14 ஆக., 2010

கஷ்மீர்:துப்பாக்கிச்சூட்டில் மேலும் 5 பேர் பலி

ஸ்ரீநகர்,ஆக,14:கஷ்மீரில் மீண்டும் குருதி வெள்ளம். புனித ரமலானின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று ஜும்ஆத் தொழுகைக்காக சென்ற முஸ்லிம்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர். 150 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் 10-ஆம் வகுப்பு மாணவராவார். இன்னொருவர் 65 வயது முதியவர். இத்துடன் கடந்த ஜூன் மாதம் துவங்கிய கஷ்மீர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகரில் ஜும்ஆத் தொழுகைக்கு பிறகு பொதுமக்கள் நடத்திய கண்டன போராட்டத்தில் பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி ஜும்ஆ தொழுகைக்குச் சென்ற ஊர்வாசிகள் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். மஸ்ஜிதுக்கு செல்லவிருந்தவர்களை சி.ஆர்.பி.எஃப் போலீசார் தடுத்ததுதான் மோதலுக்கு காரணமானது. இதனைத் தொடர்ந்து ஊர்மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கல்வீச்சு நடந்தது.

மஸ்ஜிதுகளிலிருந்து சுதந்திரத்தைக்கோரும் முழக்கங்கள் கேட்டன. ஜும்ஆவிற்கு பிறகு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டங்கள் நடத்தினர்.

சோப்பூரில் லோக்ரிபுராவில் மக்சூத் மீரின் மகன் ஆரிஃப் மீர், மக்பூல் லோனின் மகன் ஸமீர் லோன் ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்ட இருவராவர். இருவருக்கும் 16 வயதே ஆகிறது.

குப்வாராவில் முஹம்மது அக்பர் லோன், அவருடைய மகன் முதஸ்ஸிர் அலி ஸாகர்(வயது 17), பத்தானில் அலி முஹம்மது கான்(வயது65) ஆகியோர் ஜும்ஆ தொழுகைக்கு செல்லும் வழியில் துப்பாக்கிச்சூட்டில் பலியான இதர மூவராவர்.

ரஜவ்ரியில் இன்னொரு சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். த்ரெஹ்காமில் அறுபது வயது ஜான பேகத்திற்கு துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது.

பத்தானில் கடும் காயத்துடன் ஷரஈ கஷ்மீர் மெடிக்கல் இன்ஸ்ட்யூட்டில் அனுமதிக்கப்பட்ட அலி முஹம்மது கண்டாயி சிகிட்சை பலனளிக்காமல் மரணித்துவிட்டார்.

பாதுகாப்புப் படையினர் பின் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து பாரமுல்லாவில் ஏராளமானோர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தப்பினர்.

சோப்பூரில் சி.ஆர்.பி.எஃபின் 92 பாட்டாலியன் பிரிவு எதிர்ப்பு கோஷத்துடன் மஸ்ஜிதுக்கு சென்றவர்கள் மீது எவ்வித அசம்பாவிதம் நிகழாமலேயே துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்த ஹுர்ரியத் தலைவர்களான செய்யத் அலிஷா கிலானி மற்றும் மீர்வாய்ஸ் உமர்ஃபாரூக் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கினர்.

மஸ்ஜிதுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பட்டன. ஸ்ரீநகரில் நோஹட்டா, ஸஃபாகதல், கோஜ்வாரா, ஃபதஹ் கதல், ஈத்கா, ஸரஃப் கதல், சட்டபால், நவாப் பஸார் ஆகிய இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.

நோஹட்டாவில் ஜும்ஆவிற்கு பிறகு நடந்த போராட்டத்திற்கு ஹுர்ரியத் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் தலைமைத் தாங்கினார். வார்முல், பந்திபூரா, அனந்தநாக், பல்வாமா, பத்காம், பெமினா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீதியில் இறங்கினர். வீட்டுக்காவலிருந்த மீர்வாய்ஸ் ஃபாரூக்கும், கிலானியும் மஸ்ஜிதுகளுக்குச் சென்று மக்களிடையே உரை நிகழ்த்தினர்.

மீர்வாய்ஸ் ஃபாரூக் இமாமாக பணியாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நோஹட்டா மஸ்ஜிதில் ஆயிரக்கணக்கானோர் ஜும்ஆவில் பங்கெடுக்க கூடினர். சிறுக்குழுக்களாக வீதியில் இறங்கிய இவர்கள், இந்தியா கஷ்மீரிலிருந்து வெளியேறவேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்கள் வழியில் வைத்து பாதுகாப்புப்படையினருடன் மோதினர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மக்கள் கண்டனப் பேரணியில் உரைநிகழ்த்திய மீர்வாய்ஸ் ஃபாரூக் குற்றஞ்சாட்டினார்.

பந்திப் பூராவில் ஹுர்ரியத் தலைவர் இஸ்மாயீல் ஜமீல் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்துக் கொண்டனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கறுப்பு தினம் அனுஷ்டிக்க ஹுர்ரியத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:துப்பாக்கிச்சூட்டில் மேலும் 5 பேர் பலி"

கருத்துரையிடுக