14 ஜூன், 2010

கிர்கிஸ்தான் கலவரம்: 80 பேர் பலி- கலவரக்காரர்களை சுட்டுக்கொல்ல இராணுவத்திற்கு அனுமதி

கிர்கிஸ்தானில் தொடரும் உள்நாட்டு கலவரம் காரணமாக இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஓஷ். இங்கு வசிக்கும் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் மக்களுக்கு இடையே அடிக்கடி கலவரம் நடப்பது வழக்கம்.

கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த பாகியோவ், கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஓஷ் பகுதியில் வன்முறை நிகழ்ந்து வந்தது. பாகியோவ் ஆதரவாளர்கள் இங்கு அதிகம் வசிப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் ஓஷ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் மக்களுக்கு இடையே திடீரென கலவரம் வெடித்தது. ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தன. ஓஷ் நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. வன்முறையாளர்கள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றும் இங்கு வன்முறை தொடர்ந்தது.இந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும்,1,000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை இனமான உஸ்பெக்கைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவத்தால் கலவரத்தை அடக்க முடியவில்லை.இதையடுத்து, இடைக்கால அரசின் ஜனாதிபதி ரோஜா ஒடுன்பயோவா,ரஷ்ய இராணுவத்தின் உதவியை கோரியுள்ளார்.

தங்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து உஸ்பெக் மக்கள், உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கிர்கிஸ்தான் -உஸ்பெக் எல்லையில் உள்ள பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல இராணுவத்தினருக்கு அனுமதி
இந்நிலையில் ஒஷ் மற்றும் ஜலலாபாத் ஆகிய பிராந்தியங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொல்வதற்கான அதிகாரத்தை இடைக்கால அரசாங்கம் இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிர்கிஸ்தான் கலவரம்: 80 பேர் பலி- கலவரக்காரர்களை சுட்டுக்கொல்ல இராணுவத்திற்கு அனுமதி"

கருத்துரையிடுக