30 ஜூலை, 2010

ஐக்கிய ஆஃப்ரிக்காவை கட்டியெழுப்பும் கனவு உயிரோட்டத்துடனேயே இருக்கிறது- கடாஃபி

கம்பாலா,ஜுலை30:ஐக்கிய ஆஃப்ரிக்கா ஒன்றைக் கட்டியெழுப்ப தம்மால் முடியுமெனத் தெரிவித்துள்ள லிபியத் தலைவர் மு அம்மர் கடாஃபி இதற்கான தனது கனவு தற்போதும் விழிப்புடனேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆஃப்ரிக்க ஐக்கிய அரசு ஒன்றை நிறுவுவதற்கு பல வருடங்களாகக் குரல் கொடுத்துவரும் கடாஃபி மேற்குலக தலையீடின்றி ஆஃப்ரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கு இதுமட்டுமே வழியென கூறிவருகின்றார்.

ஆனால் கடாஃபியின் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கும் பல ஆஃப்ரிக்க நாடுகள் இது தங்கள் நாட்டின் இறையாண்மையை அபகரிக்கும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளன.

முன்னர் நடைபெற்ற மாநாடுகளைப் போன்று இவ்வாரம் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற ஆஃப்ரிக்க உச்சிமாநாட்டிலும் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உச்சி மாநாட்டின் முடிவில் கம்பாலாவில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த கடாபி; "ஆஃப்ரிக்கா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். எனினும் ஐக்கிய அமெரிக்காவைப் போன்ற ஒரு அரசாக இது ஒருநாள் உருவாகும். ஆஃப்ரிக்க அதிகாரசபை ஒன்றை அமைப்பது தொடர்பாக நாம்நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அத்துடன் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான திசையில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் தீர்த்து வருவதுடன் ஆஃப்ரிக்க அரசு ஒன்றை நிறுவும் முயற்சிகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "ஆஃப்ரிக்க அரசு ஒன்றை அமைப்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. நிபுணர்கள் இதுகுறித்து ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். அடுத்த உச்சிமாநாடு அல்லது அதற்குப் பின்னர் இப்பணிகள் நிறைவடைம் என எதிர்பார்க்கப்படுகிறது." எனக் கடாஃபி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு ஆஃப்ரிக்க அமைப்பிடமும் இறையாண்மையை விட்டுக்கொடுப்பதை தம்மால் எதிர்பார்க்க முடியாதென ஆஃப்ரிக்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராய்ட்டர்ஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய ஆஃப்ரிக்காவை கட்டியெழுப்பும் கனவு உயிரோட்டத்துடனேயே இருக்கிறது- கடாஃபி"

கருத்துரையிடுக