கோவை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.
இந்த மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புதனன்று காலை துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புதனன்று காலை துவக்கி வைக்கிறார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முறைப்படி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க வளாகத்தை ஒட்டி, 100 ஏக்கர் பரப்பில் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை ஒட்டி, கோவை நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய சிறை அமைந்துள்ள இடத்திலிருந்து அது அகற்றப்பட்டு, 165 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன.
0 கருத்துகள்: on "கோவையில் இன்று தொடங்குகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு"
கருத்துரையிடுக