25 ஜூலை, 2010

அமெரிக்க-தென்கொரியா கூட்டு கடற்படை ஒத்திகை எதிரொலி: அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம்: வட கொரியா எச்சரிக்கை

சியோல்,ஜூலை25:அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகள் மீது அணுகுண்டுகளை வீசி பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்று வட கொரியா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு கடற்படை ஒத்திகையை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் தென் கொரியாவுக்கு வருகைதந்துள்ளது.

இந்தக் கப்பல் முழுவதும் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவும் கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது. இருநாடுகளின் கூட்டு கடற்படை ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது. தொடர்ந்து அத்துமீறி நடந்துவரும் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் இரு நாடுகளும் இந்தக் கூட்டு கடற்படை ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வட கொரியா கோபம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"ஒருவேளை அமெரிக்காவும், தென் கொரியாவும் எங்களை தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இரு நாடுகளின் தாக்குதலுக்கு பயந்து எங்களது ராணுவ வீரர்களோ, மக்களோ ஓடமாட்டார்கள். எதிர்த்து பதிலடி கொடுப்பார்கள்" என்று வட கொரியா தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் எங்கள் வசம் உள்ள அணு குண்டுகளை வீசித் தாக்கவும் தயங்கமாட்டோம் என்றும் அந்நாடு கடுமையாக எச்சரித்துள்ளது.

தென் கொரியாவும், அமெரிக்காவும் போர்க்கப்பலை நிறுத்தி வைத்திருப்பதை கவனித்துவரும் வட கொரியா கோபத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளது. இரு நாடுகளும் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எத்தகையை சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வட கொரியா ராணுவத்தை ஆயத்தப்படுத்தியுள்ளது என்று அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க-தென்கொரியா கூட்டு கடற்படை ஒத்திகை எதிரொலி: அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம்: வட கொரியா எச்சரிக்கை"

கருத்துரையிடுக