30 ஜூலை, 2010

சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கு: குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை

அகமதாபாத்,ஜுலை30:சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத்தை விட்டு வேறு எங்காவது மாற்ற வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கில் அதிரடியாக செயல்பட்டு வரும் சிபிஐ இதுவரை இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சிபிஐ இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுவதாவது;
குஜராத்திலிருந்து முதலில் இந்த வழக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குஜராத்தில் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தால் நியாயமான முறையில் பாரபட்சமின்றி நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

அதேபோல போலியான என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்ட, சொராஹ்ப்தீன் படுகொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கையும் நாங்கள் விரிவாக விசாரிக்கவுள்ளோம்.

சொராஹ்ப்தீனைக் கொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அமீத் ஷா உள்ளிட்ட அரசியல்வாதிகள் உத்தரவிட்டது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்.அரசியல் தொடர்புகளை அறிய முயன்று வருகிறோம்.

சொராஹ்ப்தீனை போலீஸார் போலியான என்கவுண்டர் மூலம் கொலைசெய்வதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் போலியான என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

சொராஹ்ப்தீனும்,அவரது மனைவி கெளசர்பீயும் பயணம் செய்த பஸ்சிலிருந்து இருவரையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கடத்திச் சென்றதை நேரில் பார்த்தவர் இவர். இந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி சொராஹ்ப்தீனையும், அவரது மனைவி கெளசரை 29ம் தேதியும் குஜராத் போலீஸார் கொன்றனர். நரேந்திர மோடியைக் கொல்ல இவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக போலீஸார் அப்போது கூறினர். ஆனால் குஜராத் அரசின் சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இது உண்மை அல்ல என்று தெரியவந்தது.

சொராஹ்ப்தீன் கடத்தப்பட்டது, கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவரான பிரஜாபதி 2006ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி சோராபுதீன் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சிபஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சொராஹ்ப்தீனைக் கொலை செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி வன்சரா கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அமீத் ஷா கைது செய்யப்பட்டார். அதேபோல கெளசர்பீயை அடைத்து வைத்திருந்த பண்ணை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 6 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 மாத கால நீட்டிப்பு கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இன்று இதுதொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கு: குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை"

கருத்துரையிடுக