அதைச்செய்ய முடியாமல் போனால்) அந்த வேலையில் அவர் அவனுக்கு துணை புரியட்டும்." (நூல்:புஹாரி, முஸ்லிம்).

தொழிலாளர்களின் உழைப்பில் உண்டுவாழும் முதலாளித்துவ வர்க்கம் தங்களது வியாபார வெற்றிக்காக நடத்தப்படும் விருந்துகளில் கூட ஏன் எந்த சலுகைகளை கூட அளிக்கப்படாத நிலையும் மேலும் தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்களாக காணும் நிலையைத்தான் நாம் இன்று கண்டுவருகிறோம்.

ஆனால் இஸ்லாமோ விருந்துகளிலேயே மோசமானது பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து என நமக்கு கற்பித்து தருகிறது.

உலகின் முதலாளித்துவ சக்திகள் தொழிலாளிகள் எப்பொழுதும் தொழிலாளிகளாகவே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் இஸ்லாமிய சமூக சூழலில் தொழிலாளர்கள் முதலாளிகளாகவும் மாறியுள்ளதைக் காணலாம்.

அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி (ரலி) அறிவித்தார். "நபி) ஸல்...)தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!" [நூல்;புஹாரி எண் 2273 ]

இன்று உழைப்பது கேவலமாக கருதும் சூழல் நிலவுவதைக் காண்கிறோம். உண்ணவேண்டும், உறங்கவேண்டும் எளிதான வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் தான் வளரும் தலைமுறையினர் உள்ளனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [நூல்;புஹாரி,எண் 2072 ]

இஸ்லாம் உருவாக்கிய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அங்கு தொழிலாளர், முதலாளி என்ற வர்க்கபேதமில்லை.மாறாக அவர்கள் ஒருவர் மற்றவரின் கண்ணாடியைப் போன்ற, ஒரு கட்டத்தை வலுப்படுத்தும் செங்கல்களைப் போன்ற, ஒரு உடலின் உறுப்புகளைப் போன்ற சகோதரர்களாவார்கள். அவர்களிடையே ஏமாற்றும், மோசடியும், அபகரிப்பும், பிரிவினை வாதமும் ஏற்படுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவேயில்லை. அத்தகையதொரு சமூக கட்டமைப்பைத்தான் நபிகளார் அந்த அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று அழைக்கப்பட்ட அரபு சமூகத்தில் மத்தியில் உருவாக்கி காட்டினார்கள்.

இதன் பாதிப்பு உலக முழுவதையும் ஆக்கிரமித்தது. அத்தகையதொரு சமூக கட்டமைப்பு இன்றும் நம்மிடையே தேவைப்படுகிறது. அதனை உருவாக்கவேண்டுமானால் எந்தக்கொள்கை அந்த சமூக சூழலை உருவாக்கிக்காட்டியதோ அந்தக்கொள்கை நம்மிடம் வேண்டும்.

ஆகவே அந்த உன்னத கொள்கையை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமே தொழிலாளி, முதலாளி என்ற பாரபட்சமில்லாத சமூகம் உருவாக சாத்தியமாகும். இதுவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் நாம் விடுக்கும் உலக சமூகத்திற்கு நாம் விடுக்கும் அழைப்பாகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மே 1 தொழிலாளர் தினம்"

கருத்துரையிடுக