7 ஜூலை, 2010

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

பெங்களூர்:கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக எல்.சி.ஏ. போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த விமானத்தை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL) தயாரித்துள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த விமானத்தை, அந்தோனி, அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு பேர் அமரக்கூடிய இந்த விமானத்தை நடப்பாண்டு இறுதியில் வானில் பறக்கவிட்டு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சிஸ்டம் இன்டகரேஷன் சோதனை, தரையில் ஓட்டுவது உள்ளிட்ட சோதனைகளைச் செய்ய உள்ளனர்.தரை சம்பந்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் இறுதிக்கட்ட சோதனை நடத்த விமானம் தயாராகிவிடும்.

இந்த இலகு ரக விமானம் முதலில் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது கடற்படைக்காகவும் முதன் முறையாக இந்த விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஆயுதங்கள், ஏவுகணைகள், கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள், கண்ணுக்கு எட்டாத தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், விமானங்களைத் தாக்கும் பாதுகாப்பு இயந்திரத் துப்பாக்கிகள், ராணுவ டேங்குகள் மீது தாக்குதல் நடத்தும் குண்டுகளை பொழிதல் போன்ற வசதிகள் உள்ளன. கடற்படையின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விமான அறிமுக விழாவில் கலந்துகொண்டு அந்தோனி பேசும்போது; "உள்நாட்டு விமானத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலகுரக விமானம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நாள் இந்திய விமானப்படைக்கும், கப்பற்படைக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்.

கப்பற்படைக்கு விமானத்தை தயாரித்து முடித்தது சாதாரண விஷயமல்ல. இதைவிட இந்த விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை பார்ப்பதுதான் மிகவும் கஷ்டமானது.

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு ஏஜென்சி(ATA), எச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ. போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இதோடு நின்றுவிடாமல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இந்த கப்பற்படை விமானத்தின் சோதனையை 4 மாதங்களுக்குள் முடித்து விமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவாவில் கடற்படை விமான மையத்தில் விமான சோதனை மையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஸ்கை ஜம்ப் எனப்படும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்கும் வசதியும் செய்யப்படும். இவை பயிற்சி மையமாக செயல்படும். இதற்கான நவீன கருவிகளை ரஷியா வழங்க உள்ளது" என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்"

கருத்துரையிடுக