19 மே, 2010

வீட்டு வேலைக்காரர்களுக்கு விடிவு காலம்: புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது மத்திய அரசு

பழைய துணிமணி, பழைய சாதம், பயன்படுத்திய பொருட்கள் இவற்றை மட்டுமே கொடுத்து சம்பளம் கொடுக்காமல் வீட்டு வேலைக்காரர்களை இனி ஏமாற்ற முடியாது.

அவர்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகை செய்ய ஏதுவாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கிறது.

நாட்டில், வீட்டு வேலைக்காரர்கள் என்ற நிலையில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற முழு விவரமும் அரசிடம் இல்லாத போதும், ஏழு கோடியிலிருந்து 10 கோடிப் பேர் அந்த வேலையில் இருக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான். இவர்கள் வேலை பார்க்கும் வீடுகளில் உடல், மனம் மற்றும் பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகளவில் இழைக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை சம்பளம், வார விடுமுறை, சுகாதாரக் காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட இன்றி இவர்கள் கிட்டத்தட்ட அடிமைகள் போல் வாழ்ந்து வருகின்றனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டம் இவர்களின் பாதுகாப்புக்காக சில சட்டங்களை வைத்திருந்தாலும் அது பல்வேறு குறைபாடுகளுடன் தான் இருக்கிறது.

இந்நிலையில்,வீடுகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க, 11 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, தற்போது பல்வேறு புதிய விதிமுறைகளை உருவாக்கி, மத்திய அமைச்சரவையிடம் அளித்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், அது சட்டமாக்கப்பட்டு, மாநிலங்களில் அமல்படுத்தப்படும்.

புதிய விதிமுறைகளில், வீடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, வேலைக்கான ஒப்பந்தம், அடிப்படைச் சம்பளம், வேலைக்கான நேரம் அரசால் நிர்ணயிக்கப்படுதல், சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடுகள், திறன் மேம்பாட்டுப் பயற்சிகள், இத் தொழிலாளர்களின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

காப்பீடு, பதிவு செய்தல் போன்றவற்றை அமல்படுத்தும் முன், தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் பணி நேரம் ஆகியவற்றை வரையறை செய்யும்படி அரசிடம் இக்கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களில் உள்ள வீட்டு தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுவதை இக்கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் அமலாக்கப் பட்டால், வீடுகளில் வேலை பார்ப்போர் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும்.
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வீட்டு வேலைக்காரர்களுக்கு விடிவு காலம்: புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது மத்திய அரசு"

கருத்துரையிடுக