சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
நாராயண்பூர் மாவட்டத்தில் ததுதாய் என்ற இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
சத்தீஸ்கர் உள்பட சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து மவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் 39-வது படைப் பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீஸார் உள்பட 63 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் பணியை முடித்துவிட்டு சாலை வழியாக முகாமுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மலை மேல் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், திடீரென படை வீரர்களைச் சுற்றிவளைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் சிஆர்பிஎஃப் உதவி கமாண்டண்ட் ஜடின் குலாத்தி உள்பட 26 வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநில போலீஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு சிறப்பு போலீஸ் அதிகாரிகளும், நான்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் காயமடைந்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 90 மவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் சேதம் குறித்த தகவல் இல்லை.
இறந்த வீரர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்க சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎஃப் தலைவர் விக்ரம் ஸ்ரீவத்சவா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மூன்றாவது பெரிய தாக்குதல்:சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய மூன்றாவது பெரிய தாக்குதல் இது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா கிராமத்தில் நடந்த தாக்குதலில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு மே 8-ம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "சத்தீஸ்கரில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி"
கருத்துரையிடுக