22 ஜூன், 2010

போபால் விஷவாயு பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் குழு அறிக்கை

டெல்லி:போபால் விஷவாயு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான மத்திய அமைச்சர்கள் குழு நேற்றுடன் தனது ஆலோசனையை முடித்துக் கொண்டு இன்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கையை தாக்கல் செய்கின்றது.

தேடப்படும் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைக்க உள்ளது.

போபால் விஷவாயு கசிவு வழக்கில் கடந்த 7ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகு எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் தினமும் கூடி ஆலோசனை நடத்தியது.

நேற்று நடந்த 3ம் நாள் கூட்டத்தில் பிரதமரிடம் இன்று தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் ப.சிதம்பரம் கூறுகையில்,"இன்று நடந்த இறுதி நாள் கூட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி விவாதித்தோம். 3 நாட்களில் எந்த விஷயத்தையும் விடாமல் ஆலோசனை நடத்தி முடித்து இருக்கிறோம். நாளை (இன்று) பிற்பகலில் பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

இந்த அறிக்கையில் கீழ்க்கண்ட பரிந்துரைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கொலைக் குற்றத்திற்கான தண்டனை அளிக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்ததை ரத்து செய்து விட்டு, கவனக்குறைவால் மரணத்துக்கு காரணமான பிரிவின் கீழ் வழக்கு தொடர 1996ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தல்.

௮இதன் அடிப்படையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட 7 பேருக்கு தண்டனையை அதிகரிக்கக் கோரி வழக்கு தொடருதல்.

*யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுத்தல்.

*போபாலில் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் நச்சு கலந்த மண், மற்றும் அகற்றப்படாமல் கிடக்கும் நச்சுப் பொருட்கள் போன்றவற்றை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச அரசு செய்வதற்கு தேவையான நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.

*பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குதல்.

*உயிர் இழந்தோரின் குடும்பங்கள், காயம் அடைந்தோர், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நீண்டகால நோய்க்கு ஆளானவர்கள், உறுப்புகளை இழந்து முடமானவர்கள் போன்றவர்களை வகைப்படுத்தி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.

போன்ற அம்சங்கள் அவ்வறிக்கையில் இடம் பெறும் என்று தெரிகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷவாயு பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் குழு அறிக்கை"

கருத்துரையிடுக