7 ஜூன், 2010

போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: 8 பேர் குற்றவாளி, நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!

போபால்:26 வருடமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.ஆனால் நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!

இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.
1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயுத் தாக்கி 15,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். (2 ஆயிரத்து 259 பேர் மட்டும் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது).

இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார். 85 வயதாகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மகிந்திரா மற்றும் 7பேர் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மரணத்திற்குக் காரணமாக அமைந்தது, ஒட்டுமொத்த கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோர்:-
குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள கேசப் மகிந்திரா,மகிந்திரா அன்ட்மகிந்திரா நிறுவனத்தின் தலைவராக தற்போது இருக்கிறார்.

மகிந்திரா தவிர குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேர் விவரம்...
1. விஜய் கோகலே, யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குநர்.
2. கிஷோர் காம்தார், யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் துணைத் தலைவர்.
3. ஜே.முகுந்த், முன்னாள் ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு.
4. ராய் செளத்ரி, உதவி ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு (ஏற்கனவே இறந்து விட்டார்).
5. எஸ்.பி.செளத்ரி, முன்னாள் உற்பத்தி மேனேஜர், யூனியன் கார்பைடு.
6. கே.வி.ஷெட்டி, முன்னாள் உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர், யூனியன் கார்பைடு.
7. ஷகீல் குரேஷி, முன்னாள் உற்பத்தி உதவியாளர், யூனியன் கார்பைடு.

எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன்கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

ஆண்டர்சன்
போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.

கண்களை கட்டிய நீதி
குற்றவாளிகள் எட்டு பேரில் ஏழு பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.குரேஷி என்பவருக்கான தண்டனை மட்டும் அறிவிக்கப்படவில்லை.தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆர்.பி.ரா சவுத்ரி என்பவர் மரணம் அடைந்து விட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவர் சார்பிலும் உடனடியாக, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு 25 ஆயிரம் ரூபா ரொக்க ஜாமீனில் செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்த தீர்ப்பால், விஷவாயு கசிவால் உயிரை விட்டவர்களின் குடும்பத் தினர், விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க போராடியவர்கள் எல்லாம் விரக்தி அடைந்துள்ளனர். விஷவாயு கசிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்திற்கும் அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: 8 பேர் குற்றவாளி, நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!"

கருத்துரையிடுக