கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய மாநில போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த நக்சலைட்களை விலங்குகள் போல் எடுத்துச் சென்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிஆர்பிஎப் மற்றும் மேற்கு வங்க போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது. நக்சலைட்களுக்கு எதிராக மத்திய ரிசர்வ் போலீசார் மாநில போலீசாருடன் இணைந்து கிரீன்ஹண்ட் என்ற தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் சல்போனி பகுதியில் உள்ள ரஞ்சா வனப்பகுதியில் இந்த கூட்டு படையினர் கடந்த 16ம் தேதி நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 8 நக்சலைட்கள் இறந்தனர்.
உயிரிழந்த நக்சலைட்களை போலீசார் ஆடு மாடுகள் போல் குச்சியில் கட்டி தூக்கி வந்தனர். மாவோ ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் மேற்கு வங்க காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய போலீசார் சம்பந்தப்படவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வனப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்பதால் வேறு வழியில்லாமல் இவ்வாறு தூக்கி வந்ததாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டைரக்டர் ஜெனரல் விஜய் ராமன் கூறுகையில், ‘இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மத்திய போலீசார் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் இறந்தவர்களை இதுபோல் எடுத்துச் செல்லக்கூடாது’ என்றார்.
dinakaran
0 கருத்துகள்: on "உயிரிழந்த நக்சலைட்களை விலங்கு போல் தூக்கிச் செல்வதா? விசாரணை நடத்த மே.வங்க அரசு உத்தரவு"
கருத்துரையிடுக