6 ஜூலை, 2010

சோஷலிசம் என்ற வார்த்தையால் உரிமை பாதிக்கப்படுகிறதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

சோஷலிசம் என்ற வார்த்தையை அரசியல் சட்ட முகப்புரையில் சேர்த்திருப்பதால் உங்களுடைய உரிமையை அது எந்தவிதத்தில் பாதித்திருக்கிறது என்று ஒரு தன்னார்வ அமைப்பை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

'சமத்துவ (சோஷலிச) மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு' என்று இந்தியாவை அதன் முகப்புரை குறிப்பிடுகிறது.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய கொள்கைகளில் முழு நம்பிக்கை இருப்பதாக உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் கட்சிகளுக்கே மத்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் தருகிறது.

இந்த நிலையில், நம்முடைய அரசியல் சட்ட முகப்புரையில் சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளைச் சேர்த்திருப்பது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, 'நல்ல நிர்வாகத்துக்கான இந்திய அறக்கட்டளை' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் கோரும் வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்தது.

சமத்துவத்தை ஏற்கிறேன் என்று அரசியல் கட்சி உறுதிமொழி ஏற்பது அந்தக் கட்சியின் உரிமையைப் பறிப்பதாகும் என்பது மனுதாரரின் வாதம். மதச்சார்பின்மை, சோஷலிசம் என்கிற வார்த்தைகளை நம்முடைய அரசியல் சட்ட முகப்புரையில் சேர்க்க உதவிய இந்திய அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தமே (1976-ல் மேற்கொள்ளப்பட்டது) கேள்விக்குரிய விஷயம். எனவே இந்த திருத்தத்தின்படியான அம்சத்தை வலியுறுத்தக் கூடாது என்பது மனுதாரரின் வாதம்.

இதைத்தவிர மனுதாரர் வேறு காரணம் எதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டாததால், மனுவைத் திருத்தி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டனர்.

இந்தியாவில் எந்த ஒரு தனி நபரும் அல்லது ஒரு குழுவும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

புதிதாக கட்சி தொடங்க நினைப்பவருக்கு சமத்துவக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் முதலாளித்துவக் கருத்துகளே பிடித்திருக்கின்றன என்றால், பதவி ஏற்கும்போது இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ள சோஷலிசக் கருத்தை ஏற்பேன், அதை அமல்படுத்த உறுதி பூணுவேன் என்று கூறினால் அது முரணாக இருக்காதா என்பதே மனுதாரரின் கேள்வியாகும்.
இந்தக் காரணத்தால் அரசியல் சட்ட திருத்தத்தையே கைவிட வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும்.

அரசியல் சட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மூல திருத்தம் சரியா, தவறா என்ற கருத்தில் இப்போது புகாமல், புதிய அரசியல் கட்சி தன்னைப் பதிவு செய்துகொள்ளும்போது இந்தக் கொள்கைகளை ஏற்கிறேன், இவற்றைப் பாதுகாக்க உறுதி கூறுகிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக பெஞ்ச் கூறியது. 42-வது திருத்தம் ஏற்கத்தக்கதா, இல்லையா என்பதை விசாரிக்கப் போவதில்லை என்றும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியிருக்கிறது.

சோஷலிசம் என்ற வார்த்தை உங்களுடைய உரிமையைப் பாதித்திருந்தால் அதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கலாம் என்றும் நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சோஷலிசம் என்ற வார்த்தையால் உரிமை பாதிக்கப்படுகிறதா? உச்ச நீதிமன்றம் கேள்வி"

கருத்துரையிடுக