புதுடெல்லி,ஜூலை31:ஜம்மு-கஷ்மீர் கொந்தளிப்பு நிலையில்தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஜூலை மாதத்துக்கான உள்துறை அமைச்சக அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்த பின், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
"காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை. தொடர்ந்து நடைபெற்ற வேலைநிறுத்தங்களால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 'நமது' மக்களுடன் பேசுவதற்கு அரசு எப்போதுமே தயாராக உள்ளது.
வெவ்வேறுவிதமான கருத்து கொண்டவர்கள்,குழுக்கள், அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயார் என பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
கஷ்மீரில் வன்முறையைத் தூண்டுவதில் சில அரசியல் கட்சிகளுக்கும் பங்குள்ளது. பிரிவினைவாதிகளின் பிடியில் கஷ்மீர் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்ரீநகர் மற்றும் சில நகரங்களில் பிரிவினைவாதிகளால் மக்கள் ஆதரவைத் திரட்ட முடிந்துள்ளது என்பது உண்மைதான்.கல்லெறி சம்பவத்தில் சிலரை ஈடுபட வைக்கவும், சில பகுதிகளில் வெற்றிகரமாக கதவடைப்பை நிகழ்த்தவும் பிரிவினைவாதிகளால் முடிந்துள்ளது. ஆனால், அதற்காக அவர்களது கட்டுப்பாட்டில் கஷ்மீர் உள்ளது என்று கூறுவது மிகையானதாகும்.
காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வர மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என நம்புவோம்" என்றார் சிதம்பரம்.

0 கருத்துகள்: on "கொந்தளிப்பு நிலையில் ஜம்மு-காஷ்மீர்: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்"
கருத்துரையிடுக